Published : 25 Jul 2016 11:42 AM
Last Updated : 25 Jul 2016 11:42 AM
விமான போக்குவரத்துச் சேவைக்கான புதிய கொள்கைகளை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளது. தவிர இந்த துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான வரம்பை சமீபத்தில் தளர்த்தியுள்ளதால் இந்தியாவுக்கு புதிய முதலீடுகளும் வர உள்ளன. இதனையொட்டி சர்வதேச விமான நிறுவனங்கள், இந்திய விமான நிறுவனங்களுடன் கூட்டு வைத்து தொழிலை விரிவாக்கம் செய்யவும் வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்நிய முதலீட்டு வரம்பை அதிகப்படுத்துவதன் மூலம் இந்திய சிறு நகரங்களுக்கிடையிலான விமான சேவையை தொடங்க வெளிநாட்டு நிறுவனங்கள் முயற்சி செய்யும் என இந்த துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர். தவிர மத்திய அரசும் சிறு நகரங்களுக்கிடையிலான விமான சேவைக்கு ஊக்கம் கொடுத்து வருகிறது. இதற்கேற்ப புதிய விமான நிலைய உருவாக்கம் போன்றவை அடுத்த அடுத்த ஆண்டுகளில் நிகழலாம். இது இந்திய விமான பயணப் போக்குவரத்துக்கு நல்ல செய்திதான். ஆனால் தற்போதைய பெரு நகர விமான நிலையங்களின் நிலைமை மோசமாக இருக்கிறதே அதை தீர்ப்பது எப்போது என்பதுதான் பில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
விமான போக்குவரத்து துறை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளுடன் ஒப்பிடும்போது விமான போக்குவரத்து துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப விமான நிலையங்கள் வளரவில்லை என்கிறது சமீபத்திய புள்ளி விவரம் ஒன்று. அதாவது இந்தியாவில் பெரு நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் தங்களது செயல்பாட்டு திறனுக்கும் அதிகமாக பயணிகளைக் கையாளுகின்றன என்கிறது அந்த புள்ளி விவரம்.
விமான நிறுவனங்கள் விமானங்களின் எண்ணிக்கையை உயர்த்துவது ஒருபக்கம் என்றால், பயணிகளின் எண்ணிக்கையும் ஆண்டுக்காண்டு உயர்ந்து வருகிறது. ஆனால் விமான நிலைய விரிவாக்கமோ மிக மெதுவாகத்தான் நடக்கிறது. விமான சேவையின் வளர்ச்சி இரட்டை இலக்கத்தை அடைந்துள்ள நிலையில், இந்தியாவின் முக்கியமான பல விமான நிலையங்களும் பயணிகளைக் கையாளுவதில் புதிய நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன.
அதுபோல விமான நிலையங்களின் வளர்ச்சியும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்கிறது அந்த ஆய்வு. இதற்கு முன்பு புதிய விமான நிறுவனங்கள் அதிகமில்லை. தற்போது பல புதிய விமான நிறுவனங்கள் உருவாகியுள்ளன. அந்நிய முதலீடு அதிகரிப்பு மற்றும் புதிய விமான போக்குவரத்து கொள்கையால் அடுத்த அடுத்த ஆண்டுகளில் இந்த நடவடிக்கைகள் அதிகரிக்கலாம்.
ஆனால் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு இந்திய விமான நிலையங்களின் கட்டமைப்பு இல்லை என்கின்றனர் இந்த துறையினர்.
இந்திய அளவில் முக்கிய விமான நிலையங்களாக மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், கோவா, லக்னோ மற்றும் கோழிக்கோடு விமான நிலையங்களில் பயணிகளின் கையாளும் திறன் மிக மோசமாக உள்ளது. தவிர பல விமான நிலையங்கள் தங்களது கையாளும் திறனில் முழு அளவையும் எட்டி விட்டன. அல்லது முழு திறனை எட்ட தயாராக உள்ளன என்று அரசு அதிகாரிகளே ஒப்புக் கொண்டுள்ளனர்.
2017 ஆண்டுக்குள் இந்தியாவில் விமான சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 கோடியை தாண்டும் என்கிறது புள்ளிவிவரங்கள். இந்த எண்ணிக்கை 2015 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 8 கோடியாக இருந்தது.
இந்த நெரிசலான விமான நிலையங்களின் வரிசையில் கோவா முன்னிலையில் உள்ளது. பயணிகள் வரத்து அதிகமுள்ள சீசன் நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் விமான நிலையம் நிரம்பி வழிகிறது. கோவா விமான நிலையம் தனது அதிகபட்ச கையாளும் திறனையும் எட்டி விட்டது. ஆண்டுக்கு 50 லட்சம் பயணிகளை கையாளும் திறன கொண்ட அந்த விமான நிலையம் இப்போது அதைத் தாண்டியும் செல்வதால் சில பயணிகள் விமானங்கள் அருகில் உள்ள விமானப் படை தளத்திலிருந்து இயக்குகிறது இந்திய விமான போக்குவரத்து ஆணையம்.
அதுபோல இந்தியாவின் பரபரப்பான தொழில் நகரமான மும்பை விமான நிலையமும் கடந்த சில ஆண்டுகளாகவே நெரிசலை சந்தித்து வருகிறது. டெல்லி விமான நிலையமும் முழு திறனை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நெரிசலான போக்குவரத்து நேரங்களில் (பீக் ஹவர்) டெல்லி விமான நிலையத்தில் விமானம் இறங்கவும் தாமதமாகிறது என்கிறார்கள்.
டெல்லி விமான நிலையத்தில் 1 வது முனையம் பட்ஜெட் விமானங்களுக்கானது. பீக் நேரங்களில் இந்த முனையம் ஸ்தம்பிக்கும் அளவுக்கு இருக்கிறது. இந்த முனையத்தின் கையாளும் திறன் ஆண்டுக்கு 1.8 கோடி பயணிகள். ஆனால் அதைத் தாண்டியும் கையாளுகிறது.
பெங்களூரு விமான நிலையம் ஆண்டுக்கு 2 கோடி பயணிகளைக் கையாளும் வகையில் கட்டப்பட்டது. ஆனால் 2015 ஆண்டிலேயே இந்த விமான நிலையம் 1.9 கோடி பயணிகளை கையாண்டுள்ளது என்கிறது புள்ளி விவரங்கள்.
ஹைதராபாத் விமான நிலையம் 1.2 கோடி பயணிகளை கையாளும் அளவுக்குத்தான் கட்டப்பட்டது. ஆனால் இந்த அளவை எப்போதோ எட்டி விட்டது. லக்னோ விமான நிலையத்தின் கையாளும் திறன் ஆண்டுக்கு 30 லட்சம்தான். ஆனால் தற்போது 35 லட்சம் பயணிகளை கையாண்டு வருகிறது. கோழிக்கோடு விமான நிலையம் தனது 25 லட்சம் பயணிகள் கையாளும் திறனை எப்போதோ எட்டி விட்டது.
பெருவாரியான முக்கிய விமான நிலையங்களில் நிலவும் நெரிசல் காரணமாக விமானங்களை ஒரு இரவுக்கு மேல் நிறுத்தி வைக்க முடியவில்லை என்கிறார்கள் விமான நிறுவனத்தினர். சில விமான நிலையங்கள் சிறிய நிறுவனங்களின் விமானங்களை நிறுத்த இடம் ஒதுக்குவதற்கு மறுக்கின்றன. ஆனால் சர்வதேச அளவிலான பெரிய விமான நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்குகின்றன. ஏனென்றால் இதன் மூலமான வருமானம் அதிகம் என்கிறார் இன்னொரு விமான நிறுவன அதிகாரி.
விமான நிலையங்களில் நிறுத்த அனுமதிக்கப்பட்டவற்றில் கிங்பிஷர் நிறுவனம் மட்டும் தற்போது வெளியேறியுள்ளது. இதர நிறுவனங்களான இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ், கோஏர், ஏர் ஏசியா போன்ற நிறுவனங்கள் தங்களது விமானங்ளையும் அதிகரித்துள்ளன. இதற்கிடையே விமான நிறுவனங்கள் புது விமானங்களை வாங்கி வருகின்றன, வாங்க திட்டமிடுகின்றன. நடப்பு நிதியாண்டில் மட்டும் இந்த விமான நிறுவனங்கள் 50 விமானங்களை வாங்க உள்ளன. இதில் இண்டிகோ 24 புதிய விமானங்களையும், ஏர் இந்தியா 20 விமானங்களையும் வாங்க உள்ளது.
ஸ்பைஸ்ஜெட் செய்தி தொடர்பாளர் இது குறித்து கூறும்போது டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களின் நெரிசல் காரணமாக விமானங்கள் தரையிறங்குவதில் தாமதமாகிறது. இதனால் எரிபொருள் கூடுதலாக செலவாகிறது. ஏற்கெனவே போட்டிகள் அதிகரித்துள்ள நிலையில் விமான நிலையங்களால் ஏற்படும் இந்த செலவினத்தை நாங்கள் பயணிகள் கட்டணத்தில் ஏற்ற முடியாது என்கிறார்.
டெல்லி சர்வதேச விமான நிலைய செயல்பாடுகளைக் கவனித்து வரும் ஜிஎம்ஆர் இன்பிரா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறும்போது டெல்லி விமான நிலையத்தின் 1 வது முனையத்தின் செயல்பாட்டு திறனை 1.8 கோடியிலிருந்து 3 கோடியாக உயர்த்துவதற்கான திட்டம் உள்ளது. அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார். மொத்த விமான நிலையத்தின் செயல்பாட்டுத் திறன் 6.2 கோடியாக உள்ளது என்றும், தற்போதைய தேவை 5 கோடிக்கும் குறைவுதான் என்று குறிப்பிட்டுள்ளார். டெல்லிக்கு மேலும் ஒரு விமான நிலையம் தேவையாக இருக்கிறது என்று விமான போக்குவரத்து அமைச்சகமே கடந்த மாதத்தில் குறிப்பிட்டுள்ளது.
அனைத்து விமான நிலையங்களின் விரிவாக்கத் திட்டங்களுமே மிக தாமதமாகத்தான் நடைபெற்று வருகின்றன. அதே சமயத்தில் இந்த விமான நிலையங்களை விரிவாக்கம் செய்வதற்கான இடப்பற்றாக்குறையும் நிலவுகிறது. இந்த சிக்கல்களுக்கு அரசு, விமான நிறுவனங்கள், விமான நிலைய நிர்வாகங்கள் மூன்று தரப்பும் ஒரே அலைவரிசையில் சிந்தித்தால் மட்டுமே தீர்க்க முடியும். இல்லையென்றால் எத்தனை வாய்ப்புகள் வந்தாலும் இந்திய விமான நிலையங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாது. தவிர இந்த சுமைகள் எல்லாமே கடைசியாக பயணிகள் தலையில்தான் இறங்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT