Published : 06 Jun 2016 11:57 AM
Last Updated : 06 Jun 2016 11:57 AM

உங்கள் பயணம் இனிதாக...

பயணக் காப்பீடு: அப்படின்னா என்ன என்று உங்களுக்கு கேட்கத் தோன்று கிறதா... உண்மைதான் இந்த காப்பீட்டின் அவசியம் குறித்து போதிய அளவுக்கு இந்தியாவில் விழிப்புணர்வு இல்லை என்றே சொல்லலாம். ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு போன்ற திட்டங்கள் எப்படி அதன் நோக்கத்தை முழுமையாக பூர்த்தி செய்கிறதோ அதைப் போல டிராவல் இன்ஷூரன்ஸ் என்கிற பயணக் காப்பீட்டுத் திட்டங்களும் நமது பயணங்களில் நண்பனாக உரிய சமயத்தில் பாதுகாப்பு அளிப்பதாக உள்ளன.

வெளிநாட்டுக்கு வேலையாக சென்ற இடத்தில் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் தொலைந்துவிட்டது. ஊருக்கு திரும்ப கையில் பணமில்லாத நிலைமையில் கலங்கி நிற்க வேண்டிய தேவையில்லை. இந்த காப்பீடு அந்த சமயத்தில் ஆபத்பாந்தவனாக உதவும்.

குடும்பத்தோடு வெளிமாநில சுற்றுலா செல்கிறோம், சென்ற இடத்தில் பணம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பை தொலைந்துவிட்டது. உணவு, உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு உடனடியாக பணம் வேண்டும். ஊருக்கு திரும்ப வருவது போன்ற வழி செலவுகளுக்கு என்ன செய்வது என குழம்பி நிற்கிறீர்கள். அந்த சமயத்தில் இந்த காப்பீடுகள் உங்களுக்கு கை கொடுக்கும்.

ஆனால் இந்தியாவைப் பொறுத்த வரை பயணக்காப்பீடு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பரவலாக சென்று சேரவில்லை என்றுதான் சொல்ல வேண் டும். அடிக்கடி வெளியூர் பயணம் மேற் கொள்பவர்கள், சுற்றுலா செல்பவர்கள், வெளிநாட்டு பயணம் போன்றவற்றுக்கு இந்த காப்பீடுகள் அவசியமான ஒன்று என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இது செலவு அல்ல

பயணத்துக்கு என்று ஏற்கெனவே நிறைய செலவு செய்துவிட்டோம், இது எதற்கு என்றுதான் தோன்றும். இரண்டு நாள் பயணத்தில் என்ன நடந்துவிடப்போகிறது என்கிற அலட்சியமும் நமக்கு இருக்கிறது. இதுதான் இந்த காப்பீடு குறித்து தெரிந்து கொள்வதற்கு தடையாக இருக் கிறது. இந்த காப்பீட்டின் முதன்மையான நோக்கம் பயணத்தின்போது திடீரென ஏற்படும் எதிர்பாராத சம்பவங்களால் பயணத்தின் சந்தோஷம் குலைந்து விடக்கூடாது என்பதுதான். தவிர பொருள் இழப்பு ஏற்படும் நிலையில் அதிலிருந்தும் நம்மை மீட்கும்.

இந்த வகைக் காப்பீடுகளில் பல வகைகள் இருந்தாலும் உள்நாட்டு பயண காப்பீடு, வெளிநாட்டு பயணக் காப்பீடு இரண்டும் முக்கியமானது. தவிர மாணவர்களுக்கு, மூத்த குடிமக்களுக்கு என தனித்தனி வசதிகள் கொண்ட காப்பீடுகள் உள்ளன.

உள்நாட்டு பயணக் காப்பீடு

இந்திய அளவில் அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்களுக்கு இந்த பாலிசி பயன்படும். அவசரக் கால மருத்துவ தேவைகள் மற்றும் இறப்பு, விபத்து போன்றவற்றுக்கு கிளைம் செய்யலாம். பயணத்தின்போது உடமைகள் மற்றும் பைகள் தொலைந்துபோவது, பயண தாமதம் மற்றும் அதனால் ஏற்படும் தனிப்பட்ட இழப்புகளையும் இதன் மூலம் ஈடு செய்து கொள்ளலாம்.

வெளிநாட்டு பயணக் காப்பீடு

சர்வதேச அளவில் தொடர்ச்சியாக பயணம் மேற்கொள்பவர்களுக்கு இது பயன்படும். பயண தாமதம் மற்றும் உடமைகள் தாமதமாக கிடைப்பதால் ஏற்படும் பொருளாதார இழப்புகள், சர்வதேச அளவிலான மருத்துவ செலவுகள் மற்றும் விமான கடத்தல், பாஸ்போர்ட் உள்ளிட்ட இதர ஆவணங்கள் தொலைந்து போனால் இந்த காப்பீடு மூலம் இழப்பீடு கோரலாம்.

நாம் பயணத்தை திட்டமிட்டு சென்ற பிறகு அந்த நாடுகளில் நிகழும் எதிர்பாராத சம்பவங்கள், திடீர் வேலை நிறுத்தங்களால் நமக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளுக்கு இந்த காப்பீடு மூலம் கிளைம் செய்ய லாம்.

பயணக் காப்பீட்டு திட்டங்களில் மேற் கண்ட இரண்டு முக்கிய காப்பீடுகளை தனிநபர்கள் தவிர, கார்ப்பரேட் நிறு வனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு எடுத்துக் கொடுத்தாலும் கிளைம் செய்து கொள்ளலாம்.

மாணவர்கள் பயணக் காப்பீடு

உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு என்றே சில சிறப்பம்சங்களைக் கொண்ட பாலிசி இது. கலை மற்றும் தொழில்பாட பிரிவுகள் சார்ந்து வெளிநாட்டுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு இது கவரேஜ் வழங்கும். கல்வியை முடிப்பதில் ஏற்படும் குறுக்கீடுகள், பாஸ்போர்ட் தொலைந்து போவது மற்றும் உடல்நலக்குறைபாடுகளால் ஏற்படும் செலவுகளை ஈடுகட்டலாம். முக்கியமாக இந்த பாலிசிகளுக்கான பேப்பர் ஒர்க் எனப்படும் நடைமுறை கள் குறைவு என்பதும் முக்கிய மானது.

மூத்த குடிமக்கள் பயணக் காப்பீடு

61 வயது முதல் 70 வயது வரையிலான மூத்த குடிமக்கள் பயணம் செய்கிறபோது இந்த காப்பீட்டை எடுத்துக் கொள்ளலாம். மூத்த குடிமக்களின் பயண அனுபவம் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்காக வடிவமைக்கப்பட்ட பாலிசி இது. இந்த பாலிசியில் பயணக் காப்பீட்டின் அனைத்து பயன்களும் கிடைக்கும் என்றாலும் கூடுதலாக கட்டணம் இல்லா மருத்துவ சேவை மற்றும் பல் மருத்துவ செலவுகளையும் இதில் கிளம் செய்து கொள்ளலாம்.

குடும்ப பயணக் காப்பீடு

மொத்த குடும்பத்துக்கும் ஒருவரே பயணக் காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். பயணம் மற்றும் பயணம் சார்ந்த அவசர காலங்களில் இந்த காப்பீடு உதவும். பயணத்தில் உள்ள குடும்பத்தினரின் மருத்துவ செலவுகள், எதிர்பாராமல் நிகழும் அசம்பாவிதங்களால் உண்டாகும் செலவுகள், பொருட்கள், உடமைகள் தொலைந்துபோவது போன்றவற்றால் ஏற்படும் இழப்புக்கும் கிளைம் செய்யலாம்.

தனிநபர் பயணக் காப்பீடு

பயணம் மற்றும் பயணம் தொடர்பாக தனிநபருக்கு மட்டும் எடுத்துக் கொள்வது. விமான ரத்து போன்றவற்றால் ஏற்படும் இழப்புகளுக்கு ஈடு செய்யலாம்.

பல பயணத்துக்கான காப்பீடு

அடிக்கடி வெளிநாட்டுக்கு பயணம் செய்பவர்களுக்கு இந்த காப்பீடு பயன்படும். ஒருமுறை காப்பீடு எடுத் தால் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு பயணத்தின்போதும் இதை பயன்படுத்த லாம். ஒவ்வொரு பயணத்தின்போதும் காப்பீடு நிறுவனத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

ஒரு முறை பயணக் காப்பீடு

ஒருமுறை மட்டும் பயணம் செய்வதற்கு இதை பயன்படுத்தலாம். இதில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சாராத செலவுகள் மற்றும் பொருட்கள் தொலைந்து போனால் கிளைம் செய்து கொள்ளலாம்.

பாலிசி பிரீமியம்

இந்த பாலிசிக்கான பிரீமியத்தொகை ஒப்பீட்டளவில் மிகவும் குறைவானது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். திட்டமிடும் மொத்த செலவில் 1 - 2 சதவீதம் அளவில்தான் இதன் பிரீமியம் இருக்கிறது. ஒருமுறை செலுத்தினால் போதும். பயணக் காப்பீட்டுக்கான பிரீமியம் என்பது அதைப் பெறுபவரின் வயது, பயண கால அளவு, செல்லும் இடம், எவ்வளவு தொகைக்கு காப்பீடு பெற விரும்புகிறார் என்பன போன்ற விஷயங்களைப் பொறுத்தது.

வெளிநாட்டு சுற்றுலாவுக்கு டிராவல் ஏஜெண்ட் மூலம்தான் ஏற்பாடு செய்வோம். அப்படி செய்கிறபோது அவர்களே பயணக் காப்பீடு பாலிசி குறித்து விளக்குவார்கள். நமது பயணம் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப காப்பீடு எடுத்துக் கொள்ளலாம்.

விழிப்புணர்வு வேண்டும்

பயணக் காப்பீட்டின் பயன்கள் அதி கம் என்கிறபோதும் அதுபற்றிய விழிப் புணர்வு பொதுமக்களிடம் குறைவாக உள்ளது. சாதாரண பயணமாக இருந்தாலும், சுற்றுலா பயணமாக இருந்தாலும் இதை எடுத்துக் கொள்வது முக்கியம். பயணத்துக்கு ஏற்பாடும் செய்யும்போதே பயணக் காப்பீட்டுக்கும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். இதை அடுத்த பயணத்தில் யோசிப்பதே ஆரோக்கியமான வழி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x