Published : 08 Aug 2016 11:07 AM
Last Updated : 08 Aug 2016 11:07 AM

சிக்கலில் பிராந்திய விமான நிறுவனங்கள்?

இரண்டு மாதங்களுக்கு முன்பு விமானபோக்குவரத்துக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டது. இதன் காரணமாக பிராந்திய விமானங்களின் எண்ணிக்கை பெருகும், போக்குவரத்து உயரும் என்றும் சொல்லப்பட்டது. உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் விமான போக்குவரத்து சந்தை இந்தியா என்றாலும் அவ்வப்போது இந்த துறை குறித்து வெளியாகும் செய்திகள் நல்ல அறிகுறிகளாக தெரியவில்லை.

கடந்த ஜூலை 18-ம் தேதி கோவையை மையமாக கொண்டு செயல்படும் ஏர்-கார்னிவெல் நிறுவனம் தனது போக்குவரத்தை தொடங்கியது ஒருபுறம் இருக்க இரண்டு பிராந்திய விமான நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் இருக்கின்றன.

பெங்களூருவை மையமாக கொண்டு செயல்படும் ஏர்பெகாசஸ் (Air Pegasus) ஜூலை 27-ம் தேதி முதல் கால வரையரையின்றி விமானங்களை ரத்து செய்தது. தொழில்நுட்ப கோளாறு என்று நிறுவனம் விளக்கம் அளித்தாலும், நிதிப்பிரச்சினைதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

விமான குத்தகை நிறுவனத்துக்கு உரிய தேதியில் ஏர்பெகாசஸ் பணம் கொடுக்கவில்லை. கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்தான் இந்த நிறுவனம் தனது போக்குவரத்தை தொடங்கியது. பெங்களூருவில் இருந்து தென் இந்திய நகரங்களான சென்னை, ஹூப்ளி, கடப்பா, மதுரை உள்ளிட்ட சில நகரங்களுக்கு மூன்று விமானங்களை இயக்கிவருகிறது.

இந்த விமானங்களை குத்தகைக்கு கொடுத்த நிறுவனம் அதற்கான பதிவினை ரத்து செய்யுமாறு விமான போக்குவரத்து ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருக்கிறது. இந்த பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும், முன்பதிவு செய்திருக்கும் பயணிகளுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்று விமான நிறுவனம் தெரிவித்திருந்தாலும், இதுவரையில் இந்த நிறுவனத்தின் போக்குவரத்து தொடங்கவில்லை. இந்த நிறுவனம் சிக்கலில் இருந்து மீண்டு வருவதற்குள் விஜயவாடாவை சேர்ந்த மற்றொரு விமான போக்குவரத்து நிறு வனமான ஏர்கோஸ்டாவும் இதேபோல சிக்கலில் தனது போக்குவரத்தை நிறுத்தி வைத்துள்ளது. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், ஜெய்ப்பூர், அகமதாபாத், திருப்பதி, கோவை, விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா ஆகிய நகரங்களுக்கு இந்நிறுவனம் விமானத்தை இயக்குகிறது.

ஏர்கோஸ்டா

ஆகஸ்ட் 4-ம் தேதி அனைத்து விமா னங்களையும் ஏர்கோஸ்டா நிறுவனம் ரத்து செய்தது. இதற்கும் நிதி நெருக்கடிதான் காரணம் என்று கூறப்படுகிறது. மூன்று விமானங்களின் குத்தகை தொகையை இந்த நிறுவனம் செலுத்தவில்லை என்பதால் விமானங்களை இயக்க முடியவில்லை.

குத்தகை நிறுவனங்களுடன் பேசி வருகிறோம். இதுவரை சம்பளம் குறித்த பிரச்சினை ஏதும் இல்லை. எங்களுடைய விரிவாக்கத் திட்டங்களில் நம்பிக்கை இருக்கிறது என்று ஏர்கோஸ்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஒரு மாதத்துக்கு ரூ.40 கோடி வரை செலவு ஆகிறது. ஆனால் 37 கோடி ரூபாய் மட்டுமே வருமானம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

அடுத்த நாள் ஆகஸ்ட் 5-ம் தேதி சில வழித்தடங்களில் விமானம் இயக்கப் பட்டது. மொத்தம் 24 பயண மார்க்கத்தில் 9 தடங்களில் மட்டுமே விமான சேவை இயக்கப்பட்டது. ஆகஸ்ட் 6-ம் தேதி ஏற்கெனவே இருக்கும் போக்குவரத்து தொடங்கப்படும் என நிறுவனம் தெரிவித் தது. இதனால் 1800 பயணிகள் பாதிக்கப் பட்டனர். அவர்கள் செலுத்திய தொகை, அல்லது மீண்டும் அதே வழித்தடத்தில் முன்பதிவு அல்லது மற்ற நிறுவனங்களில் டிக்கெட் என எதேனும் ஒரு வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

உதவ தயார்

இது குறித்து விமானபோக்குவரத்து துறை செயலாளர் ஆர்.என்.துபே கூறும்போது, இந்த இரு விமான நிறுவனங்களும் அமைச்சகத்தை அணுகவில்லை. ஒருவேளை அவர்கள் அணுகும் பட்சத்தில் என்ன தேவை, அரசால் எப்படி உதவ முடியும் என்பது குறித்து முடிவெடுக்க முடியும். மேலும் அவர்கள் தங்களுடைய தொழில்முறையை மேம்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

பிராந்திய விமான நிறுவனங்களுக்கு செலவுகள் அதிகம். செயல்பாடுகளை விரிவுபடுத்தவில்லை எனில் லாபமீட்டுவதற்கு ஏழு வருடங்கள் கூட ஆகலாம் என்று இந்த துறையின் ஆலோசகர் அனுராக் ஜெயின் கூறியிருக்கிறார்.

அதுவரை இந்த நிறுவனங்கள் சந்தையில் நிலைத்திருக்க வேண்டும்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x