Published : 29 Aug 2016 10:44 AM
Last Updated : 29 Aug 2016 10:44 AM
இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு முன்மாதிரி என்றால் நிச்சயமாக பிளிப்கார்ட் நிறுவனத்தைச் சொல்லலாம். பிளிப்கார்ட்டை தொடர்ந்து பல நிறுவனங்கள் வென்ச்சர் கேபிடல் நிதியுடன் செயல்படத் தொடங்கின. ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள் சிக்கலில் தவிக்கின்றன. சில நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன.
ஆனால் பிளிப்கார்ட், ஸ்டார்ட்அப் என்ற நிலையிலிருந்து உயர்ந்து நிறுவனமாகி விட்டது என்ற போதும் சிக்கல் இல்லாமல் இல்லை. தற்போது பல ரூபங்களில் அந்த நிறுவனத்துக்கு சிக்கல் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
மார்கன் ஸ்டான்லி மதிப்பு குறைப்பு
பிளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்த பல நிறுவனங்களில் அமெரிக்காவைச் சேர்ந்த மார்கன் ஸ்டான்லி மியூச்சுவல் பண்ட் நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் பிளிப்கார்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பை தொடர்ந்து மூன்றாவது முறையாக குறைத்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு பங்கு 142.24 டாலர் என்ற அளவில் மதிப்பிட்டிருந்தது. அப்போது நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 1,500 கோடி டாலர் இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ச்சியாக இரு முறை மதிப்புகளை குறைத்த மார்கன் ஸ்டான்லி மூன்றாவது முறையாக கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதியும் பிளிப்கார்ட் பங்குகளின் மதிப்பை குறைத்தது.
தற்போது ஒரு பங்கு 84.29 டாலர் என (ஜூன் 2016) மதிப்பிட்டிருக்கிறது. இதனால் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 900 கோடி டாலராக சரிந்துள்ளது. மார்கன் ஸ்டான்லி மட்டுமல்லாமல் அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு நிறுவனமான டி ரோவ் பிரைஸ் (T. Rowe Price) நிறுவனமும் சந்தை மதிப்பை குறைத்தது.
இதுபோன்ற முதலீட்டு நிறுவனங்கள் சந்தை மதிப்பைக் குறைப்பது பற்றி சில மாதங்களுக்கு முன்பு பேசிய பிளிப்கார்ட் தலைமைச் செயல் அதிகாரி பின்னி பன்சால் இது மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், தங்களுக்காக செய்துகொள்ளும் கணக்கீட்டு முறை. இதனால் எங்களின் நிதி திரட்டும் திட்டம் பாதிக்கப்படாது என்று கூறினார்.
நிதி திரட்டுவதில் பிரச்சினை இருக்குமா என்பதை தாண்டி, இப்போது நிதி குறைவாக இருக்கிறது என்ற செய்தியும் வெளியாகி இருக்கிறது. இதுவரை மொத்தம் 315 கோடி டாலர் அளவுக்கு இந்த நிறுவனம் நிதி திரட்டி இருக்கிறது. இப்போதைக்கு 100 கோடி டாலர் அளவுக்குதான் நிதி இருக்கிறது என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஒரு மாதத்துக்கு சுமார் 8 கோடி டாலர் அளவுக்கு செலவுகள் செய்கிறது. இந்த தகவலின் அடிப்படையில் பார்த்தால் இன்னும் ஒரு வருட காலத்துக்கு தேவையான நிதி மட்டுமே வைத்துள்ளது. இதனால் உடனடியாக நிதி திரட்டியாக வேண்டிய கட்டாயத்தில் பிளிப்கார்ட் உள்ளது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிற சூழலில் நிதி திரட்டுவது கடினமாக இருக்கக்கூடும். தவிர தேவை என்று சந்தைக்கு செல்லும் போது நிறுவனத்தின் மதிப்பை மேலும் குறைப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது. ஆனால் அடுத்த சில வருடங்களுக்கு நிறுவனத்தை நடத்துவதற்கு போதுமான நிதி உள்ளது என பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதல் இடத்தை இழந்ததா?
இ-டெய்ல் மூலம் அதிகம் விற்பனையாகும் முதல் நிறுவனமாக பிளிப்கார்ட் இருந்தது. ஆனால் மூன்று வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் தொடங்கப்பட்ட அமேசான் நிறுவனத்திடம் முதல் இடத்தை இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஜூலை மாத விற்பனை 2,000 கோடி ரூபாய்க்கு கீழ் என்றும், அமேசான் நிறுவனத்தின் ஜூலை மாத விற்பனை ரூ.2,000 கோடிக்கு மேல் என்றும் கூறப்படுகிறது. இது ஒரு மாதத்தின் விற்பனை நிலவரம் மட்டுமே. இதில் பிளிப்கார்ட் கையகப்படுத்திய மிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் விற்பனை இல்லை என்றாலும், பொதுவாக பிளிப்கார்ட்டுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடியதுதான்.
இதுவரை பிளிப்கார்ட் திரட்டிய தொகையே 315 கோடி டாலர்கள்தான். ஆனால் அமேசான் இந்தியாவில் 500 கோடி டாலர் முதலீடு செய்யப்போவதாக கடந்த ஜூன் மாதம் தெரிவித்தது. பிளிப்கார்ட் நிறுவனங்களை கையகப்படுத்தியதால் ஏற்கெனவே குறைவான நிதி இருக்கவே வாய்ப்புகள் அதிகம். இந்த நிலையில் அதிக முதலீடு செய்ய தயாராக இருக்கும் நிறுவனத்தின் போட்டியை எப்படி எதிர்கொள்ளும் என்பது கேள்விக்குறிதான்.
செயல்பாடு குறைவா?
இம்மாத தொடக்கத்தில் சுமார் 700 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது குறித்து அப்போது பேசிய நிறுவனத்தின் தலைவர் சச்சின் பன்சால், ஊழியர்களை பணி நீக்கம் செய்தது மட்டுமல்ல, தலைமைச் செயல் அதிகாரி பதவியில் இருந்து தான் விலகியதற்கும் முக்கிய காரணம் நிறுவனத்தை திறமையாக கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் என்று குறிப்பிட்டார். சரியாக வடிவமைக்க வேண்டும் இல்லை வெளியேற வேண்டும் என்று அப்போது கூறினார். அதாவது தாங்கள் நிர்ணயம் செய்த இலக்கினை அடைய முடியவில்லை என பிளிப்கார்ட் இதன் மூலம் ஒப்புக்கொண்டுள்ளது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அமேசான் வசம் சென்று விட்டார்கள் என்றும் நிறுவனர்கள் குறிப்பிட்டுள்ளனர். தங்களுடைய தவறை ஒப்புக்கொள்ளுவது சரியான பண்பாக இருந்தாலும், தொழில் சிறப்பாக நடக்கவில்லை என்பதே உண்மை.
நிர்வாகிகள் மாற்றம்!
வாடிக்கையாளர்கள் வெளியேறுவது மட்டுமல்லாமல் நிறுவனத்தின் முக்கிய தலைகளும் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். முகேஷ் பன்சால், அங்கிட் நகோரி, புனித் சோனி, மணிஷ் மகேஸ்வரி உள்ளிட்டோர் கடந்த சில மாதங்களில் வெளியேறி இருக்கின்றனர். இந்த நிலைமையில் கடந்த வாரத்தில் சில நிர்வாகிகளை பிளிப்கார்ட் மாற்றியுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் முக்கிய அதிகாரிகள் மாற்றப்படுவது இது மூன்றாவது முறை. பிளிப்கார்ட் நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளராக டைகர் குளோபல் நிறுவனத்தின் கல்யாண் கிருஷ்ணமூர்த்திக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் சிலருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் சந்தை மதிப்பு சரிவு, நிதி குறைந்து வருவது, நிதி திரட்ட வேண்டிய கடினமான வேலை, முதலீட்டாளர்களை சமாளிப்பது, போட்டியை சமாளித்து விற்பனையை உயர்த்துவது என பல
விதமான நெருக்கடிகளை ஒரே சமயத்தில் கையாள வேண்டிய சூழலில் இருக்கிறது பிளிப்கார்ட்.
‘காய்க்கிற மரம்தான் கல்லடிபடும்’ என்று இந்த விவகாரத்தை எளிதாக எடுத்துக்கொள்ள முடியுமா.? இல்லை, ‘நெருப்பில்லாமல் புகையுமா’ என்று எடுத்துக்கொள்வதா என்பது பிளிப்கார்ட்டின் அடுத்த அடுத்த செயல்பாடுகளிலிருந்துதான் தெரிந்து கொள்ள முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT