Published : 04 Jan 2016 12:17 PM
Last Updated : 04 Jan 2016 12:17 PM

ஜப்பானில் இருந்து இந்தியாவுக்கு...

தலைப்பைப் பார்த்தவுடன் எது தான் ஜப்பானிலிருந்து இங்கு வரவில்லை என்று முணுமுணுக்கத் தோன்றும். இருந்தாலும் நம்மவர்களுக்கு ஜப்பானியத் தயாரிப்புகள் மீது அலாதி பிரியம்தான். இந்தியர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஜப்பானியத் தயாரிப்புகள் கோலோச்சுவதற்கு அவற்றின் தரமே காரணம்.

இந்த வகையில் இந்தியாவில் சீறிப் பாய வருகிறது புல்லட் ரயில். இந்தியாவில் எக்ஸ்பிரஸ் ரயில்களே இன்னமும் குறித்த நேரத்திற்கு செல் வதில்லை. இந்த நிலையில் ரூ.98 ஆயிரம் கோடி முதலீட்டில் புல்லட் ரயில் தேவையா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. விவாதங்களுக்கு எப்போதுமே முடிவு கிடையாது. இதை வர்த்தக கண்ணோட்டத்தில் பார்ப்பது சிறப்பாக இருக்கும்.

இந்தியாவில் பயணிகள் ரயிலின் சராசரி வேகம் மணிக்கு 50 கிமீ முதல் 60 கிமீ வரையாக உள்ளது. சில அதிவேக ரயில்களின் வேகமோ மணிக்கு 80 கிமீ முதல் 90 கிமீ என்ற அளவில் உள்ளது. 1950-ம் ஆண்டிலிருந்து இதுதான் ரயில்களின் நிலை. அடுத்த 7 ஆண்டுகளில் அதிவேக மாகச் செல்லக்கூடிய (ஹெச்எஸ்ஆர்) புல்லட் ரயில்கள் இந்தியாவில் ஓடத் தொடங்கும். இவற்றின் வேகம் மணிக்கு 240 கிமீ. இதில் அதிகபட்சம் மணிக்கு 320 கிமீ செல்லலாம்.

நெடுஞ்சாலை திட்டப் பணிகள் மற்றும் வழக்கமான ரயில்வே திட்டப் பணிகளைக் காட்டிலும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மற்றும் புல்லட் ரயில் திட்டப் பணிகளுக்கு அதிக நிதி தேவைப்படுகிறது. இதனாலேயே ஜப்பானில் 50 ஆண்டுகளாக சீறிப் பாய்ந்து வந்தாலும், இந்தியாவில் இது கனவு ரயிலாகவே இருந்தது. ஆனால் இப்போது கனவு நனவாகப் போகிறது.

அதிக நிதி தேவைப்படும் புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதி உதவி அளிக்கும் அளவுக்கு இந்தியாவில் மிகப் பெரிய நிதி நிறுவனங்கள் இல்லை என்பதும் இதற்கு முக்கியக் காரணம். அதிலும் குறிப்பாக சலுகை அடிப்படையில் கடன் அளிப்பதற்கு உலக வங்கி போன்ற பன்னாட்டு வங்கிகளைத்தான் நம்பியாக வேண்டும்.

இப்போது கையெழுத்தாகியுள்ள புல்லட் ரயில் திட்டத்துக்கான மொத்த செலவில் 80 சதவீதத்தை ஜப்பான் 0.1 சதவீத வட்டியில் கடனாக அளிக்கும். அதுவும் முதல் 15 ஆண்டுகளுக்கு கடனைத் திருப்பிச் செலுத்தத் தேவையில்லை என்ற சலுகையையும் அளித்துள்ளது. மேலும் கடனை திரும்ப செலுத்தும் காலம் 50 ஆண்டுகளாக நிர்ணயித்துள்ளது.

முதலில் இந்த திட்டம் சாத்தியமா னதுதான். இத்தொகை திரும்பக் கிடைக்கும் என்பதால்தான் ஜப்பானும் கடன் வழங்க முன்வந்துள்ளது. 2015-ம் ஆண்டு விலைவாசி நிலவரத்தைக் கணக்கில் கொண்டு பார்த்தால் இத்திட்ட செலவு ரூ. 98 ஆயிரம் கோடி. நிர்வாக செலவு ரூ. 4,400 கோடி.

மும்பையிலிருந்து அகமதாபாத்துக்கு ஒருவருக்கு கட்டணம் ரூ. 2,700 என நிர்ணயித்தால் ஒரு கிலோமீட்டர் பயணத்துக்கான கட்டணம் ரூ. 5.20 ஆகும். இது விமான கட்டணத்தை விட குறைவாகும்.

புல்லட் ரயில் திட்டத்தை ஜப்பான் மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் புல்லட் ரயிலால் ஒரு உயிரிழப்பு சம்பவம் கூட அங்கு நிகழ்ந்ததில்லை. அத்துடன் இதுவரை ரயில் கால தாமதமானதாக சரித்திரமே இல்லை. இந்த நம்பகத் தன்மை நமக்கு கூடுதல் சாதகமான அம்சமாகும்.

அனைத்துக்கும் மேலாக இத்திட்டத் துக்கான அனைத்து பொருள்களும் இந்தியாவில் தயாராகும். இதனால் இந்தியாவில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர ரக தொழில் நிறுவனங்களுக்கு தொழில் வாய்ப்புக் கிடைக்கும். மேக் இன் இந்தியா திட்டத்தை செயல்படுத்த உள்ள மோடி அரசு இத்திட்ட செயல்பாட்டுக்கான பொருள்களில் 30 சதவீதத்தை சிறு, குறுந்தொழில் நிறுவனங்களிடமிருந்துதான் பெற வேண்டும் என உத்தரவு பிறப்பித்தால் போதுமானது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு இத்தொழில் துறையினருக்கு 5,100 கோடி டாலருக்கான தொழில் வாய்ப்புகள் இதில் உள்ளன.

இந்த நிலையில் இத்திட்டத்துக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை அளிப்பதோடு நீண்ட கால கடன் வழங்கவும் ஜப்பான் தயாராக இருக்கும்போது அத்தகைய வாய்ப்பை நழுவ விட்டால் நம்மைவிட ``சிறந்த அறிவாளி’’ வேறு யாரும் இருக்க முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x