Published : 09 Jan 2017 10:49 AM
Last Updated : 09 Jan 2017 10:49 AM
மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கு பேலன்ஸ்தான் மிகவும் முக்கியம். ஹோண்டா நிறுவனம் தாமாகவே பேலன்ஸ் செய்து கொள்ளும் தொழில்நுட்பம் கொண்ட மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் லாஸ்வேகாஸில் நடைபெறும் நுகர்வோர் மின்னணு பொருள் கண்காட்சியில் இந்த மோட்டார் சைக்கிள் இடம்பெற்றுள்ளது. குறைந்த வேகத்தில் செல்லும்போது பல சமயங்களில் நிலை தடுமாறி விபத்துகள் நேர்கின்றன. அதைத் தவிர்க்கும் பொருட்டு இந்த முன்னணி தொழில்நுட்பத்தை ஹோண்டா நிறுவனம் உருவாக்கியுள்ளது.
மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர் இல்லாமல் போனாலும் அவரின் உத்தரவுப் படி தானாக பேலன்ஸ் செய்து உரிய இடத்தில் இந்த மோட்டார் சைக்கிள் நிற்கும். பொதுவாக செல்ப் பேலன்ஸிங் தொழில்நுட்பமானது கைராஸ்கோப்பில்தான் பயன்படுத்தப்படும். ஆனால் மோட்டார் சைக்கிளில் இத்தகைய நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஹோண்டா.
பொதுவாக கைராஸ்கோப் நுட்பத்தில் எடையை ஓரிடத்தில் அதிகம் குவியும்படி அமைக்க வேண்டும். ஆனால் ஹோண்டாவில் உள்ள ரைடிங் அசிஸ்ட் நுட்பமானது முன்புற ஃபோர்க் மற்றும் ஹாண்டில் பாருடனான இணைப்பை முற்றிலுமாக துண்டித்து விடுகிறது. மிகவும் துல்லியமான ஸ்டீரிங் நுட்பம் மூலம் பைக் கீழே விழாமல் ஓட உதவுகிறது.
இதற்கு முன்பு பிஎம்டபிள்யு விஷன் நெக்ஸ் 100 சித்தாந்தத்தில் இத்தகைய நுட்பம் பின்பற்றப்பட்டது. ஆனால் பிஎம்டபிள்யூ நிறுவன மோட்டார் சைக்கிள்கள் வருவதற்கு சற்று கால தாதமம் ஆகும்போலிருக்கிறது. அதற்குள்ளாக இந்த நுட்பத்தில் தயாரான மோட்டார் சைக்கிளை காட்சிப்படுத்தியுள்ளது ஹோண்டா. மோட்டார் சைக்கிளில் இத்தகைய நுட்பம் பயன்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த ஆண்டில் பிஎம்டபிள்யு நிறுவனம்
மோட்டோராட் பைக்கில் இந்த நுட்பத்தைப் பயன்படுத்தப் போவதாக அறிவித்திருந்தது. இத்தகைய நுட்பத்தை தனது உயர் ரக மாடல்களில் மட்டுமே ஹோண்டா பயன்படுத்தும். அதாவது நிறுவனத்தின் கோல்விங் மோட்டார் சைக்கிளில் இது பயன்படுத்தப்பட உள்ளது. ரேஸ் மோட்டார் சைக்கிளில் மட்டுமே இத்தகைய நுட்பத்தை பயன்படுத்த உள்ளது ஹோண்டா. ஓட்டுநரின் செயல்பாட்டுக்கு ஏற்ப நாய் குட்டி போல ஓடிவரும் இந்த மோட்டார் சைக்கிளைப் பார்க்கும்போது ஹோண்டாவின் தொழில்நுட்பம் வியக்க வைக்கிறது. `கனவுகளின் வலிமை ஹோண்டா’ - என்ற நிறுவன வாசகம் மெய்ப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT