Last Updated : 29 May, 2017 10:58 AM

 

Published : 29 May 2017 10:58 AM
Last Updated : 29 May 2017 10:58 AM

இந்திய சாலைகளிலிருந்து விடைபெறும் ஜெனரல் மோட்டார்ஸ் கார்கள்!

செவர்லே - 1970-களின் ஆரம்பத்தில் இந்தப் பெயருக்கு இருந்த தனி மரியாதை, இந்த காரை வைத்திருந்தவர்களுக்கு இருந்த சமூக அந்தஸ்து தனிதான். ஆரம்ப காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட இந்த கார்கள், 1995-ம் ஆண்டு முதல் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டன. ஏறக்குறைய 22 ஆண்டுகள் இந்தியாவில் ஐக்கியமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் சில தினங்களுக்கு முன், இந்திய சந்தையில் தனது தயாரிப்புகளை விற்பதில்லை என்ற முடிவை அறிவித்தது.

1908-ம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்திய சந்தையில் 1928-ம் ஆண்டிலிருந்தே கிடைக்கின்றன. செவர்லே கார்கள், டிரக்குகள், பஸ்களை இந்நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வந்தது.

1954-ல் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து பெட் ஃபோர்டு டிரக்ஸ், ஆலிசன் டிரான்ஸ் மிஷன்ஸ் உள்ளிட்ட வாகனங்களைத் தயாரித்தது.

தாராளமயமாக்கலுக்கான கதவுகள் இந்தியாவில் திறக்கப்பட்டபோது ஹிந் துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் 50 சதவீத பங்குகளைக் கொண்ட கூட்டாளியாக இந்நிறுவனம் சேர்ந்தது. 1999-ல் முழுமையாக ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் வசமிருந்த பங்குகளை வாங்கி ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா என்ற பெயரில் கார்களை தயாரிக்கத் தொடங்கியது. இத்தனை ஆண்டுகளாக இந்திய சாலைகளில் வலம் வந்த ஜென ரல் மோட்டார்ஸுக்கு என்ன நேர்ந்தது?

இந்தியாவில் இருந்து வெளியேறும் இந்த முடிவுக்குப் பிரதான காரணம் சர்வதேச அளவில் அந்நிறுவனத்துக்கு ஏற்பட்ட நெருக்குதலே. இந்தியாவி லிருந்து மட்டுமல்ல தென்னாப்பிரிக்க சந்தையிலிருந்தும் வெளியேறும் நிர்பந்த சூழ்நிலை அந்நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் இந்தியாவில் உள்ள ஆலையிலிருந்து ஏற்றுமதியைத் தொடர திட்டமிட்டுள்ளது. அதேபோல நிறு வனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை செயல்படுத்துவதென்றும், உதிரிபாகங்களை தொடர்ந்து கொள் முதல் செய்வதென்றும் முடிவு செய் துள்ளது.

இந்திய சந்தை பற்றி ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் சரியாகக் கணிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. வளர்ச்சி வாய்ப்பு மிகுந்த இந்திய சந்தையில் போட்டிகளை எதிர்கொள்ளும் அளவுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது.

நீண்ட காலம் இந்தியச் சந்தையில் இருந்தபோதிலும் நிறுவன செயல்பாடு களில் அடிக்கடி மாற்றம் செய்ததும், தொலை நோக்கு திட்டம் இல்லாததுமே நிறுவன வளர்ச்சியை பின்னுக்கு இழுத்துள்ளது. 1999-ம் ஆண்டில் நூறு சதவீதப் பங்குகளைக் கொண்டிருந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு 2008-ம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச பொரு ளாதார மந்த நிலை மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் 2009-ம் ஆண்டு எஸ்ஏஐசி நிறுவனத்துக்கு 50% பங்கு களை அளித்து கூட்டாளியாக்கியது.

அமெரிக்க நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸை சர்வதேச மந்த நிலை சீன நிறுவனத்துடன் கூட்டு சேரும் நிலைக்குத் தள்ளியது. அப்போது திவால் ஆகும் சூழலுக்கு நிறுவனம் தள்ளப்பட்டது. நிலைமை சீரடைந்த பிறகு 2012-ம் ஆண்டில் சீன நிறுவனத்திட மிருந்து 43% பங்குகளை வாங்கி தனது நிலையை 93 சதவீதமாக உயர்த்திக் கொண்டது. ஆனாலும் இந்திய சந்தைக் கென பிரத்யேக உத்தி எதையும் அந்நிறு வனம் வகுக்கவில்லை. அமெரிக்க நிறு வனம் என்ற ஏகாதிபத்திய மனோபாவத் துடன் பிற நிறுவனங்களுடனான போட்டி களை அது கண்டுகொள்ளவே இல்லை.

அனைத்துக்கும் மேலாக இந்தியா வில் செயல்பட்ட 21 ஆண்டுகளில் அந்நிறுவனத்துக்கு நிலையான தலைமை இல்லை என்பது மிக முக்கியக் காரணமாகும். 9 தலைமை நிர்வாக அதிகாரிகள் இந்நிறுவனத்துக்கு மாறியுள்ளனர். ஒருவரின் அதிகபட்ச பதவிக் காலம் சராசரியாக இரண்டரை ஆண்டுக்கு மேல் நீடித்ததில்லை.

35 ஆண்டுகளாக இந்தியச் சந்தையில் ஏகபோக சக்கரவர்த்தியாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ள மாருதி சுஸுகிக்கு இதுவரை 5 தலைவர்கள்தான் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆட்டோ மொபைல் துறையைப் பொருத்தமட்டில் இது ஒரு நீண்ட தூர மாரத்தான் ஓட்டப் பந்தயமாகும். 100 மீட்டர் ஓட்டப் பந்தயம் போல இதற்கான உத்திகளை வகுக்க முடியாது. தலைமைப் பதவிக்கு வருபவர் இந்தியச் சந்தையை சரிவர புரிந்துகொள்வதற்கே ஓராண்டு போதாது. அடுத்து புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்ய எத்தனிக்கும் போது அவர் மாற்றப்படுவார். இதே நிலை அடுத்தடுத்து வந்தவர்களுக்கும் தொடர்ந்து கொண்டே இருந்தது. தலைமைப் பதவியில் இருந்த ஸ்திரமற்ற நிலையே நிறுவனம் ஆட்டம் காண போதுமானதாக இருந்தது.

அதேபோல கார்களை அறிமுகம் செய்வதிலும் உரிய கவனம் செலுத்தப் படவில்லை. முதலில் ஓபெல் கார் அறிமுகம் செய்யப்பட்டது. பிறகு செவர்லே வந்தது. அதைத் தொடர்ந்து சீன மாடல்கள் இந்தியச் சந்தைக்கு வந்தன. தயாரிப்பை அறிமுகம் செய்வது அதைத் திரும்பப் பெறுவது என்ற நிகழ்வுகள் ஜெனரல் மோட்டார்ஸின் வாடிக்கையானது. இது புதிய வாடிக்கையாளர்களை வேறு நிறுவனம் பக்கம் திரும்ப வைத்துவிட்டது.

35 நாடுகளில் கிளை பரப்பி மிகப் பெரிய ஆலமரமாகத் திகழ்ந்த ஜெனரல் மோட்டார்ஸ், இந்திய செயல்பாட்டை ஆசிய பசிபிக் பிராந்திய அலுவலகமாக செயல்படுத்தியது. இந்தியப் பிரிவின் தலைவர் பொறுப்பில் இருந்தவர் பெரும் பாலும் பல்வேறு குழுக்களில் இடம்பெற வேண்டியிருந்தது. குறிப்பாக தயாரிப்பு, உத்தி வகுப்பது, பொருள் கொள்முதல் செய்வது என அனைத்தையும் ஒருவரே கவனிக்க வேண்டியதாயிற்று.

இவை அனைத்துமே பொருள் உரு வாக்கத்தில் (கார் வடிவமைப்பு, செயல் பாடு) இவற்றில் போதிய கவனம் செலுத்த முடியாத சூழலை ஏற்படுத்தியது. ஓபெல் பிராண்டில் அஸ்ட்ரா மற்றும் கோர்சா என்ற இரண்டு மாடல்களும் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப் பட்ட போதிலும் அவை வெற்றி பெறவில்லை. இவை பெரிய ரக எஸ்யுவி போலவும் இல்லை. சிறிய ரகக் காராகவும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்டதாக, எவரது தேவையையும் சரிவர பூர்த்தி செய்யாததாக இருந்தன.

2003-ம் ஆண்டில் செவர்லே பிராண்டை இந்தியாவுக்குக் கொண்டு வந்தது. அவை ஓரளவு பிரபலமாகி வரும் வேளையில் 2012-ல் சீன பிராண்டு களை சந்தையில் களமிறக்கியது வாடிக்கையாளர்களை முகம் சுளிக்க வைத்தது.

இவை அனைத்துமே வாடிக்கை யாளர்கள் மத்தியில் நம்பகத் தன்மையை ஏற்படுத்த போதுமானதாக இருக்கவில்லை. 20 ஆண்டுகளில் இந்நிறுவனம் 20 மாடல்களை இந்தியச் சந்தையில் களமிறக்கியது இவற்றின் விலை ரூ. 3 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரையாகும். ஆனால் கார்களை அறிமுகம் செய்வது அதை உடனடியாக சந்தையிலிருந்து திரும்பப் பெறுவது போன்ற நடவடிக்கைகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியது. இதனாலேயே ஜெனரல் மோட்டார்ஸுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கவில்லை.

அதேசமயம் இந்த கார்களை தள்ளி விட நினைத்தவர்களுக்கு `செகன்ட் ஹேண்ட்’ கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களும் கிடைக்காத நிலையை இந்நிறுவனம் ஏற்படுத்திவிட்டது. நிறுவன செயல்பாட்டில் நொந்து போன விநியோகஸ்தர்களும் படிப்படியாக இந்நிறுவனத்திலிருந்து வெளியேற முடிவு செய்தனர்.

20 ஆண்டுகளுக்கும் மேலான செயல்பாட்டில் இந்நிறுவனம் இந்தியச் சந்தையில் விற்பனை செய்துள்ள கார் களின் எண்ணிக்கை வெறும் 10 லட்சம். அதேசமயம் மாருதி 35 ஆண்டுகளில் விற்பனை செய்துள்ள கார்களின் எண்ணிக்கை 1.30 கோடியாகும்.

பொதுவாக வெளிநாட்டு நிறுவனங் கள் எதிர்கொள்ளும் பிரச்சினையையும் ஜெனரல் மோட்டார்ஸ் சந்தித்தது. 2008-ல் இந்நிறுவனம் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டபோது இவற்றின் பங்குகள் பாதாளத்துக்குச் சென்றன. இந்தியா மிக முக்கியமான சந்தை என்றும் இந்தியாவில் மேலும் முதலீடுகளைச் செய்யப் போவதாக இதன் தலைவர் மேரி பாரா 2012-ல் அறிவித்தார். ஆனால் முதலீட்டாளர்கள் நிறுவனத்துக்கு அளித்த நெருக்கடி அந்நிறுவனத்தை கிட்டத்தட்ட இந்தியாவிலிருந்து வெளியேறும் சூழலுக்குத் தள்ளிவிட்டது.

பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியச் சூழலை சரிவர புரிந்து கொள்ளவில்லை என்றால் ஜெனரல் மோட்டார்ஸ் நிலைதான் ஏற்படும் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது. பிற நாடுகளில் கார் என்பது சொகுசுக்கானது. அங்கு அவர்களின் லட்சிய வாகனமாக இருக்கும். ஆனால் இந்தியாவில் எரிபொருள் சிக்கனமானதாக இருக்க வேண்டும். காரை வைத்திருப்பது பெருமை தருவதாக இருக்க வேண்டும். ஆனால் இவை எதையுமே ஜெனரல் மோட்டார்ஸ் கவனிக்கவில்லை.

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் எடுத்துள்ள இந்த முடிவால் அந்நிறு வனத்தின் 110 விற்பனையகங்களில் உள்ள 7 ஆயிரம் பணியாளர்களும் வேலையிழப்பது உறுதி. இது தவிர, ஏற்றுமதிக்கு மட்டும் கார்களை தயாரிக்கும் பட்சத்தில் ஆலையிலும் ஆள்குறைப்பு இருக்கும்.

இந்தியாவின் மொத்த கார் விற்பனைச் சந்தையில் 65 சதவீத சந்தையை மாருதியும், ஹூண்டாய் நிறுவனமும் வைத்துள்ளன. எஞ்சிய 35 சதவீதத்தில் மஹிந்திரா, டாடா, ஃபோர்டு உள்ளிட்ட நிறுவனங்களோடு போட்டியிட வேண்டிய சூழல் ஜெனரல் மோட்டார்ஸுக்கு. இதனாலேயே சிறிய கார் சந்தையில் இந்நிறுவனத் தயாரிப்புகள் ஜொலிக்கத் தவறின.

இந்தியச் சந்தையில் தொடர்வதற் கான அனுமதியைப் பெற்றுவிட்டு, வெறும் ஏற்றுமதியில் மட்டும் கவனம் செலுத்துவது சாத்தியமா? நிறுவனத் துக்கு தலைமை ஏற்கும் புதியவர்கள் இதை செயல்படுத்துவார்களா? காலம் தான் பதில் தர வேண்டும்.

- ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x