Published : 16 Jan 2017 11:58 AM
Last Updated : 16 Jan 2017 11:58 AM

உன்னால் முடியும்: சமூகத்துக்காகவும் நாம் சிந்திக்க வேண்டும்

காஞ்சிபுரம் மாவட்டம் வந்தவாசி பக்கத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி. முதலுதவி மருந்துகள் கொண்ட பெட்டி தயாரிக்கும் தொழிலில் உள்ளார். பனிரெண்டாவதுக்கு பிறகு என்ன படிப்பது எனத் தெரியாமல் பிபார்ம் படித்தேன். ஆனால் இன்று தொழிலையும் தாண்டி மக்களிடம் இது தொடர்பான விழிப்புணர்வுகளை உருவாக்கும் பணியையும் சேர்த்தே செய்கிறேன் என்று குறிப்பிடும் இவரது அனுபவம் இந்த வாரம் ``வணிக வீதி’’-யில் இடம் பெறுகிறது.

அண்ணனின் நண்பர் சொன்னதன் பேரில் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பிபார்ம் சேர்த்தனர். இந்த படிப்புக்கு உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து மூன்றாம் வருடத்தில்தான் தெரிந்து கொண்டேன். படித்துவிட்டு வெளியே வந்ததும் என் நண்பர்கள் மருந்து நிறுவன மார்க்கெட்டிங் வேலைகளுக்கும், நான் உற்பத்தி சார்ந்த நிறுவனத்திலும் வேலைக்குச் சேர்ந்தோம். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மூன்று நண்பர்கள் சேர்ந்து மருந்து விநியோக நிறுவனத்தை தொடங்கினோம்.

வேலைப் பிரிவினையால் நட்பு பாதிக் கும் என்பதால் அங்கிருந்து வெளியேறி மருந்து உற்பத்தி நிறுவனம் ஒன்றில் மார்க் கெட்டிங் வேலையில் சேர்ந்தேன். அந்த அனுபவம் நிறைய கற்றுக் கொடுத்தது. எந்த சூழலிலும் தாக்குப்பிடிக்கலாம் என்கிற நம்பிக்கையை கொடுத்ததும் மார்க்கெட்டிங் வேலைதான். இந்த நிலையில்தான் முதலுதவி பெட்டி தொழில் யோசனை எழுந்தது.

ஒரு முறை பயணத்தில் பேருந்தில் பயணி ஒருவருக்கு ஏற்பட்ட சின்ன காயத்துக்கு மருந்து வேண்டும். ஆனால் பேருந்தில் பெயருக்கு ஒரு முதலுதவி பெட்டி மட்டும் இருந்தது. அப்போதுதான் முதலுதவி துறை எவ்வளவு மோசமாக இருக்கிறது என தெரிந்தது. அதற்கு பிறகுதான் அந்த துறையில் எதாவது மாற்றம் கொண்டுவர முடியுமா என யோசிக்க தொடங்கினேன்.

ஏனென்றால் இதை பொருட்டாக எவருமே எடுத்துக் கொள்வதில்லை. கணக்கு காட்டவும், கடமைக்கே என்றும் தான் வைத்திருப்பார்கள். இந்த துறையில் முறையான நிறுவனங்களும் கிடையாது. உத்தேசமான மரப்பெட்டிகளில் சில மருந்து பொருட்கள் பேண்டேஜ்களை வைத்து முதலுதவி பெட்டிகள் என்று சில வட இந்திய நிறுவனங்கள் விற்பனை செய்து வந்தன.

இந்த தொழிலையே முறைப்படுத்தப் பட்ட வகையில் மேற்கொண்டால் வாய்ப்புகள் அதிகம் என்பதை உணர்ந்து 2009ம் ஆண்டு தனியாக தொடங்கினேன். ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள்கூட இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதை தெரிந்து கொண்டேன்.

சென்னையில் உள்ள முக்கிய கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இப்போது முதலுதவி பெட்டி சப்ளை செய்து வருகிறேன். ஆனால் 20 ரூபாய்க்கு கொடுங்கள் என்றுதான் வாங்குகிறார்கள். ஒரு நிறுவனம் முதலில் 60 ரூபாய்க்கு வாங்கியது, பிறகு செலவு குறைப்பு நடவடிக்கையாக இதையும் குறைத்தனர். இன்னொரு நிறுவனமோ எங்களது கார்களில் உலக தரமான பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன அதனால் முதலுதவி பெட்டி தேவையில்லை என மறுத்து விட்டனர்.

தற்போது கூட திருத்தப்பட்ட வாகன பாதுகாப்பு மசோதாவில் முதலுதவி பெட்டி வாகனங்களில் அவசியமில்லை என குறிப்பு உள்ளது. இதற்கு மறுப்பிருந் தால் ஆறு மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து யாரும் கவனிக்க வில்லை. இது குறித்தும் பலரிடமும் பேசி வருகிறேன். இப்படித்தான் முதலுதவி பெட்டிகள் குறித்த நிலை உள்ளது.

முதலுதவி பெட்டி என்றால் ஏதோ ஒரு சில மருந்து பொருட்களும், பேண்டேஜ்களும் கொண்ட பெட்டி மட்டுமல்ல, சுமார் 150 வகையான பொருட்கள் இருக்கிறது. பேண்டேஜ்களில் மட்டுமே பல வகை இருக்கிறது. தவிர ஒவ்வொரு நிறுவனத்துக்கும், தேவைகளுக்கும் ஏற்பவும் தயார் செய்யலாம். இப்போது என்எல்சி, கோல் இந்தியா, ஹூண்டாய், ரெனால்ட் நிறுவனங்களுக்கு தமிழக அங்கன்வாடி மையங்களுக்கும் முதலுதவி பெட்டிகளை அளித்து வருகிறேன்.

கடந்த 2 ஆண்டுகளாகத்தான் இது குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாக உணர்கிறேன்.

மருந்துகளுக்கான பெட்டிகள், பேண் டேஜ்கள், மருந்துகளையும் எங்களுக் காகவே எங்களது பிராண்டில் தயாரித்து தரும் தயாரிப்பாளர்களை உருவாக்கியுள்ளோம். தவிர இந்தியா முழுவதும் எனது பிராண்டுக்கான சந்தையை உரு வாக்கிருக்கிறேன். எனக்கு ஏற்கெனவே உற்பத்தி, மார்கெட்டிங் துறை அனுபவம் இருப்பதால் வேலைகளை எளிதாக கையாள முடிகிறது. இப்போது 35 பெண்களுக்கு வேலை வாய்ப்பை அளித்துள்ளதுடன், சமூகத்துக்கு பயனுள்ள ஒரு தயாரிப்பை வழங்குகிறோம் என்கிற திருப்தி இருக்கிறது.

எனது தயாரிப்புகள் அதிகமாக விற்க வேண்டும் என்பதைத் தாண்டி இதன் தேவைகள் அதிகம்பேருக்கு செல்ல வேண் டும் என்பதை இலக்காக வைத்துள்ளோம். சமூகத்துக்கு தேவையானதை நாம் சிந்தித்தால் சமூகம் நமக்கு தேவை யானதை அளிக்கும் என்பதை ஒவ்வொரு தொழில்முனைவோரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

தொடர்புக்கு: vanigaveedhi@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x