Published : 27 Jun 2016 10:14 AM
Last Updated : 27 Jun 2016 10:14 AM
ஒரு காலத்தில் வானொலி விற்பனைக்கு வந்தபோது அதை வாங்கக் கூட முடியாமல் பல நடுத்தர மக்கள் கஷ்டப்பட்டனர். அப்போது சுலப தவணைத்திட்டத்தை அறிமுகப்படுத்தி அனைவரும் வாங்கும் வகையில் செய்தது தனியார் நிறுவனம்.
இப்போது எந்தப் பொருள் வாங்கவும் சுலப தவணைத் திட்டங்கள் வந்துவிட்டன. கடன் அட்டை, நுகர்வு கலாச்சாரத்தை மேலும் விரிவடையச் செய்துவிட்டது. ஸ்மார்ட்போன்கள் கூட இப்போது சுலபத் தவணையில் சாத்தியமாகிவிட்டது.
அந்த வரிசையில் இப்போது பிரீமியம் பைக்குகள் இந்திய சாலைகளில் அதிக எண்ணிக்கையில் வலம் வரத் தொடங்கியுள்ளன.
இந்தியாவில் தயாராகும் உயர் ரக மோட்டார் சைக்கிளை விட வெளிநாட்டுத் தயாரிப்புகள் விலை அதிகம். அதிலும் குறிப்பாக அமெரிக்க தயாரிப்பான ஹார்லி டேவிட்சன், போலாரிஸ் உள்ளிட்டவை ஒரு சாதாரண காரின் விலையை விட அதிகம். ஆனால் இத்தகைய பிரீமியம் பைக்குகளின் விற்பனை இந்தியாவில் அதிகரித்துள்ளது.
குடும்பத்தில் கணவன், மனைவி சம்பாதிப்பது உள்ளிட்டவற்றால் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. மேலும் எளிய சுலப தவணை திட்டங்களை நிறுவனங்களே கொண்டு வந்துள்ளன.
இந்த ஆண்டு மட்டும் 10 ஆயிரம் பிரீமியம் மோட்டார் சைக்கிள்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
500 சிசி திறனுக்கு மேலான இந்த பைக்குகள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு (2012) 778 தான் விற்பனையானது. ஆனால் இந்த ஆண்டு 10 ஆயிரத்துக்கும் அதிகமாக விற்பனையாகும் என நிறுவனங்கள் கணித்துள்ளன.
மாதம் ரூ.10 ஆயிரம் தவணை செலுத்தினால் போதும் என்ற சலுகையை நிறுவனங்கள் அளிக் கின்றன. மேலும் 90 சதவீதம் கடன் வழங்கப்படுகிறது. இவையெல்லாமே விற்பனை அதிகரிப்புக்கு முக்கியக் காரணங்களாகும்.
2010-ம் ஆண்டில் சொகுசு கார்களுக்கான வரவேற்பு தொடங்கியது. அதைப் போல இப்போது சூப்பர் பைக்குகளை வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது.
பொதுவாக ரூ. 5 லட்சத்துக்கும் குறைவான பைக்குகளைக் காட்டிலும் அதைவிட விலை அதிகமுள்ள பைக்குகளை வாங்குவதில் வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுவதாக டிரையம்ப் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குநர் விமல் சும்ப்ளே தெரிவித்துள்ளார்.
கடந்த நிதி ஆண்டில் ரூ.5 லட்சத்துக்கும் மேலான விலை யுள்ள பைக்குகளே அதிகம் விற்பனையாகியுள்ளன.
ஸ்போர்ட் பைக்குகள், சாகச பைக்குள், குரூயிஸ் பைக்குகள், சாலைக்கென வடிவமைக்கப்பட்ட பைக்குகள் என பல தரப்பட்ட மோட்டார் சைக்கிள் இங்கு விற்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் அவரவர் விருப்பம் போல பைக்குகளை வாங்குகின்றனர்.
குறைந்தபட்ச சுலப தவணையாக ரூ. 8 ஆயிரம் முதல் ரூ. 9 ஆயிரம் வரை இருப்பதும் இவற்றின் விற்பனை அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகும்.
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் பெரு நகரங்களில் விற்பனையகத்தை வைத்துவிட்டு, நகர மக்கள் மட்டுமே வாங்குவர் என்று நினைக்காமல், நடமாடும் விற்பனையகம் மூலம் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்குச் செல்கிறது.
இதனால் அங்குள்ள வசதிபடைத்த, வாங்கும் திறன் கொண்ட, ஆர்வமுள்ளவர்கள் இத்தகைய மோட்டார் சைக்கிளை வாங்குகின்றனர்.
இதனால் பெரு நகரங்களுக்கு இணையாக அடுத்த நிலை நகரங்களிலும் விற்பனை பெருகியுள்ளது.
மற்றொரு அமெரிக்க நிறுவனமான டிரையம்ப் தற்போது சிறிய ரக விற்பனையகம் அமைக்கும் உத்தியைக் கையாண்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் அனைத்து பாகங்களிலும் தனது தயாரிப்பை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. விற்பனையகங்கள் இல்லாமலேயே இவற்றின் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர், டேராடூன், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்குப் பிந்தைய சேவையையும் இந்நிறுவனங்கள் அளிக்கின்றன.
விற்பனையை அதிகரிக்க நிறுவனங்கள் இப்போது பைக் பேரணி, சாகச பயணங்களுக்கு ஏற்பாடு செய்கின்றன. இதனால் இவற்றில் பங்கேற்போர் இத்தகைய மோட்டார் சைக்கிளின் திறனை கண்டு இவற்றை வாங்க பிரியப்படுகின்றனர். வாங்கும் திறன் உடைய வாடிக்கையாளருக்கு மோட்டார் சைக்கிளை ஓட்டிப் பார்க்கும் வசதியை ஏற்படுத்தித் தருகிறது ஹார்லி டேவிட்சன்.
ஐந்து ஆண்டுகளாக இந்தியாவில் விற்பனை செய்துவரும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இதுவரை 12 ஆயிரம் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. இதில் 6 ஆயிரம் பேர் குழு உறுப்பினர்களாகி, மோட்டார் சைக்கிள் பேரணிகளில் பயணிக்கின்றனர்.
அதிக விலையாக இருந்தாலும் விரும்பிய மோட்டார் சைக்கிளை வாங்கி பயன்படுத்துவதை சுலப தவணைத் திட்டம் சாத்தியமாக்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT