Published : 19 Sep 2016 11:55 AM
Last Updated : 19 Sep 2016 11:55 AM

நேரடி மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு நெருக்கடியா?

‘‘ஒருத்தன ஏமாத்தனும்னா அவன் ஆசைய தூண்டி விட்டா போதும்.., ஏமாற தயாரா இருக்கிறவங்களுக்கு நாம ஒரு வாய்ப்பு கொடுக்கிறோம்…’’ இது சதுரங்க வேட்டை திரைப்பட வசனம். இது மிகத் துல்லியமாக மக்களின் மனநிலையை கூறியது என்றால் மிகையில்லை. ஏனென்றால் அந்த அளவுக்கு தினசரி ஏதாவது ஒரு வழியில் தங்களின் பணம், பொருள், உழைப்பை எங்கோ ஒரு இடத்தில் இழந்து கொண்டே இருக்கிறார்கள் மக்கள். இன்னொரு பக்கமோ புதிது புதிதாக பல ஏமாற்று நிறுவனங்கள் உருவாகிக் கொண்டு இருக்கின்றன.

ஈமு கோழி, தேக்கு பண்ணை, நகைச் சீட்டு மோசடி என்றால் மோசடி செய்தது யார்? எவ்வளவு பாதிப்பு? யார் யார் பாதிக்கப்பட்டார்கள் என்கிற விவரங்கள் கூடுமானவரை கிடைத்து விடும். ஆனால் மக்கள் மத்தியில் மறைமுகமாக ஊடுருவியுள்ள எம்எல்எம் என்கிற மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் சுருட்டிக் கொண்டு ஓடினால் எங்குமே தெரிய வருவதில்லை. ஒரு பிரபல நிறுவனத்தின் தங்க நாணய மோசடி போல மிகப் பெரிய அளவில் நடந்த போது மட்டுமே பேசப்பட்டன. ஆனால் எப்போது பிரச்சினை வெடிக்கும் என்கிற அளவில் பல நிறுவனங்கள் மறைமுகமாக மக்கள் மத்தியில் ஊடுருவியுள்ளன.

எம்எல்எம் ஏமாற்றா?

இது போன்ற மோசடி எம்எல்எம் நிறுவ னங்கள் ஆண்டுக்காண்டு ஏமாற்றிச் செல் வதோ பல ஆயிரம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு மக்களின் ஏமாறும் தன்மையா அவர்களின் ஏமாற்றும் திறனா என்பது தொடர்ந்து பேசுபொருளாகவே இருக்கிறது. இந்தியாவில் இதற்கு வலுவான ஒழுங்குமுறை அமைப்புகள் இல்லை என்பதும் எம்எல்எம் நிறுவனங்களின் மூலதனமாக இருக்கிறது.

சமீபத்தில் நண்பர் ஒருவரைச் சந்தித்தேன் வேலை தொடர்பாக பேச்சு எழுந்தபோது அவர் ஒரு எம்எல்எம் நிறுவனத்தில் இருப்பதாகச் சொன்னார். எந்த உற்பத்தியுமில்லை, ஆனால் நல்ல சம்பளம் என்றார். சிம்பிள்தான் பாஸ். உங்களுக்கு கீழே ரெண்டு பேர உறுப்பினரா சேர்க்கணும், அவர்கள் அவங்களுக்கு கீழே ரெண்டு ரெண்டு பேர உறுப்பினர்களா சேர்க்கணும் இப்படியே ஒவ்வொருத்தரா சேர சேர உங்களுக்கு கமிஷன். நீங்க உட்கார்ந்த இடத்திலிருந்தே சம்பாதிக்கலாம் என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இன்னும் சில நிறுவனங்களோ இந்த பிரமிட் நெட்வொர்க்குடன் பொருட்களையும் சேர்த்து விற்று வருகின்றன.

ஒரு தடவை பொருட்களை வாங்கி உறுப்பினர்களாக சேர வேண்டும். இதை பிறருக்கு அறிமுகப்படுத்தி அவர்களையும் தங்களது நெட்வொர்க்கில் இணைக்க வேண்டும். அதற்குக் கமிஷன் கிடைக்கும். அப்படி இணைந்தவர்கள் தொடர்ச்சியாக இயங்கினால் அதற்கேற்பவும் முதலாமவருக்கு கமிஷன் கிடைக்கும். இந்தியாவில் தற்போது பெரும்பாலான இல்லத்தரசிகளை இந்த எம்எல்எம் நெட் வொர்க் ஆட்டிப் படைத்து வருகிறது.

நேரடி விற்பனை நிறுவனங்கள்

ஆம்வே, டப்பர்வேர், டியான்சி, ஓரி பிளேம், ஹெர்பல் லைப் போன்ற சில நிறுவனங்கள் இப்படித்தான் செயல் படுகின்றன. உறுப்பினர்கள் தங்களுக்கு கீழே பிறரை சேர்க்க முடிந்தால் கமிஷன் கிடைக்கும். முடியவில்லையா வாங்கிய பொருட்களை சொந்த உபயோகத்துக்கு வைத்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் பலரும் இணைகின்றனர். ஆனால் கிட்டத்தட்ட இந்த நிறுவனங்களும் பிரமிட் நெட்வொர்க் அடிப்படையில்தான் இயங்கி வருகின்றன. ஆனால் நேரடி விற்பனை நிறுவனங்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கின்றன.

எம்எல்எம் செயல்பாடுகள் இல்லை, பொருட்களை காசு கொடுத்துதான் வாங்குகிறார்கள் என்று இந்த நிறுவனங்கள் கூறினாலும் இவர்கள் விற்கும் பொருட்களின் விலையோ, அந்த பொருளின் அசல் மதிப்பை விடவும் பல மடங்கிற்கு விற்கப்படுகிறது. காரணம் ஆட்களை சேர்த்துவிட்டால் கமிஷன் கிடைக்கும் என்கிற உத்தரவாதம்தான். இந்த வகையில் இந்தியாவில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

விதிமுறைகள் என்ன?

ஆனால் இந்த நேரடி விற்பனை நிறுவனங்கள் அரசின் எந்த வரம்புகளுக்குள்ளும், வழிகாட்டு நெறிமுறைகளுக்குள்ளும் இல்லை. தவிர வாடிக்கையாளர்களுக்கு எழும் குறைகளைச் சரி செய்ய மேல்முறை யீட்டு வாய்ப்புகளும் இல்லாமல் இருக்கிறது. இந்த சிக்கல்களைப் போக்க சமீபத்தில் மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஏற்கெனவே இந்த நிறுவனங்களுக்கு இந்திய சட்டத்தின்படி வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டிருந்தாலும் தற்போது மாநில அரசுகளுடன் இணைந்து ஒழுங்கு முறை வழிகாட்டுதல்கள் மேற்கொள்ளப் பட உள்ளன. ஏற்கெனவே நேரடி சந்தையில் சில்லரை வர்த்தகம் செய்து வரும் இந்த நிறுவனங்கள் ஆன்லைன் சந்தையையும் குறிபார்த்து வருகின்றன. இதனால் இவற்றை ஒழுங்குமுறைப் படுத்த இந்த வழிகாட்டுதல் உதவும். மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு குறிப்புகளை அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக சமீபத்தில் பேசிய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் ஹேம் பாண்டே, நேரடி விற்பனை நிறுவ னங்களைக் கட்டுப்படுத்தவும், முறைப் படுத்தவும் சம்பந்தப்பட்ட துறையின ரோடு ஆலோசித்து இதற்கான முடிவு எட்டப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இந்தத் துறையை மேம்படுத் தவும் முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முறைப்படுத்துவதன் தேவை

ஏனென்றால் தற்போது இது போன்ற நிறுவனங்களின் உறுப்பினர்கள் பொருட் களை வாங்கிய பிறகு தங்களுக்கு தேவை யில்லை என்றால் திருப்பி அளிக்க முடியாது. அல்லது உறுப்பினராக இருக்க விருப்பமில்லை என்றால் கட் டணத்தை திரும்பி பெறவும் முடியாத நிலை உள்ளது. தவிர இந்த துறை தொடர்ந்து வளரும் துறையாக இருப்ப தால் முறைப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

சமீபத்தில் பிக்கி மற்றும் கேபிஎம்ஜி ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஒரு ஆய்வில் இது போன்ற நேரடி விற்பனைத் துறை 2025 ஆம் ஆண்டுக்குள் 800 மடங்கு வளர்ச்சி அடையும் என்று கணித் துள்ளது. அதாவது தற்போது ரூ.8,000 கோடியாக உள்ள இந்த சந்தை மதிப்பு 2025 ஆம் ஆண்டுக்குள் ரூ.64,500 கோடியாக உயரும் என்று கூறியுள்ளது. இந்திய நேரடி விற்பனையாளர்கள் கூட்ட மைப்பின் தலைவர் அமித் சத்தாவோ 2019-20 ஆம் நிதியாண்டுக்குள் நேரடி விற்பனை சந்தை ரூ.15,000 கோடி மதிப்பை கொண்டிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.

தொழில் வாய்ப்புகள்

இந்த கூட்டமைப்பினரும் அரசின் நடவடிக்கைகளை வரவேற்றுள்ளனர் என்பது முக்கியமானது. ஏனென்றால் இதில் ஒரு உறுப்பினராக உள்ள ஆம்வே நிறுவனம் 130 தினசரி உபயோகப் பொருட்களை நேரடி விற்பனை சந்தையில் வைத்துள்ளது. சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் இந்தியாவில் முதலீடு செய்துள்ளது முக்கியமானது.

எம்எல்எம் முறையில் இருந்தாலும் இந்த நேரடி விற்பனை துறை ஒரேயடி யாக மோசடி என்றும் முற்றாக தடை செய்துவிட முடியாது என்கிற நிலைமை யில் உள்ளது, ஏனென்றால் இது பல ஆயிரம் நபர்களுக்கு இந்தியாவில் பகுதி நேர வேலைவாய்ப்பை வழங்கும் தொழி லாகவும் மாறியுள்ளது. பலருக்கு மாற்று தொழிலாகவும் உள்ளது என்பதும் முக்கி யமானது. இந்த சூழலில் அரசின் நடவடிக் கைகள் மக்களுக்கும் நன்மை தர வேண் டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும்.

அனைத்துக்கும் மேலாக தாங்கள் ஒரு பொருளை மற்றவரிடம் தொடர்ந்து விற்பனை செய்ய முடியுமா? என்று இத்தகைய நிறுவனங்களில் சேர்வோர் தங்களை சுய பரிசோதனை செய்து கொண்டால், இதில் சேர்ந்து மோசம் போவோரின் எண்ணிக்கை பெருமளவு குறையும்.

கூர்ந்து கவனித்தோமாயின் இது ஒரு தொழிலே அல்ல என்பது புலப்படும். எப்படி இது செயல்பட்டாலும் இத் தொழிலில் முற்றிலுமான வெளிப்படைத் தன்மை கிடையாது என்பதே நிதர்சனம்.

நிதி மற்றும் நிறுவனங்கள் விவகார அமைச்சகம், தொழில் துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு, வருவாய் துறை, சட்டம் மற்றம் தகவல் தொடர்பு என பல அமைச்சகங்கள் சம்பந்தப்பட்ட ஒரு தொழில் முறைப்படுத்தப்படுவதுதான் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கும் நன்மை தரும்.

- maheswaran.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x