Published : 02 May 2016 12:27 PM
Last Updated : 02 May 2016 12:27 PM
ஆக்கமும் கேடும் அதனால் வருதலான் காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு (குறள்: 642) |
ஒரு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு யோசித்துப் பாருங்கள். நேற்றைய தினம் எத்தனை முறை யாருக்காவது நன்றி எனும் தாங்க்ஸ் சொல்லி இருப்பீர்கள்.
அல்லது ப்ளீஸ் என்றோ மன்னிக்கவும் என்றோ சொல்லி இருப்பீர்கள். அடடா, அவ்வளவு தானா? இவை மனித உறவுகளின் மந்திரச் சொற்களாகக் கருதப்படுபவை ஆயிற்றே!
வீடோ, அலுவலகமோ, கடையோ, கடைத்தெருவோ நாம் மனிதர்களைச் சந்திக்கும் பொழுதெல்லாம் ஏதாவது பேச வேண்டியதிருக்கிறது.
நாம் இச்சையாய்ச் செய்பவற்றில் சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் அடுத்தபடி நாமெல்லோரும் விடாமல் செய்வது இந்தப் பேச்சு தானே.
நான் அலிகரில் வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றிய போது ஒரு வித்தியாசமான அனுபவம். கிளையில் சுமார் 40 பணியாளர்கள்.
காலையில் அலுவலகம் வந்தவுடன் கிளை மேலாளரே ஒவ்வொரு பணியாளர் இருக்குமிடத்திற்கும் சென்று காலை வணக்கம் சொல்லுவார்; அதிகாரியா, கடைநிலை ஊழியரா என்று வித்தியாசம் பார்க்காமல் கை குலுக்குவார்; பெண்கள் என்றால் கை கூப்புவார்.
நலம் விசாரிப்பார். இதனால் நாள் தொடங்கும் பொழுதே நட்பான சூழ்நிலை உருவாகிவிடும்.
மேலும் அவர் எப்பவுமே யாரையாவது எதற்காவது பாராட்டிக் கொண்டே இருப்பார். ‘இந்தச் சட்டை உங்களுக்கு எடுப்பாக இருக்கிறது’ என்றும் ‘இந்த டை பிரமாதம்' என்றெல்லாம் சொன்னால் யார்தான் மகிழ மாட்டார்கள்? பெண்களென்றால் பணித்திறனைப் பாராட்டுவார்.
நாம் சொல்லும் வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல; அவை விருப்பையோ வெறுப்பையோ விதைக்கும் விதைகள்! சாக்ரடீஸ் முதல் காந்தி வரை உலகில் மனிதர்களின் மனமாற்றத்தைச் சாதித்துக் காட்டியவர்கள் எல்லோரும் எடுத்த வல்லமை மிக்க பேராயுதம் நல்ல பேச்சுதான்! ஊக்கமிக்கப் பேச்சுகளால்தானே மார்ட்டின் லூதர்கிங், ஆபிரஹாம் லிங்கன், ஜான் கென்னடி போன்றோர் வென்றனர்.
ஆக்கமும் ஊக்கமும் தரக்கூடியதுதான் பேச்சு. ஆனால் யோசிக்காமல், பின்விளைவுகளை நினைத்துப் பார்க்காமல் வார்த்தைகளை விட்டுவிட்டால் அதுவே வம்பாகவும் முடிந்து விடும். அத்வானி பாகிஸ்தானில் முகம்மது அலி ஜின்னாவைப் புகழ்ந்தபின் இந்தியாவில் என்னவாயிற்று? அமீர்கான் சகிப்புத்தன்மை குறித்துப் பேசியபின் விளக்கம் கொடுக்க நேர்ந்ததே!
ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் சமீ்பத்தில் கூறிய ஒரு கருத்தைப் படித்திருப்பீர்கள். உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி தேங்கி நிற்கும் பொழுது, இந்தியாவின் பொருளாதாரம் தனியே ஒளிர்வதாகத் தெரிந்தாலும், அது குருடர்களின் நாட்டில் ஒற்றைக் கண்ணன் அரசனாக இருப்பதற்கு ஒப்பானது என்று கூறியதும் ஆரம்பித்தது அக்கப்போர்! எவ்வளவு கெட்டிக்காரர்.
உலகின் மதிப்புமிக்கப் பொருளாதார நிபுணர்களில் ஒருவர். அவர் சொல்லியது உண்மையா இல்லையா என்பதல்ல வாதம். அவர் அவ்வாறு உவமானம் சொல்லலாமா என்று கேட்கிறார்கள் மத்திய அமைச்சர்கள். உங்கள் பதிலென்ன?
அண்ணே, அழகாய்ப் பேசுவதுடன் தவறாய்ப் புரிந்து கொள்ளாதவாறு பேசுவதும் தானே அவசியம்? சொற்கள் நன்மையும் தீமையும் தரக்கூடியவை. எனவே அவற்றில் தவறு வரக்கூடாது என்கிறார் வள்ளுவர்.
somaiah.veerappan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT