Published : 02 Jan 2017 10:47 AM
Last Updated : 02 Jan 2017 10:47 AM
இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்றழைக்கப்படும் பெங்களூரு நகரம் வாகன நெரிசலுக்கும் புகழ்பெற்றது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெருகியதைக் காட்டிலும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சாலை வசதிகளை மேம்படுத்த முடியாத அளவுக்கு கட்டிடங்கள் உள்ளதால் இங்கு பெரும்பாலான சாலைகள் ஒரு வழிப் பாதை சாலைகளாகத்தான் உள்ளன. இருந்தாலும் வாகன நெரிசல் பெங்களூர் நகரின் தீராத பிரச்சினையாக உள்ளது.
வாகன நெரிசல் பிரச்சினைக்குத் தீர்வு காண டொயோடா மொபிலிடி அறக்கட்டளை (டிஎம்எப்) சர்வதேச வள மையம் (டபிள்யூஆர்ஐ) ஆகியன இணைந்துள்ளன.
வாகன நெரிசலைக் குறைக்க ஒரே வழி பொதுப் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதுதான். இதைக் கருத்தில் கொண்டு நகரின் அனைத்துப் பகுதிகளையும் சென்றடையும் வகையில் மெட்ரோ போக்குவரத்தை உருவாக்குவதற்கு இவ்விரு அமைப்புகளும் முயன்றுள்ளன.
பெங்களூர் நகரில் மட்டும் 1.20 கோடி மக்கள் வசிக்கின்றனர். இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகராகத் திகழும் பெங்களூரு நகரில் மக்கள் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதற்கேற்ப போக்குவரத்து வசதியை செய்து தருவதற்காக பெங்களூரு நகரைச் சுற்றிலும் மெட்ரோ ரயில் வசதியை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
டொயோடா மொபிலிடி அறக்கட் டளையும், டபிள்யூஆர்ஐ அமைப்பும் இணைந்து மெட்ரோ போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதற்கான வழி வகைகளை ஆராய்ந்து வருகின்றன. இதற்காக இவ்விரு அமைப்புகளும் பல் வேறு நிறுவனங்களுடன் இணைந் துள்ளன. மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களோடு இவ்விரு அமைப்புகளும் கைகோர்த்துள்ளன. மெட்ரோ நிலையங்களிடையே ஒருங்கிணைப்பு மற்றும் அதைச் சென்றடைவதற்கான வழிவகைகளை வகுப்பதே இதன் நோக்கமாகும்.
பெங்களூரு மொபிலிடி புராஜெக்ட் எனப்படும் இத்திட்டம் டிசம்பர் 2016 முதல் மார்ச் 2018 வரை செயல்பாட்டில் இருக்கும். இரண்டு ஆண்டுகளில் இத்திட்டத்தை முழுமையாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி முதல் ஆண்டில் டிஎம்எப் மற்றும் டபிள்யூஆர்ஐ அமைப்புகள் அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் சாத்தியமான பொது போக்குவரத்து தீர்வுகளை கோரியுள்ளன. இதன்படி கடைநிலை குடிமகன்வரை நகர்ப் பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் போக்குவரத்து வசதி கிடைக்கச் செய்வதே இதன் நோக்கமாகும். அனைத்து தரப்பினரிடமிருந்தும் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பெற இவ்விரு அமைப்புகளும் திட்டமிட்டுள்ளன.
பெறப்படும் ஆலோசனைகள் மற்றும் கருத்துருக்களில் சாத்தியமானவற்றைக் கண்டறிந்து அந்தத் திட்டத்துக்கு ஆதரவாக இருக்க இவ்விரு அமைப்புகளும் முடிவு செய்துள்ளன. பெங்களூரு நகரின் போக்குவரத்து மேம்பாட்டுக்கு கிடைக்கும் வழிகள், ஆலோசனைகளைப் பொறுத்தே பிற நகரங்களிலும் இதைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT