Published : 05 Jun 2017 11:16 AM
Last Updated : 05 Jun 2017 11:16 AM
''நாட்டின் அந்தஸ்தை பறைசாற்றும் ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை’’- ஜெயந்த் சின்ஹா, விமான போக்குவரத்து இணையமைச்சர்.
''ஏர் இந்தியா நிறுவனத்துக்கு உள்ள ரூ. 50 ஆயிரம் கோடிக்கு மேலான கடனை அரசு ஏற்றுக் கொண்டால் நிறுவனம் லாபப் பாதைக்கு திரும்பி விடும்.’’
அஸ்வினி லோகானி, சிஇஓ, ஏர் இந்தியா.
''மக்களின் வரிப் பணத்தை கல்வி, சுகாதாரம் போன்றவற்றுக்கு செலவிடாமல் ஏர் இந்தியாவை சீரமைக்க செலவிடுவது வீணானது.’’ நிதி ஆயோக்.
''நாட்டின் 86 சதவீத விமான பயணிகள் சந்தை தனியார் வசம் உள்ளது. இந்நிறுவனங்களால் 100 சதவீத சந்தையைப் பிடிக்க முடியாதா?, நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா அவசியம்தானா?’’- அருண் ஜேட்லி, மத்திய நிதி அமைச்சர்.
சமீப காலமாக ஏர் இந்தியா குறித்து பல்வேறு தரப்பில் வெளியாகும் செய்திகள்தான் இவை.
ஏர் இந்தியா – இந்தப் பெயரைக் கேட்டாலே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான எண்ணம் தோன்றும். ஆனால் பெரும்பாலானவர்கள் மனதில் ரூ. 24 ஆயிரம் கோடியை விழுங்கிவிட்டு இன்னமும் தத்தளிக்கும் அரசுத் துறை நிறுவனம் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கியிருக்கும்.
நிறுவனத்தை சீரமைக்க ரயில்வே துறையில் மிகச் சிறப்பாக செயல்பட்ட அஸ்வினி லோகானியை ஏர் இந்தியா நிறுவனத்துக்கு தலைவராக நியமித்த போதிலும் நிலைமை மேம்படவில்லை. தனியார் விமான நிறுவனங்கள் லாபம் ஈட்டும் பொழுது, இந்தியாவில் 64 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஏர் இந்தியா `மகாராஜா’ நஷ்டமடைய என்னதான் காரணமாக இருக்க முடியும். கடன் சுமை அதிகரிப்புக்கு முந்தைய அரசின் தவறான அணுகுமுறைதான் காரணம் என்ற குற்றச்சாட்டை புறந்தள்ளிவிட முடியாது.
அரசுத் துறை நிறுவனத்தின் செயல்பாடுகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்திருப்பதிலிருந்தே நிர்வாகக் குளறுபடிகள் நடந்திருப்பது புலனாகும். தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் புள்ளி விவரத்துடன் கூடிய கடுமையான விமர்சனமும் நிறுவன செயல்பாட்டை வெளிச்சத்துக்குக்கொண்டு வந்துள்ளது.
ஏன் இந்த நிலை?
1932-ம் ஆண்டில் ஜேஆர்டி டாடா தொடங்கிய டாடா ஏர்லைன்ஸ் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 1947-ம் ஆண்டு மத்திய அரசு இந்நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை வாங்கியது. 1953-ல் விமான போக்குவரத்து சட்டம் இயற்றி மொத்த பங்குகளையும் அரசு வசமாக்கியது. 1971-ம் ஆண்டிலேயே அனைத்து விமானங்களையும் ஜெட் விமானமாகக் கொண்ட நிறுவனமாக ஏர் இந்தியா திகழ்ந்தது. உள்நாட்டு சேவைக்கு இந்தியன் ஏர்லைன்ஸும், வெளிநாட்டு சேவைக்கு ஏர் இந்தியா நிறுவனமும் உருவாக்கப்பட்டன.
2000-வது ஆண்டிலேயே இந்நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் 2005-ம் ஆண்டு வரை ஓரளவு லாபம் ஈட்டும் நிறுவனமாகத்தான் இருந்தது. 2007-ம் ஆண்டில் ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் ஆகியன இணைக்கப்பட்ட பிறகு நஷ்டம் தொடங்கியது. 2006-07-ம் நிதி ஆண்டில் ரூ. 700 கோடி நஷ்டத்தை சந்தித்தது. 2009-ம் ஆண்டில் இது ரூ. 7,200 கோடியாக உயர்ந்தது. கடன் சுமையைக் குறைக்க 4 விமானங்களை விற்றது ஏர் இந்தியா. இதன் மூலம் ரூ. 187 கோடி திரட்டியது. 2011-ம் ஆண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த கடன் சுமை ரூ. 42,600 கோடியானது.
மிகமோசமான நிதி நிலை இருந்தபோது 111 விமானங்களை வாங்கும் முடிவை எடுத்தது தவறான நடவடிக்கை என்று தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். குத்தகை அடிப்படையில் ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்பட்டவரை பிரச்சினை இல்லை. அதிக எண்ணிக்கையிலான விமானங்களை விலை கொடுத்து வாங்க முடிவு செய்ததிலிருந்துதான் நஷ்டம் ஆரம்பமானது.
2006 ஆண்டில் 111 விமானங்களை ரூ. 70 ஆயிரம் கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விமானம் சொந்தமாக வாங்கியதோடு லாபகரமான விமான மார்க்கங்களை விட்டுக் கொடுத்தது. இந்த பகுதியில் தனியார் விமானங்களை இயக்கி லாபம் சம்பாதித்தனர். ஆனால் ஏர் இந்தியாவோ பயணிகள் அடர்வு குறைவான பகுதிகளுக்கு விமானத்தை வெறுமனே இயக்கி நஷ்டத்தை எதிர்கொண்டது.
எந்தெந்த பகுதியில் எத்தனை விமானங்களை இயக்குவது என்ற திட்டமே போடாமல் விமானங்களை வாங்க ஆர்டர் அளித்தது, பயணிகளின் அடர்வுக்கேற்ப படிப்படியாக விமான சேவையை விரிவுபடுத்தாமல் அதிக எண்ணிக்கையிலான விமானங்களுக்கு ஆர்டர் அளித்ததும் சரிவுப் பாதைக்கு வழிவகுத்தது.
2013-ம் ஆண்டில் அப்போது விமான போக்குவரத்து அமைச்சராக இருந்த அஜீத் சிங், இதை தனியார் மயமாக்குவது ஒன்றுதான் தீர்வு என்றார். ஆனால் அதற்கு பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 2013-ம் ஆண்டிலிருந்து அடுத்த 8 ஆண்டுகளில் ஏர் இந்தியாவுக்கு ரூ. 30 ஆயிரம் கோடியை அளிப்பதென முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்காக நிர்ணயிக்கப்பட்ட மீட்பு இலக்கை இந்நிறுவனம் எட்டவேயில்லை. சொத்துகளை விற்று ஆண்டுக்கு ரூ. 500 கோடி திரட்ட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் நான்கு ஆண்டுகளில் திரட்டிய தொகை வெறும் ரூ. 64 கோடி மட்டுமே.
அஸ்வினி லோகானி பொறுப்பேற்ற பிறகு 2015-16ம் நிதி ஆண்டில் நிறுவனம் ரூ.105 கோடியை செயல்பாட்டு லாபமாக ஈட்டியது. ஆனால் கடன் சுமையைத் தள்ளுபடி செய்யாமல் நிறுவனத்தை லாபப் பாதைக்கு கொண்டு வர முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார் லோகானி. விற்கலாம் என்ற முடிவுக்கு அரசு வந்துவிட்டாலும் இதை யார் வாங்குவார் என்ற கேள்வியும் எழாமலில்லை.
கடன் சுமை முழுவதையும் அரசு ஏற்றுக் கொண்டாலும், ஊழியர்கள் பலருக்கு வேலையிருக்காது. ஆக கடன் சுமையை ஏற்றுக் கொள்வதோடு, ஊழியர்களுக்கு மாற்று பணிக்கான உத்தரவாதமும் அரசு அளித்தால் மட்டுமே இதை வாங்க நிறுவனங்கள் முன்வரும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
போட்டியிட முடியாத பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் முடிவை தடுக்க முடியாது. தாராளமயமாக்கல் மற்றும் பொருளாதார சூழலில் இது தவிர்க்க முடியாதது. அதேசமயம் ஏர் இந்தியாவைத் தொடர்ந்து தொலைத் தொடர்புத்துறையில் நஷ்டத்தில் இயங்கும் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களும் தனியார் வசமாகலாம்.
சிபிஐ வழக்கு
ஏர் இந்தியா நிறுவனம் ரூ. 100 கோடி லாபம் ஈட்டியபோது ரூ. 70 ஆயிரம் கோடிக்கு விமானங்களை வாங்க வேண்டிய அவசியம் குறித்து சிபிஐ விசாரிக்க உள்ளது. பயணிகள் அடர்வு இல்லாத பகுதிகளில் விமானங்களை இயக்கியதையும் சிபிஐ தனது குற்றச்சாட்டில் பதிவு செய்துள்ளது. தகுதியான பைலட்டுகள் இல்லாத போது விலை உயர்ந்த 15 விமானங்களை ஏர் இந்தியா குத்தகைக்கு எடுத்தது ஏன் என்ற கேள்விக்கும் சிபிஐ விசாரணை விடை அளிக்கலாம்.
2006-ம் ஆண்டு நான்கு போயிங் 777 ரக விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது. ஆனால் 2007 ஜூலை மாதத்தில் ஏற்கெனவே ஆர்டர் கொடுத்திருந்த புதிய விமானங்கள் ஏர் இந்தியா வசம் வந்தன. இதனால் ஐந்து போயிங் 777 மற்றும் ஐந்து போயிங் 737 விமானங்களை வெறுமனே நிறுத்தி வைத்தது. இதனால் ஏற்பட்ட நஷ்டம் மட்டுமே ரூ.840 கோடியாகும்.
அனைத்துக்கும் மேலாக உள்ளூர் சந்தையில் லாபகரமான மார்க்கங்களை தனியாருக்கு விட்டுக் கொடுத்ததைப் போல சர்வதேச நிறுவனங்களுக்கும் கணக்கிலடங்கா சேவை அளிக்க அனுமதித்தது. இதனால் பிரதிபலன் ஒப்பந்தம் எதையும் ஏர் இந்தியா செய்யவில்லை. எவ்வளவு பிரச்சினை இருந்தாலும், பணியாளர்கள் தங்களது குடும்பத்துடன் உயர் வகுப்பில் பயணம் செய்வதை நிறுத்தவேயில்லை. பணியாளர்களுக்காக, பணம் கொடுத்து டிக்கெட் வாங்க முன்வந்த பயணிகளுக்கு டிக்கெட் மறுக்கப்பட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
எதிர்க்கட்சியாக இருந்தபோது ஏர் இந்தியா நிறுவன பங்குகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக, இப்போது விற்பனை செய்வதற்கு என்ன விளக்கம் தர முடியும். அரசியலைக் கடந்த சில நிஜங்கள் உள்ளன. அதை அரசியல்வாதிகளும், பொது மக்களும், பொதுத்துறை நிறுவன அதிகாரிகளும் உணர வேண்டியது கட்டாயம்.
வானம் தொட்டுவிடும் தூரம்தான். ஆனால் வானத்தில் பறக்கும் ஏர் இந்தியாவுக்கு வானம் வசமாகாதது துரதிர்ஷ்டம்தான்.
-ramesh. m@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT