Published : 26 Jun 2017 11:04 AM
Last Updated : 26 Jun 2017 11:04 AM
கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் `கோனா’ என்ற பெயரில் புதிய எஸ்யுவி ரக காரை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதை சர்வதேச அளவில் அறிமுகப்படுத்த இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
எஸ்யுவி மாடல் கார்களான ஹூண்டாய் டக்ஸன், சான்டா எப்இ ஆகிய மாடல்களை தொடர்ந்து கிரெடா அறிமுகமானது. தற்போது கோனா என்ற பெயரில் புதிய மாடலை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவின் ஹூவாய் தீவுகளில் மிகப் பெரிய தீவுப் பகுதி கோனா என்றழைக்கப்படுகிறது. இந்த கோனா தீவுப் பிராந்திய மக்கள் பெரும்பாலும் சாகசப் பிரியர்களாக உள்ளனர். அதிலும் குறிப்பாக பயணங்களில் அதிக நாட்டமுடையவர்கள். மிகவும் சுறுசுறுப்பானவர்களைக் கொண்டதாக இத்தீவுப் பிராந்தியம் கருதப்படுகிறது. புத்தாக்கத்தை விரும்பும் மக்களைப் போற்றும் விதமாக தனது புதிய தயாரிப்புக்கு கோனா என பெயர் சூட்டியுள்ளது ஹூண்டாய்.
கார் ஓட்டுவதில் மேம்பட்ட அனுபவத்தை அளிக்கும் விதமாக இப்புதிய கார் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நகர் பகுதிகளில் வாகன நெரிசல் மிகுந்த சாலைகளில் ஓட்டுவதற்கு ஏற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்போர்ட், நார்மல், எகோ என மூன்று விதமான ஓட்டும் வசதிகள் இதில் உள்ளன. அதிவேக திறன் வெளிப்பாடு, கியர் மாற்றுவதில் லகுவான தன்மை ஆகியன எத்தகைய சூழல்களிலும் இந்தக் காரை ஓட்டுவதற்கு ஏற்ற தன்மையை உருவாக்கும்.
இந்தக் காரில் உள்ள ரேடார் சிஸ்டம், டிரைவர் கண்களுக்கு தெரியாத சூழல் காரணமாக, விபத்து உருவாவதை எச்சரிக்கும் (பிசிடபிள்யூ) வசதி உள்ளது. இது அதிக வேகத்தில் செல்லும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல வாகனத்தை பின்புறம் இயக்கும்போது இடிப்பது போன்ற சூழல் உருவானால் அதை எச்சரிக்கும் (ஆர்சிசிடபிள்யூ) அமைப்பும் இதில் உள்ளது.
இதில் உள்ள எப்சிஏ என்பது முன்புறத்தில் விபத்து ஏற்படுவதைத் தடுக்கும் அமைப்பாகும். இதற்கு காரின் முன் பகுதியில் உள்ள கேமரா மற்றும் ரேடார் ஆகியன விபத்தை தடுக்கும் எச்சரிக்கையை உணர்த்தும். அத்துடன் பிரேக் தானியங்கி முறையில் செயல்பட்டு காரை நிறுத்திவிடும்.
இதேபோல இதில் லேன் கீப்பிங் அசிஸ்ட் எனும் கார் செல்லும் பாதையை கணித்து அதிலிருந்து மாறாமல் செல்ல உதவும் நுட்பம், உயர் ஒளி உமிழ் வசதி மற்றும் ஓட்டுநர் எச்சரிக்கும் கருவி ஆகியன இதில் உள்ள சிறம்பம்சங்களாகும்.
கார் ஓட்டுபவரின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் வகையிலும், சக பயணிகள் மற்றும் சாலையைப் பயன்படுத்தும் பிற வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு அம்சங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் தங்கள் காருக்குப் பயன்படுத்தும் ஸ்டீலை, தங்கள் நிறுவனமே தயாரித்துக் கொள்வதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள உயர் நுட்ப ஸ்டீல் 51 சதவீதம் கூடுதல் வலுமிக்கது. இதனால் பயணிகள் பாதுகாப்பு உத்தரவாதமாகிறது.
இந்தக் காரின் வடிவமைப்பானது இதன் உறுதித் தன்மையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. சற்றே தாழ்ந்த அதேசமயம் அகலமான தோற்றம் மிகச் சிறப்பான வடிவமைப்பை வெளிப்படுத்துகிறது. இது அதிக வேகத்தில் செல்லும்போதுகூட சொகுசான பயணத்தை உறுதி செய்கிறது.
இம்மாத இறுதியில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகிறது. இந்தக் கார் வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் முதல் கட்டமாக அறிமுகமாகிறது.
இந்தக் காரின் நீளம் 4,165 மி.மீ ஆகும். இந்தியாவில் இது அறிமுகமாகும்போது இதன் நீளம் 4 மீட்டராகக் குறைக்கப்படலாம். ஏனெனில் 4 மீட்டருக்கும் அதிகமான கார்களுக்கு கூடுதல் உற்பத்தி வரி செலுத்த வேண்டியிருக்கும்.
கார் விற்பனையில் மாருதிக்கு அடுத்த நிலையில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனை அதிகரிப்புக்கு கோனா நிச்சயம் உதவும் என நம்பலாம்.
- ramesh. m@thehindutamil. co. in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT