Published : 23 Jan 2017 11:37 AM
Last Updated : 23 Jan 2017 11:37 AM
பேட்டரி வாகனங்களில் மிகவும் முக்கியமானது அதில் உள்ள பேட்டரிதான். மின் சக்தியை விரைவாக உள்வாங்கி நீண்ட நேரம் செயல்படுத்தக்கூடிய பேட்டரிகள்தான் பேட்டரி வாகனங்களுக்கு மிகவும் பிரதானம். நீண்ட செயல்திறன் கொண்ட பேட்டரிகளுக்கு வெளிநாடுகளைத்தான் நம்பியுள்ளது இந்திய ஆட்டோமொபைல் துறை. ஆனால் இந்த நிலை விரைவில் மாறும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) நீண்ட கால ஆராய்ச்சியின் முடிவில் லித்தியம் அயன் பேட்டரிகளை தயாரித்துள்ளது. தனது செயற்கைக் கோள்களில் இத்தகைய பேட்டரிகளைத்தான் அது பயன்படுத்துகிறது. இத்தகைய பேட்டரிகளை வாகனங்களில் பயன்படுத்துவதற்காக இந்திய ஆட்டோமோடிவ் ஆய்வு மையம் (ஏஆர்ஏஐ) தற்போது இஸ்ரோவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் பலனாக செயற்கைக் கோள்களில் பயன்படுத்தும் நீண்ட செயல்திறன் மிக்க லித்தியம் அயன் பேட்டரிகளை மோட்டார் வாகனங்களில் பொறுத்தி செயல்படுத்துவதற்கான வழிவகைகளை ஏஆர்ஏஐ மற்றும் இஸ்ரோ இணைந்து மேற்கொள்ள உள்ளன. இந்த கூட்டு முயற்சி வெற்றி பெற்றால் அது பேட்டரி மோட்டார் வாகன செயல்பாட்டில் புதிய மைல் கல்லாக அமையும்.
முதல் கட்டமாக இஸ்ரோ உருவாக்கியுள்ள பேட்டரியில் செயல்படும் இருசக்கர வாகனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதை சமீபத்தில் மத்திய தரைவழிப் போக்குவரத்துத்துறை செயலர் சஞ்சய் மித்ரா பார்வையிட்டு இதன் செயல்பாடுகளைக் கேட்டறிந்தார். இப்போது இந்த வாகனம் ஏஆர்ஏஐ வளாகத்தில் சோதித்துப் பார்க்கப்படுகிறது.
விண்வெளித்துறையில் பயன் படுத்தப்பட்டு வரும் பேட்டரி தொழில்நுட்பம் ஆட்டோமொபைல் துறையில் செயல்படுத்தப்பட்டால் அது முன்னோடியாக அமையும் என்று சஞ்சய் மித்ரா குறிப்பிட்டுள்ளார்.
இந்த பேட்டரியின் செயல்பாடு, இது பொறுத்தப்பட்ட வாகனங்கள் சாலைகளில் எவ்விதம் செயல்படும், பல்வேறு கால நிலைகளில் இதன் தன்மை, சார்ஜ் ஏறும் நேரம், மின்சாரத்தை தக்கவைத்துக் கொள்ளும் நேரம் ஆகியவற்றை ஆய்வு செய்து வருவதாக ஏஆர்ஏஐ ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார்
விண்வெளித்துறையில் பயன் படுத்தப்படும் பேட்டரி, விலை அதிகமாக இருந்தாலும் நீடித்து உழைக்க வேண்டும் என்பதுதான் பிரதானமாக இருக்கும். ஆனால் ஆட்டோமொபைல் துறையில் அது கட்டுப்படியாகும் விலையில் இருந்தால் மட்டுமே வெற்றிகரமான தயாரிப்பாக இருக்கும் என்று பாண்டே சுட்டிக் காட்டியுள்ளார்.
48 வோல்ட் 50 ஆம்பியர் திறன் கொண்ட பேட்டரியை சார்ஜ் செய்ய 2 மணி நேரமாகியது. இது பொறுத்தப்பட்ட வாகனம் 90 கி.மீ. தூரம் ஓடியுள்ளது.
சார்ஜ் ஆகும் நேரத்தைக் குறைப்பது அதாவது ஒரு மணி நேரத்திற்குள்ளாக சார்ஜ் ஆகும்படி இதில் மாற்றங்கள் செய்தால் ஒரு மணி நேர பயணத்துக்கு 20 காசுகளிலிருந்து 30 காசுகள் வரைதான் செலவாகும். இந்த வாகனம் மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ. வேகத்தில் ஓடியுள்ளது. நகர போக்குவரத்துக்கு இது போதுமானது.
விண்வெளியில் சாதனைகள் புரிந்து வரும் இஸ்ரோவுடனான ஒப்பந்தம் சாலைகளிலும் பேட்டரி வாகனப் புரட்சிக்கு வித்திடும் என்று நிச்சயம் நம்பலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT