Published : 15 Aug 2016 02:51 PM
Last Updated : 15 Aug 2016 02:51 PM
பொருளாதார சீர்த்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு கால் நூற்றாண்டு முடிவடைந்தது விட்டது. இந்த காலத்தில் பொருளாதாரத்தில் பல மாற்றங்கள் நடந்துள்ளன. அந்த மாற்றங்களை பல கருவிகளைக் கொண்டு அளக்கலாம். அதில் பங்குச்சந்தை குறியீடுகளும் ஒன்று. இந்த இடைப்பட்ட காலத்தில் பிஎஸ்இ குறியீடான சென்செக்ஸில் பல மாற்றங்கள் நடந்திருக்கின்றன.
சென்செக்ஸ் பட்டியலில் 30 பங்குகள் மட்டுமே இருக்க முடியும். 1992 இருந்த 30 பங்குகளில் இப்போது ஏழு பங்குகள் மட்டுமே சென்செக்ஸ் பட்டியலில் நிலைத்திருக்கின்றன.
5,000க்கும் மேற்பட்ட பங்குகள் இருந்தாலும், தரமான 30 பங்குகள் மட்டுமே சென்செக்ஸ் பட்டியலில் இணைய முடியும். தற்போதைய சென்செக்ஸ் பட்டியலையும் 1992-ம் ஆண்டு சென்செக்ஸ் பட்டியலையும் ஒப்பிடும் போது ஐடிசி, லார்சன் அண்ட் டூப்ரோ, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனப் பங்குகள் மட்டுமே நிலைத்திருக்கின்றன.
அப்போதைய பட்டியலில் ஒரு தொழில்நுட்ப பங்கு கூட இடம்பெற வில்லை. (இன்போசிஸ் நிறுவனம் 93-ம் ஆண்டு ஐபிஓ வெளியிட்டது. டிசிஎஸ் 2004-ம் ஆண்டு ஐபிஓ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது) அப்போதைய பட்டியலில் 30-ல் 27 பங்குகள் உற்பத்தி துறை சார்ந்தவையாகவே இருந்தன. மேலும் நெஸ்லே, சீமென்ஸ், கிளாக்ஸோஸ்மித்கிளைன் பார்மா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவன பங்குகள் அந்த பட்டியலில் இருந்தன.
அப்போது பொதுத்துறை நிறுவனப் பங்குகள் இந்த பட்டியலில் இல்லாதது ஆச்சர்யம் இல்லை. அப்போது அந்த நிறுவனங்களின் முக்கிய இலக்கு லாபம் ஈட்டுவது கிடையாது. தவிர அப்போதுதான் அந்த நிறுவனங்கள் வளர்ந்து வந்தன. ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் லாபம் சரிந்து வந்தாலும், அந்த பங்கும் பட்டியலில் இருந்தது. 1992-ம் ஆண்டுக்கு பிறகு ஜெனித் பிர்லா, முகந்த் மற்றும் கிரேட் ஈஸ்டர்ன் ஷிப்பிங் ஆகிய நிறுவனங்கள் வெளியேறின.
தற்போதைய பட்டியலில் 4 பங்குகள் வங்கித்துறையைச் சேர்ந்தவை ஆகும். ஆனால் 25 வருடங்களுக்கு முன்பு வங்கித்துறை பங்குகள் ஏதும் இல்லை. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 1995-ம் ஆண்டுதான் பட்டியலிடப்பட்டது. அதேபோல ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை 1990களின் மத்தியில் தொடங்கப்பட்டவை ஆகும்.
செயல்பாடு என்ன?
1992-ம் ஆண்டு டாடா குழுமத்தை சேர்ந்த நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தின. டாடா ஸ்டீல் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் விற்பனையில் முதல் இடங்களில் இருந்தன. இப்போது 17வது மற்றும் 14-வது இடங்களில் உள்ளன.
1992-ம் ஆண்டு டாடா ஸ்டீல் அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக இருந்தது. இரண்டாம் இடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மூன்றாம் இடத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இருந்தது. ஆனால் இப்போது டிசிஎஸ் நிறுவனம் முதல் இடத்தில் இருக்கிறது. அதே சமயத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தொடர்ந்து இரண்டாம் இடத்தை தக்கவைத்து வருகிறது.
1992-ம் ஆண்டில் லாப வரம்பு அடிப்படையில் பார்க்கும் போது ஜிஇ ஷிப்பிங் 51 சதவீதமும், டாடா பவர் நிறுவனத்தின் செயல்பாட்டு வரம்பு 36 சதவீதமாகவும் இருந்தன.
மத்திய அரசின் விலை நிர்ணயம் காரணமாக இந்திய உற்பத்தி நிறுவனங்களாக டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், செஞ்சூரி டெக்ஸ்டைல்ஸ், முகந்த் ஆகிய நிறுவனங்களின் ஆர்ஓசிஇ (return on capital employed) 10 சதவீதத்துக்கு குறைவாக இருந்தன.
ஐடிசி நிறுவனத்தின் வருமானத்தில் பெரும்பங்கு சிகரெட் விற்பனை மூலம் வந்தது. அந்த நிறுவனத்தின் நிகர லாப வரம்பு 31 சதவீதமாக இருந்தது. அப்போது அனைத்து பன்னாட்டு நிறு வனங்களின் லாப வரம்பும் நன்றாக இருந்தன. விரிவாக்கப்பணிகளுக்காக கடன் வாங்கியது அந்த நிறுவனங் களுக்கு சாதகமாக அமையவில்லை.
25 வருடங்களுக்கு முன்பு வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்ப பங்குகள் இல்லை. அதேபோல 25 வருடங்களுக்கு பிறகு எந்த புதிய துறை சென்செக்ஸ் பட்டியலில் இருக்கும்? தற்போதைய பங்குகள் எத்தனை பங்குகள் நிலைத் திருக்கும்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT