Published : 15 May 2017 10:52 AM
Last Updated : 15 May 2017 10:52 AM
பாகுபலி இரண்டாம் பாகம் பார்த்து விட்டீர்களா? மகிழ்மதி நாட்டின் வானளாவிய கட்டிடங் களையும், அளப்பரிய சேனைகளையும் கண்டு மலைத்தீர்களா? அமரேந்திர பாகுபலியின் வலிமை யையும், வீரத்தையும், தேவசேனையின் நளினத்தையும், கம்பீரத்தையும் ரசித்தீர்களா?
அவர்கள் அணிந்திருந்த அழகிய ஆடைகளையும் நேர்த்தியான நகை களையும் பார்க்கும் பொழுது இப்படி ஒரு வளமான நாட்டில் நாம் வாழக் கூடாதா என ஏங்கினீர்களா? அட, இது என்னங்க அநியாயம்? அதே நாட்டில் தானே நாம் இன்று வாழ்கிறோம்!
என்ன, சில நூற்றாண்டுகள் கழித்துப் பிறந்து விட்டோம்!
பாருக்குள்ளே நல்ல நாடாகத்தான் இருந்திருக்கிறதுங்க நம் நாடு! என்ன, அந்தக்காலத்தில் தொலைத் தொடர்பு சாதனங்கள் இல்லை, கைபேசி இல்லை, மின்சாரம் இல்லை! ஆனால் மிகப் பெரிய ராஜ்ஜியங்கள் இருந்துள்ளன. கோட்டை கொத்தளங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
வரி வசூலும், நீதி பரிபாலனமும் சிறப்பாக நடந்துள்ளன. மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்துள்ளார்கள்! அப்படியென்றால் சிறந்த நிர்வாகம், மேலாண்மை இருந்துள்ளது என்று தானே பொருள்? அண்ணே, அப்ப இருந்த அரசாட்சி முறை வித்தியாசமானது. அரசனிடம்தான் எல்லா அதிகாரமும்! சட்டமியற்றுவதற்கும் (Legislation) நடைமுறைப் படுத்துவதுவதற்கும் (Execution) அவற்றில் தவறுகள் நடந்தால் நியாயம் வழங்குவதற்கும் (Judiciary) அரசனே தலைவன், உச்ச அதிகாரம் பெற்றவன்!
சாதாரணமாக ஓர் அரசனுக்குத் தேவை விவேகமும் வீரமும்.ஆனால் ஒரே ஆள் எப்படி பல விசயங்களில் நிபுணத்துவம் பெற்றிருக்க முடியும்? அங்கேதான் மந்திரிகளின்.. நான் சொல்வது.. அந்தக் கால மந்திரிகளின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது! அறிவிலும், நேர்மையிலும், விசுவாசத்திலும் சிறந்த அமைச்சர்கள் வழி நடத்தியதால்தான் அந்த மன்னர்களால் சிறப்பாக ஆட்சி நடத்த முடிந்தது!
அப்படிப்பட்ட ஓர் அசாதாரணமான மந்திரியை, அபூர்வமான மேதையை, அற்புதமான மனிதரைப் பற்றித் தான் நாம் பேசப் போகிறோம்! சாணக்கியர் என்ற பெயரையும், அர்த்த சாஸ்திரம் எனும் நூலையும் பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அவரைப் பற்றிய பல்வேறு கருத்துகள், செய்திகள் உள்ளன.அவற்றில் பொதுவாக ஏற்றுக் கொள்ளப் படுபவைகளைப் பார்ப்போமா?
சாணக்கியர் சுமார் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டவர். மகத நாட்டைச் (தற்போதைய பீஹார்) சேர்ந்தவர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். குடில கோத்திரத்தில் பிறந்த அந்தணர் என்பதால் கௌடில்யர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. சாணக்கியர் தோற்றப் பொலிவு இல்லாதவர்.ஆனால் மகா அறிவாளி. சாக்ரட்டீசும் அப்படித் தானே! இந்தக் கதையைக் கேளுங்கள்.
ஒரு நாள் சாணக்கியரைப் பார்க்க ஒரு சீன யாத்ரிகர் வந்திருந்தார்.மாலை நேரம்.அவரை அன்புடன் வரவேற்ற சாணக்கியர் உடனே தனது அறையில் எரிந்து கொண்டு இருந்த எண்ணெய் விளக்கை அணைத்து விட்டார்!
அறையில் இருள் சூழ்ந்தது!
வந்த யாத்ரிகருக்கு ஒன்றும் புரியவில்லை. சாணக்கியரோ அமைதி யாக அணைக்கப்பட்ட விளக்கின் அருகில் இருந்த மற்றொரு விளக்கினை ஏற்றினார். அறையில் ஒளி பரவியது. ஆனால் யாத்ரிகருக்கு குழப்பம் அதிகரித்தது! அவரால் ஆவலை அடக்க முடியவில்லை. எரிகின்ற விளக்கை அணைத்துவிட்டு அதே போன்ற இன்னுமொரு விளக்கை ஏன் ஏற்ற வேண்டும்? அவர் கேட்டே விட்டார்!
சாணக்கியர் நிதானமாகப் பதில் கூறினார். ‘நீங்கள் வரும் முன்பு வரை நான் அரசாங்கப் பணி குறித்த விபரங் களைப் படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது எரிந்த விளக்கு அரசாங்கம் கொடுக்கும் எண்ணெய்யில் எரிந்தது. நமது சந்திப்போ எனது சொந்த வேலைக்காக.எனவே அதை அணைத்து விட்டேன்' என்றார்! சாணக்கியரிடம் அரசர் எவ்வளவு எண்ணெய் செலவாயிற்று என்று கேட்கவா போகிறார்? கண்ணசைவில் குடம் குடமாய்க் கிடைக்குமே!
99% நேர்மை என்று ஒன்று உண்டா, என்ன? பாடத்தைச் சொல்லி மட்டும் கொடுப்பவர் ஆசிரியர், சொன்னபடி நடந்து காட்டுபவரே குரு என்பார்கள்! குப்தர்களின் காலம் (கிபி 320-550) பொற்காலம் எனப் படித்திருக்கிறோம். அந்த மாதிரி அரசாங்கங்கள் அமைந்ததற்கு சாணக்கியர் போன்ற அமைச்சர்கள் நம் நாட்டில் அதற்கு முன்பே( கிமு நான்காம் நூற்றாண்டு) குருவாய் இருந்தது தானே காரணம்?
அண்ணே, அன்றைய அரசாட்சியில் போட்டி, பொறாமை, வஞ்சம் போன் றவையும் இருக்கவே செய்தன! இன்றைய வர்த்தக நிறுவனங்களிலும் அதே கதை தானே? எனவே, சாணக்கியர் அன்று அரசாட்சிக்குச் சொல்லிய அறிவுரை கள் இன்றைய நிறுவனங்களுக் கும் செவ்வனே பொருந்துமில்லையா? அவற்றை வரும் வாரங்களில் பார்க்கலாமா?
- somaiah.veerappan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT