Published : 04 Jul 2016 11:14 AM
Last Updated : 04 Jul 2016 11:14 AM
கடந்த இரு வாரங்களில் மூன்று முக்கிய நிகழ்வுகள் அரங்கேறிவிட்டன. ஆர்பிஐ கவர்னராக இரண்டாம் முறை நீடிக்கப் போவதில்லை என்று ரகுராம் ராஜன் அறிவித்துவிட்டார் (ரெக்ஸிட்). அடுத்து ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறலாம் என பொது வாக்கெடுப்பு முடிவுகள் தெரிவித்துவிட்டன (பிரெக்ஸிட்). மூன்றாவது சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துவிட்டார் லயோனல் மெஸ்ஸி (மெக்ஸிட்). இந்த மூன்றில் இரண்டு விஷயங்கள் இந்திய பொருளாதாரத்துடன் இணைந்தவை. ரெக்ஸிட் அறிவிப்பால் பங்குச் சந்தைகளில் சரியும் போக்கு காணப்பட்டது. பிரெக்ஸிட்டால் பெரும்பாலான நாடுகளின் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டன.
ரெக்ஸிட்டால் ஏற்பட்ட பாதிப்பை சிலதுறைகளில் 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு கதவைத் திறந்து விட்டு மத்திய அரசு ஓரளவு சரிக்கட்டிவிட்டது. ஆனால் பிரெக்ஸிட்டால் ஏற்படும் நீண்டகால பாதிப்பை எப்படிக் கையாளப் போகிறது.
உலகின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் (ஜிடிபி) ஐரோப்பிய யூனியனின் பங்களிப்பு 22 சதவீதமாகும். இதில் பிரிட்டன் வெளியேறுவதால் வளர்ச்சி கணிசமாகக் குறையும்.
பிரிட்டன் மூலமாக அதிக அந்நிய நேரடி முதலீடுகள் இந்தியாவுக்கு வருகின்றன. பிரிட்டன் வெளியேறியதால் ஐரோப்பிய நாடுகளிலிருந்து அதிக முதலீடுகள் இந்தியாவுக்கு வருவது குறையும்.
பிரிட்டனில் அதிக முதலீடுகளை செய்துள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 800 இந்திய நிறுவனங்களின் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் பிரிட்டனில் உள்ளன. இவற்றில் ஏறக்குறைய 1.10 லட்சம் இந்தியர்கள் பணி புரிகின்றனர்.
டாடா குழுமம் மட்டும் 19 நிறுவனங்களை பிரிட்டனில் வைத்துள்ளது. ஜாகுவார் லேண்ட் ரோவர், டெட்லி டீ, டாடா ஸ்டீல் (இப்போது அதை விற்றுவிட டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது) ஆகியன இதில் முக்கியமானவை
லேண்ட் ரோவர் கார் விற்பனை வருமானத்தில் 20 சதவீதம் ஐரோப்பிய நாடுகளின் விற்பனை மூலம் கிடைப்பவை.
பிரிட்டன் விலகலால் ஐரோப்பிய யூனியன் பிரிட்டனிலிருந்து வரும் பொருள்களுக்கு அதிக வரி விதிக்கக் கூடும். இதனால் இங்குள்ள இந்திய நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும்.
மேலும் பிரிட்டன் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியதால் ஐரோப்பிய யூனியன் நாடுகள் பிரிட்டனிலிருந்து இறக்குமதி செய்வதை அடுத்த சில ஆண்டுகளில் 25 சதவீத அளவுக்குக் குறைக்கும்.
பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் பிரிட்டனில் அலுவலகங்களை வைத்துள்ளன. இங்கிருந்து தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதியை ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும்பாலான நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. ஆண்டுதோறும் ஐரோப்பிய நாடுகளுக்கு 3000 கோடி டாலர் அளவுக்கு சாஃப்ட்வேர் ஏற்றுமதியாகிறது.
பிரெக்ஸிட் முடிவால் பிரிட்டன் பவுண்ட் விலை சரிந்துள்ளது. இதனால் ஏற்கெனவே தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் செய்துகொண்ட ஒப்பந்தப் பணிகளால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு.
பிரிட்டன் வெளியேற்றத்தால் இந்தியா-பிரிட்டன் இடையிலான வர்த்தகம் அதிகரிக்கும் என்று பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர். ஆனால் ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, ஸ்விட்சர்
லாந்து ஆகியவற்றுடனான வர்த்தகத்தைவிட பிரிட்டனிடையிலான வர்த்தக அளவு குறைவுதான்.
ஐரோப்பிய யூனியனுடன் தடையற்ற வர்த்தக உறவை மேற்கொள்ள இந்தியா பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. ஆனால் அவை அனைத்தும் பல நிலைகளில் தடைப்பட்டுவிட்டன. ஆனால் இப்போது பிரிட்டன் வெளியேறியதால் பேச்சுவார்த்தை துளிர்ப்பதற்கான நம்பிக்கை உருவாகியுள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையினருக்கு பிரெக்ஸிட் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது என்றே சொல்லலாம். இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பிரிட்டன் மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரே விசாவில் பயணம் மேற்கொள்ள முடியும். அதேபோல பிரிட்டனில் அலுவலகத்தை வைத்துக் கொண்டு ஐரோப்பிய யூனியன் முழுவதற்கும் சேவை அளிக்க முடியும். இவை அனைத்தும் இப்போது கேள்விக் குறியாகிவிட்டது.
பிரிட்டனுக்கு…
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியதால் இனி உறுப்பு நாடாக அளிக்க வேண்டிய தொகையை செலுத்த வேண்டியதில்லை. கடந்த ஆண்டு பிரிட்டன் அளித்த தொகை 1,300 கோடி பவுண்ட். இதில் 450 கோடி பவுண்ட் இங்கிலாந்துக்கு கிடைத்துவிடும். இதனால் ஒட்டுமொத்த செலவு 850 கோடி பவுண்ட் மட்டுமே.
இங்கிலாந்தில் 9.42 லட்சம் ஐரோப்பியர்கள், ரோமானியர்கள், பல்கேரியாவைச் சேர்ந்தவர்கள் பணி புரிகின்றனர்.
இவர்களுக்கு செலவிடும் மருத்துவ காப்பீடு உள்ளிட்ட செலவு உள்ளிட்டவற்றைக் காட்டிலும் இவர்களிடமிருந்து பெறப்படும் வரி வருமானம் அதிகமாகும். 2,000 கோடி பவுண்ட் வரி வருமானமாக பிரிட்டனுக்குக் கிடைக்கிறது. இவர்களுக்கான சமூக மேம்பாட்டு செலவு இதைவிட குறைவு.
பிற ஐரோப்பிய சமூகத்தினரின் வருகையால் தங்களது வருமானம் குறைவதாகக் கூறுவது தவறு என்று ஐரோப்பிய யூனியனில் சேர்ந்திருப்பதை விரும்பிய பிரிட்டன் பிரதமர் கேமரூனே இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியதால், பிரிட்டனின் பவுண்ட் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான சரிவை சந்தித்தது. 12,000 கோடி பவுண்ட் மதிப்புக்கு பங்குச் சந்தை சரிந்தது.
கடந்த ஆண்டு நவம்பரில் பிரிட்டனில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய யூனியனின் நுழைவு வாயிலாக பிரிட்டனைத்தான் இந்தியா கருதுகிறது என்று கூறினார்.
இப்போது ஐரோப்பிய யூனியனில் நுழைய மாற்று வழியைத் தேடத்தான் வேண்டும்.
பிரெக்ஸிட் என்பது ஒரு நிகழ்வு – இதனால் பல எதிர்பார்க்காத பாதகங்கள் ஏற்படலாம். வெளியேறும் முடிவு பிரிட்டனை மட்டும் பாதிப்பதல்ல. இந்த விவகாரம் ஐரோப்பிய யூனியனை மட்டும் சார்ந்ததல்ல. இது உலகம் முழுவதிலும் அதிர்வலையை, பின்விளைவைத் தோற்றுவிக்கக் கூடியது. சர்வதேச அளவில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து நாடுகளையுமே இது பாதிக்கும்.
2008-ம் ஆண்டு நிகழ்ந்த சர்வதேச பொருளதார தேக்க நிலையிலிருந்து இன்னும் பல நாடுகள் மீளவில்லை. இப்போது ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறியுள்ளது மேலும் பல விளைவுகளை நீண்டகால அடிப்படையில் ஏற்படுத்தும் என்பதே பொருளாதார அறிஞர்களின் கணிப்பாக உள்ளது.
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் முழுவதுமாக வெளியேறும் நடைமுறை முற்றிலுமாக நிறைவேற 2 ஆண்டுகள் ஆகும் என்று தெரிகிறது. ஒருவேளை மற்ற ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் தாராள வர்த்தக ஒப்பந்தத்தை பிரிட்டனால் நிறைவேற்ற முடியாமல் போனால் அது அந்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் 2.2 சதவீத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
பிரிட்டனிலிருந்து அயர்லாந்தும், ஸ்காட்லாந்தும் வெளியேறும் முடிவை எடுக்கலாம். இவ்விரண்டும் தனி நாடாக பிரியலாம். அவ்விதம் நாடு சிதறுண்டுபோவதை தடுக்க முடியாது.
பிரிட்டன் விலகலால் ஐரோப்பிய கூட்டமைப்புக்கு எதிரான கோஷம் வலுப்பெறும். ஐரோப்பிய யூனியல் இருக்கும் மற்ற நாடுகள் வெளியேறுவதற்கான சாத்தியங்கள் உருவாகலாம். அதேபோல உலகமயமாக்கலுக்கு எதிரான (டொனால்ட் டிரம்ப்) கோஷமும் வலுப்பெறலாம்.
காலச் சக்கரம் ஒருபோதும் பின்னோக்கிச் சுழல்வதில்லை. தாராளமயமும், உலகமயமாக்கலும் இந்த வகையைச் சேர்ந்தவை. இவற்றில் பின்னோக்கி செல்வது சாத்தியமில்லை. பிரச்சினைகள் ஏற்படும்போது அதற்கான தீர்வுகளைக் கண்டு முன்னோக்கிச் செல்வதுதான் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.
ramesh.m@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT