Published : 12 Sep 2016 10:58 AM
Last Updated : 12 Sep 2016 10:58 AM
இந்தியா ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் இருந்த போது அந்நியத் துணிகளை அணியக்கூடாது அனைவரும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கதர் துணிகளை அணிய வேண்டும் என்ற மையக் கருத்தை கொண்டு சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட துணியாக மட்டும் காதி துணிகளை பார்க்க முடியாது. அது அந்த காலக்கட்டத்தில் தேசத்தின் அடையாளமாகவும், இந்தியாவால் பொருளாதார வளர்ச்சி அடைய முடியும் என்றும், சுதேசி சிந்தனையுடன்தான் நாங்கள் இருக்கிறோம் என்றும் ஆங்கிலேயர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இருந்தன காதி தயாரிப்புகள்.
இப்படி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காதி தயாரிப்புகள் சுதந்திரம் பெற்ற பிறகு மிகப் பெரிய அளவிற்கு வளர்ச்சியடையவில்லை. புதிய பொருளாதார கொள்கைகள் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட பிறகு பல்வேறு வெளிநாட்டு தயாரிப்புகள் இந்தியா வந்து குவிந்தன. இதனால் காதி தயாரிப்புகளின் விற்பனை கடுமையாக பாதிப்படைந்தது. பெரும் சரிவை கண்டு வந்த காதி நிறுவனம் தற்போது மீண்டும் சிறிது சிறிதாக உயிர்பெற்று வருகிறது. காதி பொருட்கள் விற்பனையை அதிகப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதி தயாரிப்புகளை விளம்பரப்படுத்தும் வகையில் இந்தி நடிகரான சல்மான் கான், நடிகை சோனம் கபூர் ஆகியோர் காதி நிறுவனத்தின் தயாரிப்புகளை அணிந்து பேஷன் ஷோவில் கலந்து கொண்டனர். பிரபல ஆடை வடிவமைப்பாளர்கள் காதி ஆடைகளை வடிவமைத்து கொடுத்து வருகின்றனர். மிகப் பெரிய நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில் காதி மற்றும் கிராமப்புறத் தொழில்கள் நிறுவனம் வளர்ந்து கொண்டிருக்கிறது.
முக்கியத்துவம் தரும் மோடி
2014-ம் ஆண்டு மோடி ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்தே காதி தயாரிப்புகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ``காதி தயாரிப்புகளை வாங்கினால் அந்தப் பணம் ஏழைகளுக்கு போய்ச் சேரும் என்று தேசப்பிதா மகாத்மா காந்தி கூறியுள்ளார். ஆகவே நாம் அனைவரும் காதி தயாரிப்புகளையே வாங்குவோம் என்று உறுதி எடுத்துக் கொள்ளுவோம்’’ என்று கடந்த ஆண்டு மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய போது மோடி குறிப்பிட்டார். வெறும் பேச்சோடு மட்டுமில்லாமல் காதி உடைகளையே அணிந்து வருகிறார்.
மேலும் பிரதமர் அலுவலகம் 377 காதி கோட்டுகளை ஆர்டர் செய்துள்ளது. அத்துடன் கையால் செய்யப்பட்ட 10,000 பேப்பர் கவர்களையும் ஆர்டர் செய்துள்ளது. அரசு அதிகாரிகளை காதி துணிகளை அணியுமாறு மோடி தலைமையிலான அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.
வளர்ச்சியை நோக்கி காதி
காதி மற்றும் கிராமப்புற தொழிகள் ஆணையத்தை கடந்த ஆண்டு மத்திய அரசு மறுசீரமைப்பு செய்துள்ளது. இந்த ஆணையம் காதி துணிகளை மேம்படுத்தும் வகையில் திட்டங்களை வகுத்து வருகின்றனர். மேலும் கோயம்புத்தூர், லக்னோ, மூர்ஷிதாபாத் போன்ற பகுதிகளில் 200 மேற்பட்ட விற்பனையகங்களைத் திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. காதி பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்களுடன் காதி நிறுவனம் கூட்டு வைத்துள்ளது.
காதி துணிகளின் விற்பனையை அதிகப்படுத்தும் வகையில் பேப் இந்தியா, ஷாப்பர்ஸ் ஸ்டாப், ரேமண்ட் போன்ற நிறுவனங்களோடு கைகோர்த்துள்ளது. இந்த நிறுவனங்களுக்கான துணிகளை காதி நிறுவனம் தயாரித்துக் கொடுக்க இருக்கிறது. இதனால் கிராமப்புறத்தில் வசிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு பெருகும். இது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை காதி நிறுவனம் எடுத்து வருகிறது.
கடந்த 2014-15ம் ஆண்டு காதி பொருட்களின் விற்பனை 1,170 கோடியாக இருந்தது. இது 2015-16ம் ஆண்டில் 1,510 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த விற்பனையில் காதி துணிகளின் விற்பனையும் 70 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதனால் துணி வகைகளுக்கு காதி நிறுவனம் இந்த ஆண்டு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதால் புதுப்புது வகையில் ஆடைகளை வடிவமைக்க காதி நிறுவனம் வடிவமைப்பாளர்களை நியமித்துள்ளது.
குறைந்த விலை முதல் அதிக விலை வரை உள்ள அனைத்து வகையான தயாரிப்புகளையும் காதி நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டு வரு கிறது. பல முன்னணி நிறுவனங்களுக்கு போட்டியாக பல்வேறு நடவடிக் கைகளை எடுத்துவரும் காதிக்கு இனி ஏறுமுகம்தான்.
காதி துணிகளின் விற்பனையை அதிகப்படுத்தும் வகையில் பேப் இந்தியா, ஷாப்பர்ஸ் ஸ்டாப், ரேமண்ட் போன்ற நிறுவனங்களோடு கைகோர்த்துள்ளது. இந்த நிறுவனங்களுக்கான துணிகளை காதி நிறுவனம் தயாரித்துக் கொடுக்க இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT