Published : 18 Jul 2016 11:27 AM
Last Updated : 18 Jul 2016 11:27 AM
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் கோபி. ரெயின்கோட், ஜெர்கின் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். ஆசியன் பெயிண்ட்ஸ், பிரேக்ஸ் இந்தியா மற்றும் பல கப்பல் நிறு வனங்களுக்குத் தேவையான ரெயின் கோட்டுகளை தயாரித்துக் கொடுத்துவரும் இவரது கல்வித்தகுதி ஒன்பதாம் வகுப்பு தான். சென்னை பாரிமுனையில் விற்பனை யகத்தை வைத்துள்ள இவரது அனுபவம் இந்த வாரம் ‘வணிக வீதி’யில் இடம் பெறுகிறது.
அப்பா கட்டிட மேஸ்திரி, எனக்கோ ஒன்பதாவதுக்கு மேல் படிக்க முடியவில்லை. இதனால் படிப்பை பாதியில் விட்டுவிட்டு பிரிண்டிங் பிரஸ் வேலைகளுக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது பெல்ட் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த என் மாமா அவரது உதவிக்கு என்னை அழைத்துக் கொண்டதுடன், வேலைகளையும் கற்றுக் கொடுத்தார். மொத்த வியாபாரிகளிடமிருந்து வாங்கி, காசி செட்டி தெருவில் ஒரு சிறிய இடத்தில் சில்லரை வர்த்தகம் செய்து வந்தோம். சமயத்தில் பிளாட்பாரங்களிலும் பெல்ட் விற்பனை செய்திருக்கிறேன். 10 ஆண்டுகள் அந்த தொழிலில் சம்பளத்துக்கு வேலை பார்த்துவிட்டு, அதே தொழிலில் தனியாக இறங்க முடிவெடுத்தேன். மாமாவிடமிருந்து விலகி 3 ஆண்டுகள் தனியாகத் தொழில் கற்றுக் கொண்டேன். பின்பு மாதம் 4 ஆயிரம் ரூபாய் வாடகையில் காசி செட்டி தெருவில் தனியாக கடை தொடங்கினேன்.
கடை என்றால் பெரிதாகக் கற்பனை செய்ய வேண்டாம். சின்ன அலமாரி மாதிரி இருக்கும் அவ்வளவுதான். அந்த கடையைப் பார்த்துக்கொண்டே சென்னை சுற்றுவட்டாரங்களில் கோவில் திருவிழாக்களில் தரைக்கடை வியாபாரம் செய்யச் செல்வேன். பெல்ட் உடன் சீசனுக்கு ஏற்ப எலெக்ட்ரானிக் பொருட்கள், ரெயின் கோட்டுகள் உள்ளிட்டவையும் கொண்டு செல்வேன். இதே காலகட்டத்தில் சில்லரை வர்த்தகத்திலிருந்து மொத்த விற் பனைக்கு மாறுவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டேன். நான் வாடகைக்கு இருந்த கட்டிடத்திலேயே ரூ.8,000 வாடகையில் இன்னொரு இடம் கிடைக்க அங்கு மொத்த வியாபாரத்தை தொடங்கினேன்.
தொழிலில் போட்டி அதிகம் என்பதால் வேறு தொழிலுக்கு மாறலாம் என ரெயின்கோட் விற்பனையில் கவனம் செலுத்தினேன். இந்த நேரத்தில் ஆசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்திலிருந்து எதார்த்தமாக எனது கடைக்கு வந்து 300 ரெயின் கோட்டுகளுக்கு ஆர்டர் கொடுத்தனர். பெங்களூருவில் சப்ளை செய்ய வேண்டும். பெங்களூருவில் பார்சலை ஒப்படைத்த என்னை திரும்ப வழியனுப்ப ஒருவரை அனுப்பிவைத்தனர். அவரிடம் என் விசிட்டிங் கார்டை கொடுத்துவிட்டு வந்தேன். சில நாட்களில் அவர் மூலமாக ரெயின்கோட் தயாரிப்பில் அனுபவமுள்ள கட்டிங் மாஸ்டர் ஒருவர் தொடர்பு கொண்டார்.
அவரோடு பேசியதில் இந்த தொழிலை சென்னையில் தொடங்கலாம் என முடிவு செய்தேன். கையில் மூலதனமில்லை தினசரி வட்டிக்கு 40 ஆயிரம் வாங்கி தண்டையார்பேட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து தொழிலை தொடங்கினேன்.
இதற்கான மூலப்பொருட்கள் பெரும் பாலும் வட இந்தியாவிலிருந்துதான் வாங்க வேண்டும். எனக்கு ஏற்கெனவே மொத்த, சில்லரை வியாபார சந்தை தெரி யும் என்பதால் மார்க்கெட்டிங் செய்வது எளிதாக இருந்தது. இதற்கிடையே வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ற தயாரிப்புகளில் கவனம் செலுத்தியதில் புதிய புதிய ஆர்டர்கள் கிடைக்கத் தொடங்கின. சில்லரை, மொத்த வர்த்தகம் தவிர தற்போது பெரிய நிறுவனங்களின் தேவைக்கேற்பவும் செய்து வருகிறேன். இதற்காக அந்த நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உற்பத்தி செய்யும் இடத்துக்கே வருவார்கள்.
சிறு வயதிலிருந்தே ஹிந்தி மொழிக் காரர்களுடன் பழகிவருவதால், ஹிந்தி பேசிவிடுவேன். பெரிய நிறுவனங்களில் ஆர்டர் எடுக்க ஆங்கிலம் அவசியமாக இருந்தாலும், எனது பேச்சில் நம்பிக்கை வைத்துதான் அணுகுகிறார்கள்.
வாடகைக்கு உள்ள இடமோ மிகச் சிறிய வீடு, ஏரியாவும் நெருக்கடியான ஏரியா என்பதால், தற்போது வேறு ஒரு கட்டிடத்தில் நல்ல இடத்துக்கு யூனிட்டை மாற்றிக் கொண்டேன். தற்போது தினசரி 7 பேர் வேலைபார்த்து வருகின்றனர். சீசன் நாட்களில் 5 பேர் கூடுதலாக இருப்பார்கள். எனது சகோதரர் ராஜிவ் உற்பத்தியையும், நான் கொள்முதல் மற்றும் மார்க்கெட்டிங் வேலைகளையும் பார்த்துக் கொள்கிறேன்.
தொழிலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வங்கிக் கடனுதவிகளை எதிர் பார்த்துக் கொண்டிருந்தாலும், வங்கிக் கடனுக்கு பிணையமாக சொத்துகளைக் காட்டச் சொல்கின்றனர். வருகிற லாபத்தையும் முதலீடாகவே போடுவதால் எந்த சொத்துகளையும் இதுவரை வாங்கவில்லை. ஆனால் விரைவில் அந்த இலக்கையும் அடைய வேண்டும் என்பதுதான் எனது ஆசை என்றார்.
தரைக்கடை வியாபாரத்திலிருந்து படிப்படியாக முன்னேறி வரும் இவரைப்போன்றவர்கள் எல்லோருக்கும் ஒரு பாடம்தான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT