Published : 22 Aug 2016 11:46 AM
Last Updated : 22 Aug 2016 11:46 AM
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடுகளிலிருந்து தங்கம் இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் உள்நாட்டில் தங்கத்தின் தேவையை பூர்த்தி செய்ய போதுமான தங்கம் இல்லாத சூழல் உருவானது. அப்போது ``தங்கத்துக்கு ரொக்கம்’’ என்றும் திட்டத்தை பெரும்பாலான நகைக் கடை உரிமையாளர்கள் அறிவித்தனர்.
பொதுமக்கள் தங்கள் வசம் உள்ள பழைய தங்க நகைகளைக் கொடுத்தால் அப்போதைய தங்கம் விலையில் கிராமுக்கு ரூ. 50 முதல் ரூ. 100 வரை கூடுதலாக அளிக்கப்படும் என்றும் சில நிறுவனங்கள் அறிவித்தன.
இப்போது தங்க இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டுவிட்டன. இருப்பினும் தங்க நகை வியாபாரிகளுக்கு தங்கம் போதுமான அளவு கிடைப்பதில் இன்னமும் சிரமம் நிலவுகிறது. இதற்குக் காரணம் சர்வதேச சந்தை விலை நிலவரத்தை விட உள்நாட்டில் தங்கத்தின் விலை 2.5 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை குறைவாக இருப்பதுதான். இருப்பினும் தேவையின் அளவு குறையவே இல்லை.
பொதுவாக தங்க நகை வர்த்தகர்கள் நகை உற்பத்திக்கான தங்கத்தை (இங்குள்ள வங்கிகளில்) லண்டன் சந்தை விலையின்படி வாங்குகின்றனர். இவ்விதம் வாங்கும் தங்கம் உள்நாட்டில் ஒரு அவுன்ஸ் 30 டாலர் முதல் 35 டாலர் வரை குறைவான விலைக்கே விற்க வேண்டியுள்ளது. (ஒரு அவுன்ஸ் என்பது 31.10 கிராமாகும்).
வித்தியாசமான உத்தி
இந்தப் பிரச்சினையை சமாளிக்க சென்னையைச் சேர்ந்த தங்க நகை நிறுவனம் ``வட்டியில்லா தங்க நகைக் கடன்’’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ``ஜிஎல் பிளஸ்’’ (Gold Loan Plus) என்ற பெயரிலான இத்திட்டத்தை கேஎஃப்ஜே நிறுவனம் தனது 4 சென்னைக் கிளைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டம் வெற்றி பெறுமாயின் இதையே பிற விற்பனையகங்களும் பின்பற்றக்கூடும்.
இப்புதிய திட்டத்தின்படி அடகு வைக்கும் தங்க நகையின் மொத்த தொகையில் 70 சதவீத தொகையை ரொக்கமாகப் பெறலாம். இத்தொகையை ஓராண்டு முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை மாதத் தவணையில் செலுத்தலாம். அளிக்கப்பட்ட தொகைக்கு வட்டி கிடையாது.
உதாரணத்துக்கு 10 கிராம் தங்கத்தை அடகு வைப்பதாயிலிருந்தால் உங்க ளுக்கு 7 கிராமுக்கான ரொக்கத் தொகை கிடைக்கும். நீங்கள் பெற்ற கடன் தொகையை சுலபத் தவணைகளில் செலுத்தலாம். நீங்கள் பெற்ற கடன் தொகையை செலுத்தி முடித்தவுடன் 10 கிராமுக்கு புதிய நகையை செய்கூலி, சேதாரம் இல்லாமல் பெறலாம். தவணைக் காலம் ஓராண்டுக்குள்ளாக இருந்தால் புதிய நகைக்கு செய்கூலி, சேதாரம் செலுத்த வேண்டும்.
இந்த நகைக் கடனுக்கான பரிசீலனைக் கட்டணம் ஒரு சதவீதமாகும். இவ்விதம் கடன் பெறுவோர் தங்களது வீட்டு முகவரி சான்று மற்றும் வங்கி கணக்கு சான்று நகலை அளிக்க வேண்டும்.
உங்களிடம் பெறப்படும் தங்கத்தை உருக்கி அதை நகையாக மாற்றி விடுவர். அதனால் நீங்கள் அடகு வைத்த நகை உங்களுக்குக் கிடைக்காது. புதிய நகையை வங்க வேண்டும்.
பொதுவாக தங்க நகை மீதான வட்டி வங்கிகளில் 11 சதவீதம் முதல் 17 சதவீதம் வரை உள்ளது. இந்நிலையில் வட்டியில்லா நகைக் கடன் பலரையும் வியப்பில் ஆழ்த்துவதாக உள்ளது. இருப்பினும் இந்த திட்டத்தால் நகைக் கடை வர்த்தகர்களுக்கு நஷ்டம் ஏற்படாது என்றே இத்துறை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
புதிய தங்க நகை செய்வதற்கான தங்கம் இத்திட்டம் மூலம் வர்த்தகருக்குக் கிடைத்துவிடும். அத்துடன் மாதந்தோறும் செலுத்தும் தவணைத் தொகை அவர்களது செயல்பாட்டு மூலதனத்துக்கு உதவும்.
வங்கிகளிலிருந்து தங்கம் வாங்கும் வர்த்தகர்கள் குறிப்பிட்ட தொகையை கட்டாயம் வங்கி காப்பீடாக செலுத்தி யாக வேண்டும். வாங்கும் தங்கத்தின் அளவு அதிகரிக்கும் போது காப்பீட்டு தொகையும் அதிகரிக்கும். உள்நாட்டில் தங்கத்தின் விலை குறையும்போது தங்க நகை வர்த்தகர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
இந்த வகையில் வங்கியிலிருந்து தங்க நகையை வாங்குவதை விட இத்திட்டத்தின் மூலம் நகையைப் பெறுவது வர்த்தகர்களுக்கு மிகவும் பயனளிக்கக் கூடியது. மேலும் வைக்கப்படும் தங்கத்தில் 30 சதவீதம் வர்த்தகர் வசமே உள்ளது. இது அவர்களுக்கு போனஸாகும். இந்த 30 சதவீதத்தின் மூலம் தவணைக் காலத்துக்கு வட்டியில்லா கடன் அளிக்கலாம்.
இந்தியாவில் பொதுவாக தங்கத்தின் தேவையில் 90 சதவீதம் இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. பழைய தங்கத்தின் மூலம் 10 சதவீதம் மட்டுமே பூர்த்தியாகிறது.
அவசர பணத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. பணத் தேவையை பூர்த்தி செய்வதோடு வட்டியில்லா கடன் திட்டம் தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT