Published : 24 Apr 2017 11:15 AM
Last Updated : 24 Apr 2017 11:15 AM
தொலைத்தொடர்பு துறையில் இருக்கும் சிறிய நிறுவனங்கள் அனைத்தும் பெரிய நிறுவனங்களுடன் இணைந்துவிட்டன. அந்த நிலைக்கு இந்திய இ-காமர்ஸ் துறை தயாராகி வருகிறது. ஸ்நாப்டீல் நிறுவனத்தை பிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைப்பதற்கான பேச்சு வார்த்தைகள் தொடங்கி இருக்கின்றன.
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்று சொல்லுவார்கள், இந்த வார்த்தை தொழிலுக்கும் பொருந்தும்போல. ஆம், இந்த இரு நிறுவனங்களின் நிறுவனர்களும் ட்விட்டரில் அறிக்கை போர் நடத்தினார்கள். பிளிப்கார்ட் நிறுவனத்தின் சச்சின் பன்சால் மற்றும் ஸ்நாப்டீல் நிறுவனத்தின் குணால் பஹல் இருவருக்கும் இடையே காரசாரமான விவாதம் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தது. அவர்களிடையிலான சர்ச்சையை விவரிக்கத் தொடங்கினால் அதுவே தனிக்கட்டுரையாகி விடும்.
பொது அரங்கில் விவாதம் செய்த இரு நபர்கள் எப்படி நிறுவனத்தை இணைக்க ஒப்புக்கொண்டார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றால் ஸ்டார்ட் அப்கள் செயல்படும் விதத்தை புரிந்துகொள்ள வேண்டும். தனிநபர் கள் நிறுவனங்களைத் தொடங்கினாலும், வென்ச்சர் கேபிடல் நிதி மூலமே நிறுவனத்தை விரிவுபடுத்து கிறார்கள். இதுபோல ஒவ்வொரு முறை நிதி திரட்டும்போது, நிறுவனர்களின் பங்குகள் கணிசமாக குறைகிறது. தொழில்நுட்பத்தில் இயங்கும் பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் லாபமீட்டவில்லை என்பதால், ஒவ்வொரு கட்டத்திலும் வென்ச்சர் கேபிடல் நிதி தேவைப்படுகிறது. அதிகளவு முதலீடு திரட்டிய பிளிப்கார்ட் மற்றும் ஸ்நாப்டீல் நிறுவனர்கள் வசம் ஒற்றை இலக்கத்திலேயே பங்குகள் உள்ளன. இதனால் முக்கிய முடிவுகள் எடுப்பதில் இவர்களால் ஆதிக்கம் செலுத்த முடியாது.
உதாரணத்துக்கு பிளிப்கார்ட் நிறுவனர்கள் வசம் 5 சதவீத பங்குகளும், ஸ்நாப்டீல் முதலீட்டாளர்கள் வசம் 6.5 சதவீத பங்குகள் மட்டுமே இருக்கின்றன. பெரும்பாலான பங்குகள் முதலீட்டாளர்கள் வசம் இருக்கின்றன. இதில் எந்த முதலீட்டாளர் வசம் அதிக பங்குகள் இருக்கின்றனவோ, முடிவுகள் எடுப்பதில் அவர்களின் பங்கு அதிகமாக இருக்கிறது.
ஸ்நாப்டீல் ஏன்?
ஸ்நாப்டீல் நிறுவனத்தை ஏன் விற்க வேண்டும். இதற்கு பல காரணங்கள். அதிக தள்ளுபடி வழங்கியதால் நிறுவனத்தை நடத்துவதற்கு போதுமான தொகை இல்லை. சுமார் ஆறு மாதங்கள் நடத்துவதற்கு மட்டுமே முதலீடு இருக்கிறது. நிறுவனம் சரியாக செயல்படவில்லை என்பதால், நிறுவனத்தை தொடர்ந்து நடத்த நிதி திரட்டுவது அவசியம். ஆனால் மோசமான நிதி நிலைமையால் நிதி திரட்ட முடியவில்லை. இந்த நிறுவனத்தில் அதிக அளவாக 33 சதவீத பங்குகளை சாப்ட்பேங்க் வைத்திருக்கிறது. இந்த நிறுவனம் அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவில் 1,000 கோடி டாலர்கள் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் ஏற்கெனவே செய்துள்ள முக்கியமான முதலீட்டை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஸ்நாப்டீல் நிறுவனத்தை பிளிப்கார்ட் அல்லது பேடிஎம் நிறுவனத்துடன் இணைக்க சாப்ட்பேங்க் முயற்சி செய்கிறது. சமீபத்தில் பிளிப்கார்ட் நிறுவனத்தில், டென்சென்ட், இபே மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவை கூட்டாக ரூ.9,000 கோடியை முதலீடு செய்தன. அதனால் பிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணையவே அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகின்றன.
இணைப்பின் காரணம்?
ஸ்நாப்டீல் நிறுவனத்தில் சாப்ட்பேங்க் அதிக பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர். அதுபோல பிளிப்கார்ட் நிறுவனத்தில் டைகர் குளோபல் அதிக பங்குகளை வைத்திருக்கிறது. டைகர் குளோபல் பிளிப்கார்டில் இருந்து பகுதியளவு பங்குகளை விற்கத் திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனத்தை சேர்ந்த கல்யாண் கிருஷ்ணமூர்த்தி பிளிப்கார்ட் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கிறார்.
பிளிப்கார்டும், ஸ்நாப்டீலும் இணையும் பட்சத்தில் புதிதாக உருவாகும் நிறுவனத்தில் சாப்ட்பேங்க் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. அப்போது பகுதியளவு பங்குகளை விற்க டைகர் குளோபல் திட்டமிட்டுள்ளது. சாப்ட்பேங்க் நிறுவனத்தின் முதலீடும் காக்கப்படும், தவிர முக்கியமான நிறுவனத்தில் பங்குகள் கிடைக்கும். அதேபோல டைகர் குளோபல் நிறுவனம் பங்குகளை விற்கமுடியும் என்பதுதான் இந்த இணைப்பின் காரணங்களாக சொல்லப்படுகிறது.
பிளிப்கார்டுக்கு என்ன பயன்?
இந்த இணைப்பினால் பிளிப்கார்டுக்கு பெரிய சாதகங்கள் இருக்காது என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. இதுவரை லெட்ஸ்பை, விரீட்,மிந்திரா, ஜபாங் உள்ளிட்ட சில நிறுவனங்களை பிளிப்கார்ட் ஏற்கெனவே கையகப்படுத்தி இருக்கிறது. ஆனால் இவை அனைத்தும் வெவ்வேறு பிரிவுகளில் செயல்படுபவை. ஆனால் பிளிப்கார்ட் மற்றும் ஸ்நாப்டீல் ஆகியவை ஒரே பிரிவில் செயல்படுபவை என்பதால் பெரிய பலன் இருக்காது. ஒரே வாடிக்கை யாளர்கள்தான் இருப்பார்கள். தவிர ஸ்நாப்டீல் நிறுவனத்தின் மாத விற்பனை ரூ.400 கோடிதான். ஆனால் பிளிப்கார்ட் நிறுவனத்தின் துணை நிறுவனங்களான மிந்திராவின் வருமானத்தை விட ஸ்நாப்டீல் வருமானம் குறைவு. தவிர ஸ்நாப்டீலை பிளிப்கார்ட்டுடன் ஒருங்கிணைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
பிளிப்கார்ட் தென்னிந்திய நிறுவனம், ஸ்நாப்டீல் வட இந்தியாவில் செயல்படும் நிறுவனம் என்பதால் வட இந்தியா மற்றும் வட கிழக்கு பகுதியில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பது மட்டுமே பிளிப்கார்ட்டுக்கு நன்மையாக இருக்க முடியும்.
அமேசானுக்கு போட்டியாக!
இ-காமர்ஸ் துறை தற்போதைய நிலைமையை விட அடுத்த பத்தாண்டுகளில் 10 மடங்கு வளர்ச்சி இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இ-காமர்ஸ் மூலமாக மாதத்துக்கு சராசரியாக 1 கோடி வாடிக்கையாளர்கள் மட்டுமே பொருட்களை வாங்குகிறார்கள் என பிளிப்கார்ட் சிஇஓ கல்யாண் கிருஷ்ணமூர்த்தி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
45 கோடி நபர்கள் இணையம் பயன்படுத்துவதாக தகவல்கள் இருந்தாலும் ஒரு கோடி என்பது குறைவான விகிதம். ஆனால் வருங்காலத்தில் இந்த விகிதம் 10 கோடியாக உயரும் என்பது கணிப்பாக இருக்கிறது. வேறு எண்களில் குறிப்பிட்டால் இந்தியாவில் ஒரு நாளைக்கு 20 லட்சம் பேக்கேஜ்கள் செய்யப்படுகின்றன. ஆனால் சீனாவில் 5.7 கோடியும், அமெரிக்காவில் 3.5 கோடி பேக்கேஜ்கள் செய்யப்படுகின்றன. வருங்காலத்தில் இந்திய சந்தை உயரும் என்னும் கணிப்பின் காரணமாக இந்த சந்தையை கைப்பற்றவே நிறுவனங்கள் இணைகின்றன.
வருங்காலத்தில் அமேசான், பிளிப்கார்ட், பேடிஎம் (அலிபாபா) ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டுமே இந்த துறையில் இந்தியாவில் இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அமேசான் அமெரிக் காவில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் முக்கிய நிறுவனமாக இருக்கிறது. தவிர இந்தியாவில் 500 கோடி டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறது. பிளிப்கார்ட் மொபைல், எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் கவனம் செலுத்தியும் வருகிறது.
ஆனால் அமேசான் இணையதளத்தை பயன்படுத்துவதை ஒரு பழக்கமாக (உதாரணத்துக்கு பிரைம்) மாற்றுவதற்கான வேலைகளில் இருக்கிறது. அமெரிக்காவில் அமேசானுக்கு இபே போட்டி நிறுவனம், கிளவுடில் மைக்ரோசாப்ட் போட்டி நிறுவனம். இந்த இரு நிறுவனங்களும் பிளிப்கார்டில் முதலீடு செய்துள்ளன. டென்சென்ட் சீனாவை சேர்ந்த நிறுவனம். இந்தியாவில் தன்னுடைய முதலீட்டை விரிவுபடுத்த பிளிப்கார்டில் முதலீடு செய்திருக்கிறது.
இ-காமர்ஸ் துறையில் ஆரம்பகட்ட பரபரப்புகள் முடிந்துவிட்டன. இனி மாரத்தான் தொடங்குகிறது.
பிளிப்கார்ட் முதல் பணியாளர்
ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் வேலை கிடைப்பது என்பது ராக்கெட்டில் பயணிப்பது போல. வானத்தில் பறக்கலாம் அல்லது கடலில் விழலாம். சிலர் வானத்தில் பறக்கிறார்கள். அப்படி பறப்பவர்களில் ஒருவர் ஆம்பூரை சேர்ந்த ஐயப்பா. பிளிப்கார்ட் நிறுவனத்தின் முதல் பணியாளர்.
2008-ம் ஆண்டு ஃபர்ஸ்ட் பிளைட் கூரியர் நிறுவனத்தில் வேலை இழந்தார். அதேசமயத்தில் பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு அனுபவம் வாய்ந்த நபரை பன்சால் இணை தேடிக்கொண்டிருந்தது. ஆங்கிலமும், கணிப்பொறியை கையாள தெரிந் தவர்களை பிளிப்கார்ட் தேடியது. ஆரம்பத்தில் ரூ.8,000 சம்பளத்தில் ஐயப்பா இணைந்தார். டெலிவரி பையனாக இருந்தவர் தற்போது பிளிப்கார்ட் நிறுவனத்தில் துணை இயக்குநராக (வாடிக்கையாளர் சேவை) இருக்கிறார். ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு காலாண்டிலும் நிறுவனம் இரு மடங்கு வளர்ச்சி அடைந்தது. அந்த குறிப்பிட்ட காலத்தில் இவரது சம்பளமும் இரட்டிப்பானது.
சம்பளம் மட்டுமல்லாமல் பிளிப்கார்ட் இவருக்கு பங்குகளும் ஒதுக்கி இருக்கிறது. அந்த பங்குகளின் தற்போதைய மதிப்பு சில மில்லியன் டாலர்கள். சொந்த தேவைக்காக இடையே இரு முறை 2010 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் தன் வசம் இருக்கும் சில பிளிப்கார்ட் பங்குகளை ஐயப்பா விற்றிருக்கிறார்.
பிளிப்கார்டில் சேர்ந்ததுதான் என் வாழ்நாளில் நான் எடுத்த சிறந்த முடிவு என ஐயப்பா தெரிவித் திருக்கிறார். பலருக்கும் இந்த வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்னும் ஆசை இருக்கிறது. ஆனால் ஐயப்பா போல சிலரால்தான் அதனைச் சொல்ல முடிகிறது.
- வாசு கார்த்தி
karthikeyan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT