Published : 23 Jan 2017 11:47 AM
Last Updated : 23 Jan 2017 11:47 AM
நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு (குறள்: 520) |
சில ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பர் ஒருவர் ஒரு வங்கியின் 75 கிளைகளுக்கு கோட்ட மேலாளராகப் பதவி ஏற்றார். விடமாட்டீங்களே. பெயர் குமார் தான்!
அவர் நாணயமானவர் தான். நல்லவர் தான். ஆனால் அவ்வளவுதான். பின்னே என்னங்க? அவரைப் போலவே எல்லோரும் நல்லவர்களாக இருப்பார்கள் என நம்பினார், செயல்பட்டார்!
வாடிக்கையாளரின் அவசரத் தேவைக்கு கிளை மேலாளர் ஒரு மாதத்திற்கு ரூ 10,000 பிணையம் ஏதுமில்லாமல் ஓவர்டிராப்ட் கொடுக்கலாம், காசோலை டிஸ்கவுன்ட்டில் ஒரு லட்சம் கொடுக்கலாம் என்கிற ரீதியில் அதிகாரம் கொடுக்கப்பட்டு இருந்தது!
வெளியூர் காசோலைகளை பணமாக்க வாரக்கணக்கில் தாமதமாகிய அக்காலத்தில் வணிகர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். கிளை மேலாளர்களால் அவசரத் தேவை இருப்பவர்களுக்கு உதவ முடிந்தது.
கோட்ட மேலாளரான குமாருக்கு கூடுதல் அதிகாரம் இருந்தது. ரூ.50,000 ஓவர் டிராப்ட், ரூ.5 லட்சம் காசோலை டிஸ்கவுண்ட் வரையும் குமாரால் கொடுக்க முடியும். நம்ம குமார் பதவி ஏற்ற முதல் கூட்டத்தி்லேயே `நமது கோட்டத்தைப் பொறுத்த வரை இங்கு நான் மட்டும் கோட்ட மேலாளர் இல்லை. நீங்கள் ஒவ்வொருவரும் கோட்ட மேலாளர்கள் தான். எனது அதிகாரங்களை நீங்களும் பயன்படுத்தலாம்.’ என்று சொல்லிவிட்டார்!
முதலில் மேலாளர்கள் பயந்தனர், தயங்கினர். ஆனால் அவரிடம் முன் அனுமதிக்கு அணுகினால், தொலைபேசியில் கூப்பிட்டு `தம்பி, நீ என்னை விட எந்த விதத்தில் குறைந்தவன்? உன்னை நம்புகிறேன். எனக்கு விண்ணப்பம் அனுப்பி நேரத்தை வீண்டிக்காதே' என வசனம் மட்டும் பேசவில்லை, உடனுக்குடன் ஒப்புதலும் அனுப்பிவிடுவார்!
கோட்ட அலுவலக அதிகாரிகள் குமாரை எச்சரித்தனர். ஆனால் அவரோ நீங்கள் எதிர்மறையாக இருக்கின்றீர்கள் எனச் சொல்லி வாயை அடைத்து விட்டார்!
இது தான் சந்தர்ப்பம் என இரண்டு மூன்று மேலாளர்கள் தங்கள் விளையாட்டைக் காண்பிக்க ஆரம்பித்தனர். இதற்காகவே பல போலிக் கணக்குகளைத் தொடங்கி கடன்கள் தாறுமாறாகக் கொடுக்கப்பட்டன. சில மேலாளர்களுக்கோ வாடிக்கையாளர்களை அலசும் திறனும், பக்குவமும் இல்லை!
குமாருக்குத் தன்னை வைத்து மற்றவர்கள் விளையாடுவது தெரிய பல மாதங்களாயிற்று. ஏனெனில், யார் எப்படி, என்ன செய்கிறார்கள் என்பதை அவர் கண்காணிக்கவில்லை!
`மேலாளர் எவ்வழி, பணியாளர் அவ்வழி’ என்பதுதாங்க நடைமுறை உண்மை! மற்ற அதிகாரிகளும் கட்டுப்பாட்டை விட்டுவிட்டனர். வங்கி விழித்துக் கொண்ட போது நிலைமை மோசமாகி விட்டது!
`பணியாளர்களிடம் அதிகாரத்தைத் தான் ஒப்படைக்க முடியும், பொறுப்பை அல்ல’ என்பார் பீட்டர் டிரக்கர். எந்த அமைப்பிலும் தன் கீழ் பணியாற்றுபவர்களின் செயல்களுக்கு அதன் மேலாளர் தானே பொறுப்பு? அண்ணே, கண்காணிப்பு என்பது மற்றவர்களிடம் கொடுக்கப்பட முடியாதது!
செயல் ஒழுங்காக நடைபெறுகிறதா என்று அரசன் தினமும் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் உலகத்தாரும் ஒழுங்காக நடந்து கொள்வர் எனும் குறள் உயரதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் பொருந்தும்!
- somaiah.veerappan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT