Published : 16 Jan 2017 11:55 AM
Last Updated : 16 Jan 2017 11:55 AM

இந்த கார்கள் இனி வராது!

பழையன கழிதலும், புதியன புகுதலும் புத்தாண்டின் முக்கிய அம்சமாகும். குறிப்பாக தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு முந்தைய போகிப் பண்டிகையை பழையன கழிதல் முக்கிய நிகழ்வாகவே கருதப்படுகிறது.

ஆட்டோமொபைல் துறையில் பழையன கழிதல் என்பதைக் காட்டிலும் புதிய மாடல்களை அறிமுகம் செய்து ஏற்கெனவே உள்ள மாடல் கார்களின் உற்பத்தியை முற்றிலுமாக அல்லது படிப்படியாகக் குறைக்கும் திட்டம் காலம் காலமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சில குறிப்பிட்ட மாடல் கார்களை முற்றிலுமாக நிறுத்தப் போவதாக நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

மாருதி ஸ்விப்ட்

மாருதி சுஸுகி நிறுவனம் தனது பிரபல ஹாட்ச்பேக் மாடலான ஸ்விப்ட் கார் உற்பத்தியை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதற்குப் பதிலாக புதிய ஸ்விப்ட் கார்கள் பல மேம்பட்ட அம்சங்களுடன் விரைவில் சந்தைக்கு வர உள்ளது.

ஸ்விப்ட் டி’ ஸையர் டூர்

சுற்றுலா வாகன ஏற்பாட்டாளர் கள் பெரிதும் பயன்படுத்தும் இந்த மாடல் கார் மார்ச் மாதத்துக்குப் பிறகு சந்தையில் கிடைக்காது என நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்குப் பதிலாக புதிய டிஸையர் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தக் கார் உற்பத்தி பிப்ரவரி மாதத்தில் நிறுத்தப்படும் என்று தனது விநியோஸ்தர்களுக்கு மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துவிட்டது.

ஹூண்டாய் ஐ 10

மாருதி சுஸுகி நிறுவனத்துக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கை யிலான கார்களைத் தயாரிக்கிறது தென் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய். இந்நிறுவனம் தனது ஐ10 மாடல் கார் உற்பத்தியை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்த மாடல் காரின் விற்பனை குறைந்ததால் உற்பத்தியை நிறுத்தும் முடிவை எடுத்துள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரெனால்ட் புளூயன்ஸ்

பிரான்சிலிருந்து பகுதியளவில் இறக்குமதி செய்யப்பட்டு இங்கு அசெம்பிள் செய்யப்பட்ட இந்த புளூயன்ஸ் மாடல் கார்களை இனி விற்பனை செய்யப் போவதில்லை என ரெனால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. உள்நாட்டு தயாரிப்புகள் அதிகம் கொண்ட காரை விற்பனை செய்ய ரெனால்ட் முடிவு செய்யதைத் தொடர்ந்து இத்தகைய நடவடிக்கையை நிறுவனம் எடுத்துள்ளது.

கொலேயோஸ்

ரெனால்டின் மற்றொரு தயாரிப்பான கொலேயோஸும் பகுதியளவில் உதிரி பாகங்களை இறக்குமதி செய்து இங்கு விற்பனை செய்யப்பட்டது. உள்ளூர் உதிரிபாக விலைக்கும், இறக்குமதி செய்யப்படுவதற்கும் அதிக விலை வித்தியாசம் இருப்பதால் இதை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

டாடா இண்டிகா

சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்களின் முக்கிய தேர்வாகத் திகழும் இண்டிகா மாடல் கார்களில் இவி2 மாடல் கார் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டில் இந்த மாடல் காரின் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்த டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

டாடா ஆரியா

இந்த காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துவிட்டது. இதற்குப் பதிலாக ஹெக்ஸா மாடல் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வரும்.

பிஎம்டபிள்யூ இஸட் 4

சொகுசு கார் தயாரிப்பில் முன்னணி யில் உள்ள பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது இஸட் 4 ரக மாடல் உற்பத்தியை நிறுத்தியுள்ளது. இதற்குப் பதிலாக இஸட் 5 என்ற பெயரில் புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x