Published : 25 Jan 2016 11:11 AM
Last Updated : 25 Jan 2016 11:11 AM
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும் (குறள் 498) |
விற்பனைப் பிரிவிலும் சந்தைப் படுத்துதல் துறையிலும் இருப்பவர் களுக்கு அடிக்கடி நேரும் பிரச்சனை இது. அதுவும் பிரபலமான புகழ்பெற்ற பொருளை விற்கும் நிறுவனத்தில் வேலை பார்த்தால் கேட்கவே வேண்டாம்! ஆண்டிற்கு 20%, 30% ஏன் 50 சதவீத கூட வளர்ச்சி காட்ட வேண்டுமென்று இலக்குகள் நிர்ணயிக்கப்படும்.
மேலும் “இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கும் நமது பிராண்ட், உங்கள் பகுதியில் மட்டும் ஏன் நான்காவது இடத்தில் இருக்கிறது?’ போன்ற கேள்விகள் கேட்கப்படும்!
வட இந்திய நண்பர் ஒருவர் ஒரு பெரிய வங்கியின் தமிழ்நாடு பிரிவில் கோட்ட மேலாளராக நியமிக்கப்பட்டார். வங்கியின் வர்த்தக வளர்ச்சிக்கான கூட்டங்கள் எங்கு நடந்தாலும் அவரது பேச்சு ஒரே மாதிரி தான் இருக்கும்.
‘நமது வங்கி இந்தியாவிலேயே மிகப் பெரிய வங்கிகளுள் ஒன்று. உங்கள் ஊரில் உள்ள வங்கிகளை விட நாங்கள் பல மடங்கு பெரியவர்கள். மகாத்மா காந்தியே எங்களிடம் கணக்கு வைத்திருந்தார்’ என்கிற ரீதியில் ஹிந்தியிலும் விட்டுவிட்டு ஆங்கிலத்திலும் பேசி மகிழ்ந்து கொள்வார்.
டெல்லி பம்பாய் போன்ற இடங்களில் அவரது வங்கி பெரும் வர்த்தகம் செய்து வந்தது. அதனால் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருச்சி என்று எந்த ஊரானாலும் சரி, வேறு எந்த குக்கிராமமாக இருந்தாலும் சரி தனது வங்கியே முன்னணியில் இருக்க வேண்டுமென எண்ணினார்; எதிர்பார்த்தார்!
மெர்கன்டைல் வங்கி தூத்துகுடியிலும்,லெஷ்மி விலாஸ் வங்கி கரூரிலும் விதையாய்த் தோன்றி இன்று பல கிளைகளுடன் வளர்ந்து நிற்பவர்கள் அவர்களுக்கு அவ்வூர்களின் மண்வாசனை தெரியும் அவ்வூர்காரர்களின் தேவைகள் நன்கு புரியும்.
வாடிக்கையாளர்கள் வங்கியின் உயரதிகாரிகளை ஏன் இயக்குநர்களை கூட உடன் தொடர்பு கொள்ள முடியும். பலருக்கு அவை குடும்ப மருத்துவர் போல குடும்ப வங்கியாக இருப்பவை.
அவரிடம் பணிபுரிந்த மேலாளர்களுக்கு தர்மசங்கடமான நிலைமை. திருப்பதி தமிழ்நாட்டில் இருக்கிறதென்றும், திருச்சூரின் சுருக்கிய மற்றொரு பெயரே திருச்சி என்றும் நினைத்துக் கொண்டிருப்பவரிடம் எப்படிப் பேசுவது? தமிழே தெரியாத ஆட்களை குக்கிராமங்களில் பணியமர்த்தி வாடிக்கையாளர்களின் பொறுமையை சோதித்துக்கொண்டிருந்தது அந்த வங்கி.
அவர்களின் தேவை, பல ஆயிரம் கிளைகளை இணையத்தில் இணைக்கும் தொழில் நுட்பத்தை விட, வங்கியின் படிவத்தைப் பூர்த்தி செய்வதில் அன்புடனும், அக்கறையுடனும் உதவும் பணியாளர்களே என்பதை புரிய வைக்கச் சிரமப்பட்டார்கள்.
சிறிய படையை கொண்டவனை எதிர்க்க, அவனுக்கு ஏற்ற அவனுடைய இடத்திற்குச் செல்லும்பொழுது பெரும்படையை உடையவன் உள்ளம் சோர்ந்து விடுவான் என்பார் வள்ளுவர். ஆனானப்பட்ட அமெரிக்காவே வியட்நாமில் படாதபாடு படவேண்டியதாயிற்றே.
நீங்கள் எவ்வளவு பெரிய ஆள் என்பதைவிட எவ்வளவு உபயோகமான ஆள் என்பதைக் கொண்டு தானே வாடிக்கையாளர்கள் வர்த்தகம் செய்வார்கள்? சொந்த மண் என்பதில் ஒரு கூடுதல் பலன் இருக்கத்தான் செய்யும். அதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப மாற்றங்கள் செய்து கொண்டால்தான் படிப்படியாக அங்கு முன்னேற முடியும்.
- சோம.வீரப்பன்
somaiah.veerappan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT