Last Updated : 10 Apr, 2017 11:23 AM

 

Published : 10 Apr 2017 11:23 AM
Last Updated : 10 Apr 2017 11:23 AM

போஸ்கோ வரலாற்றுப் பிழை

வரலாற்றுப் பிழை இதற்கு அர்த்தம் தேவைப்படுவோர், போஸ்கோ இரும்புஆலைக்கு ஒடிஷா மாநிலத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தை சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.

ஒரு காலத்தில் அடர்ந்த வனப் பகுதியாகவும், பெரும்பாலும் விவசாய நிலமாகவும் இருந்த பகுதி இன்று யுத்த பூமியாக காட்சியளிக்கிறது. 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பிலிருந்த 8 லட்சம் மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. பல்லாயிரக் கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் நிர்மூலமாக்கப்பட் டுள்ளன. ரூ.54 ஆயிரம் கோடி மூலதனத்தில் ஆலை அமைப்பதற்காக இந்த வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட நிலம் இனி எதற்கும் பயனற்றதாகப் போய்விட்டது.

வெட்டப்பட்ட மரங்களில் 2.25 லட்சம் மரங்கள் மிகவும் அரிய வகை என வனத்துறையால் பாதுகாக்கப்பட்டவை. 75 ஆயிரம் மரங்கள் காய், கனிகளை தருபவையாகும். மிகவும் செழிப்பான விவசாய நிலத்தை தொழிற்சாலை அமைக்க தேர்வு செய்ததை என்னவென்று சொல்வது. இங்கு ஆலை அமைக்கப் போவதில்லை என்று கொரியாவைச் சேர்ந்த போஸ்கோ ஆலை திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

போஸ்கோ வெளியேறினால் வேறு நிறுவனம் வரும் என்று மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல் சூளுரைக்கலாம். ஆனால் ஒடிஷா மாநிலம் குறித்து சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள தொழில்துறை பிம்பம் சிதைந்துவிட்டதுதான் உண்மை.

இங்கு ஆலை அமைக்கக் கூடாது என 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடியவர்களுக்கு வெற்றி கிடைத்திருக்கலாம். ஆனால் விவசாய நிலத்தை மீட்க முடியுமா? வெட்டப்பட்ட மரங்களைத்தான் மீண்டும் இங்கு வைக்க முடியுமா? இந்த ஆலைக்கு நிலம் தேர்வு செய்யப்பட்டதிலிருந்தே அனைத்தும் தவறான முடிவுகள்தான். இப்பிராந்தியம் தொழில் நகரமாக உருமாறும் என்ற எதிர்பார்ப்பும் பொய்த் துப்போனது. விவசாயப் பகுதியாக இருந்ததும் காணாமல் போய்விட்டது.

ஆலை அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகள், அதற்காக பெற்ற இழப்பீட்டுத் தொகையையும் செலவழித்து விட்டனர். ஆலை அமைந்தால் தங்கள் வாரிசுகளுக்கு வேலை கிடைக்கும் என்ற உத்தரவாதமும் நிறைவேறவில்லை.

2005-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி மாநில அரசுக்கும் போஸ்கோ ஆலைக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் 4,004 ஏக்கர் பரப்பளவில் ரூ. 54 ஆயிரம் கோடி முதலீட்டில் ஆலை அமைக்க இந்த ஒப்பந்தம் வகை செய்தது. இந்த ஆலை ஆண்டுக்கு 1.20 கோடி டன் உருக்கு உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய வெளிநாட்டு முதலீடு என அப்போது வர்ணிக்கப்பட்டது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் உருக்கு உற்பத்தியில் இந்தியா சூப்பர் பவராக உருவெடுக்கும், தொழில் வளர்ச்சியில் ஒடிஷா முன்னோடி மாநிலமாக உருவாகும் என்றெல்லாம் கூறப்பட்டது.

5 ஆண்டுகளுக்குள் நிறுவனம் செயல்படவில்லையெனில் வெளியேற வேண்டும் என்பது ஒப்பந்தமாகும். அப்போதே இத்திட்டத்துக்கு அப்பகுதியைச் சேர்ந்த 15 ஆயிரம் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். 12 ஆண்டுகளுக்குள் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.

5 ஆண்டுகள் முடியும் தருவாயில் (2010-ல்) இத்திட்டத்துக்கான நிலத்தை கையகப்படுத்துமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. மாவட்ட நிர்வாகம் காவல்துறையின் உதவியோடு இப்பகுதியில் இருந்த 15 ஆயிரம் பேரை கட்டாயமாக வெளி யேற்றியது. மாநில தொழில் கட்டமைப்பு மேம்பாட்டு கார்ப்பரேஷன் 2,700 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி அளித்தது.

2010 முதல் 2013-ம் ஆண்டு வரையான காலத்தில் ஏறக்குறைய இப்பகுதியில் இருந்த அனைத்து மரங்களுமே வெட்டப்பட்டுவிட்டன.

இப்பகுதியில் 5000 வெற்றிலைத் தோட்டங்கள் இருந்தன. இவை சராசரியாக மாதத்துக்கு ரூ.20 ஆயிரம் வருமானத்தை விவசாயிகளுக்கு ஈட்டித்தந்தன. ஆனால் இவை அனைத்தும் இன்று இல்லாமல் போய்விட்டது. இப்பகுதியில் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வந்த விவசாயிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய மாவட்ட நிர்வாகம், இதற்கு இழப்பீடாக தந்த ரூ. 70 கோடியை ஏற்க மறுத்துவிட்டனர் இந்த மண்ணின் மைந்தர்கள்.

எந்த கிராமத்திலுமே ஆதரவு, எதிர்ப்பு என்ற அணி இருக்கும். அதைப்போல கிராம விவசாயிகளில் மிகச் சிறிய எண்ணிக்கையிலானோர் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். ஆதரவு, எதிர்ப்பாளர்களிடையே நிகழ்ந்த மோதலில் 5 பேர் உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்தது. ஆலை தொடங்கும் முன்பே உயிர் பலி நிகழ்ந்துவிட்டது. 12 ஆண்டுகளாகியும் ஆலைக்கான சிறு பணிகள் கூட இங்கு நடைபெறாதது வினோதத்திலும் வினோதம்.

உருக்கு ஆலைக்கு இரண்டு முக்கிய விஷயங்கள் மிகவும் பிரதானம். ஒன்று துறைமுகம் மற்றொன்று சுரங்கம். பாரதீப் துறைமுகத்தை போஸ்கோ பெரிதும் நம்பியிருந்தது. ஆனால் போஸ்கோவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது.

சுரங்கமும் இப்பகுதியில் தங்கள் தேவைக்கேற்ப தோண்டிக் கொள்ளலாம் என போஸ்கோ நினைத்திருந்த வேளையில், 2015-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட சட்டம் போஸ்கோ திட்டத்தில் பேரிடியாக இறங்கியது. சுரங்கத்துக்கான லைசென்ஸை பொது ஏலத்தின் மூலம் பெற வேண்டும் என மத்திய அரசு கூறிவிட்டது. இரும்பு சுரங்கத்துக்கு இலவசமாக அனுமதி பெற்றுத் தருவதாக ஒடிஷா மாநில அரசு அளித்திருந்த உத்தரவாதம் காணாமல் போனதால், போஸ்கோ நிறுவனத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.பிறகு இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் போஸ்கோ நிறுவனத்துக்கு ஆர்வம் குறைந்தது. இறுதியில் திட்டத்திலிருந்து வெளியேறும் முடிவை 2 ஆண்டுகள் கழித்து அறிவித்துவிட்டது.

போஸ்கோ ஆலை வெளியேறும் முடிவை அறிவித்துவிட்டாலும் இப்பகுதி நிலத்தில் அந்நிறுவனம் செய்த பாதிப்பு எந்தக் காலத்திலும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். போஸ்கோ போனால் வேறு நிறுவனம் வரும் என மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் அறிவித்திருப்பது, இந்தத் திட்ட தோல்வியிலிருந்து அரசு பாடம் கற்கவில்லை என்பதையே உணர்த்துகிறது.

ஆனால் ஒடிஷா மாநில தொழில் துறை அமைச்சரோ போஸ்கோ திரும்ப அளித்த நிலத்தை நில வங்கி வைத்திருக்கும் என தெரிவித்துள்ளார். இதனால் விவசாயிகளுக்கு இந்த நிலம் திரும்ப கிடைக்குமா என்பதும் தெரியவில்லை.

தங்கள் நிலங்களை தங்களிடமே ஒப்படைக்கும்படி மாவட்ட விவசாயி கள் சங்கத்தினர் போராடத் தொடங்கி விட்டனர். மேற்கு வங்க மாநிலம் சிங்குரில் டாடாவுக்கு அளித்த நிலத்தை அம்மாநில அரசு விவசாயிகளிடம் திரும்ப அளித்த முன்னுதாரணத்தை இங்கு பின்பற்றவேண்டும் என்று விவசாயிகள் போராடி வருகின்றனர்.

1999-ம் ஆண்டு ஒடிஷா மாநிலத்தில் மிகப்பெரும் சூறாவளி வீசிய போது ஜகத்சிங்பூர் உள்ளிட்ட கிராமம் பெரிய பாதிப்புக்குள்ளாகவில்லை. அதற்குக் காரணம் இங்கிருந்த லட்சக் கணக்கான மரங்கள்தான். இப்போது இப்பிராந்தியம் பொட்டல் காடாகிவிட்டது. வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் இனி இயற்கை சீற்றத்தை எப்படி எதிர்கொள்வது என்று இக்கட்டிலும் உள்ளனர்.

ஆக்டோபஸ் எனப்படும் கடல் வாழ் உயிரி தனது விரல் போன்ற பாகத்தையே சாப்பிட்டுவிடுமாம். அதைப் போல நமது வாழ்வாதாரத்தையே நாசம் செய் யும் செயலுக்கு நமது அரசியல்வாதி களும், அவர்களது தவறான கொள்கை முடிவுகளுமே காரணமாக அமைந்து விடுகின்றன. விவசாயத்தை அழித்து தொழிலை வளர்ப்பதா? அரசு உணர வேண்டிய தருணமிது.

- ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x