Published : 19 Jun 2017 10:51 AM
Last Updated : 19 Jun 2017 10:51 AM
ஆந்திர பிரதேசத்தில் மிளகாய் பழத்தை கொட்டி எரித்த விவசாயிகள், அய்யாக்கண்ணு தலைமையில் ஒன்றரை மாத காலமாக போராடிய தமிழக விவசாயிகள், மத்திய பிரதேசத்தில் சாலையில் பாலை ஊற்றி, காய்கறிகளை சாலைகளில் கொட்டி விவசாயிகள் போராட்டம் என நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்டக் குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
ஒரு புறம் உற்பத்தியில் தன்னிறைவு ஆனால் அதன் பயன் விவசாயிகளை சென்றடையாதது, இன்னொரு புறம் விவசாயமே செய்ய முடியாத அளவுக்கு வறட்சியில் சிக்கிகொண்டது என இரு முக்கிய பிரச்சினைகளை தற்போது விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். உதாரணமாக மஹாராஷ்டிர மாநிலத்தை ஆசியாவின் மிகப் பெரிய வெங்காய சந்தை என்று குறிப்பிடுவர். முந்தைய ஆண்டு கொள்முதல் விலை அதிகமாக இருந்ததால் விவசாயிகளும் அதிகம் பயிரிட்டனர்.
பருவமழை நன்றாக இருந்ததால் இந்த ஆண்டு உற்பத்தி முந்தைய ஆண்டுகளை காட்டிலும் அதிகமாக இருந்தது. அதிக உற்பத்தியால் கடுமையான விலைச்சரிவு ஏற்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் குவிண்டால் 1,200 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயம் இந்த ஆண்டு குவிண்டாலுக்கு ரூ.450 என்ற அளவிலே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் அதிகமான நஷ்டத்தை சந்தித்துள்ளனர். இந்தியாவில் உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் இல்லாததுதான் இதற்கு மிக முக்கிய காரணம். வெங்காயம் போன்ற பயிர்களில் நீர்ச்சத்து 85 சதவீதம் உள்ளது.
அதிகபட்சம் மூன்று நாளைக்கு மேல் விவசாயிகளால் வைத்திருக்க முடியாது. பதப்படுத்தும் தொழில்நுட்பம் இருந்தால் மட்டுமே அதனை முறையாக பாதுகாக்க முடியும்
விவசாயிகள் நஷ்டமடையாமல் இருப்பதற்கு குறைந்தபட்ச ஆதாரவிலை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. தற்போது 23 பயிர்களுக்கு குறைந்தபட்ச விலை வழங்கப்பட்டு வருகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது குறைந்தபட்ச ஆதார விலை கணிசமாக உயர்த்தப்பட்டு வந்தது. உதாரணமாக நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை இந்தக் காலக்கட்டத்தில் ரூ.590 லிருந்து ரூ.1,400 வரை சென்றது. அதாவது தொடர்ச்சியாக ஆண்டுக்கு 13 சதவீதம் அதிகரிக்கப்பட்டு வந்தது.
ஆனால் அதன்பிறகு ஆட்சிக்கு வந்த மோடி அரசு குறைந்தபட்ச ஆதாரவிலையை 4 சதவீதம் மட்டும உயர்த்தியது. 2014-ம் ஆண்டு மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில் உற்பத்தி செலவினத்துடன் 50 சதவீதம் கூடுதலாக குறைந்தபட்ச ஆதார விலையாக நிர்ணயிக்கப்படும் என்று கூறினார். ஆனால் இந்த வாக்குறுதியை மூன்றாண்டுகள் ஆகியும் மோடி அரசு நிறைவேற்றவில்லை. மாறாக குறைந்தபட்ச ஆதாரவிலையை குறைத்துள்ளது.
2014-ம் ஆண்டு முதல் 2017 வரையான காலக்கட்டத்தில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை வெறும் 4 சதவீதம் மட்டுமே உயர்த்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கியது மோடி அரசு. மேலும் பருப்புக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை மத்திய அரசு நிர்ணயித்தது. ஆனால் அந்த விலையின்கீழ் பத்தில் ஒரு பங்கு அளவு கூட கொள்முதல் செய்யவில்லை.
அதிகரிக்கும் உற்பத்தி செலவு
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது விவசாயிகளின் உற்பத்தி செலவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதாவது 2010-11-ம் ஆண்டின் படி நெல் விவசாயி ஒரு குவிண்டாலுக்கு 39 சதவீதம் லாபம் ஈட்டினார். ஆனால் 2015-16-ம் ஆண்டில் இந்த லாபம் 6.7 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் உற்பத்தி செலவு அதிகரித்திருப்பது.
முக்கியமாக உரங்களின் விலை கடந்த பத்து ஆண்டுகளில் கடுமையாக அதிகரித்துள்ளது. 1991-92 ஆண்டை 2013-14-ம் ஆண்டோடு ஒப்பிடும் போது யூரியாவின் விலை 69 சதவீதம் அதிகரித்துள்ளது. டிஏபி-ன் விலை 300 சதவீதம் அதிகரித்துள்ளது. பொட்டாஷின் விலை 600 சதவீதம் அதிகரித்துள்ளது. விவசாயிகளின் வருமானம் குறைவானதற்கு இது மிக முக்கியமான காரணம் என்கின்றனர் வல்லுநர்கள்.
மேலும் இந்தியாவில் 40 சதவீதம் விவசாயிகள் வங்கி அல்லாத தனிநபர்களிடம் கடன் பெறுகிறார்கள். கடன் கொடுப்பவர்களே பெரும்பாலும் இடைத்தரகர்களாகவும் வர்த்தகர்களாகவும் இருப்பதால் அவர்களிடமே குறைந்த கொள்முதல் விலைக்கு விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. வங்கி சாராதவர்களிடமிருந்து அதிக வட்டிக்கு கடன் வாங்குவதால் அதை ஈடுசெய்யும் அளவுக்கு வருவாய் ஈட்டுவதே மிகப் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது.
இன்னொரு புள்ளிவிவரமும் நம்மை அச்சுறுத்துகிறது. கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு வங்கிகளில் விவசாயிகளின் மொத்தக் கடன் அதிகரித்துள்ளது. 2014-ம் ஆண்டு விவசாயிகளின் கடன் 8.11 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
ஆனால் 2014-ம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை 12.6 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதாவது 55 சதவீதம் அதிகரித்துள்ளது. உற்பத்தி செலவு அதிகரிப்பு, பணமதிப்பு நீக்கத்தின் தாக்கம் ஆகிய காரணங்களால் பெரும்பாலான விவசாயிகளால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிரச்சினை முற்றிலும் வேறு மாதிரியாக உள்ளது. மற்ற மாநிலங்களிலாவது விளைச்சல் அதிகம் இருந்தது. ஆனால் தமிழகத்தில் கடந்த 140 வருடங்களில் இல்லாத அல்லாத வறட்சி தற்போது ஏற்பட்டுள்ளது. உற்பத்தி மிகப் பெரிய அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. 2016-17-ம் ஆண்டு 1.3 டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 2015-16ம் ஆண்டில் 8.83 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பல காரணங்களால் விவசாயிகளில் நிலைமையை இன்னும் மோசமாகி விட்டது. வறட்சி நிவாரணம் இன்னும் கடை க் கோடி விவசாயிகளுக்கு போய் சேரவில்லை.
கடன் அதிகரித்தது, சந்தைப்படுத்துதல் மோசமாக இருப்பது, விலை சரிவு, உற்பத்தி செலவு அதிகரித்திருப்பது இப்படி பல்வேறு பிரச்சினைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விவசாயமும் விவசாயிகளும் மிகப் பெரிய நெருக்கடியை சந்தித்து வருகிறது.
அதேபோல் தற்போது நகரத்துக்கும் கிராமத்துக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது. இந்த இடைவெளியை குறைக்கவில்லையென்றால் நகரங்களை நோக்கிய மக்களின் இடப்பெயர்வு அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் அதிகமாகும். விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். வெறுமனே திட்டங்களை மட்டும் அறிவிக்காமல் அமைப்பு ரீதியாக இதுபோன்று விவசாயத்தை பலப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
உதாரணமாக இந்தியாவில் குளிர்பதனப்படுத்தும் மையங்கள் மொத்தம் 7,000 மட்டுமே உள்ளன. அதிலும் குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே அதிகமாக உள்ளன. இவற்றின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் மட்டுமே விலை சரியும் சமயத்தில் அழுகக்கூடிய உணவுப் பொருட்களை பாதுகாப்பாக வைத்து பின்பு விற்க முடியும். இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே விவசாயத்தின் வளர்ச்சி அதிகரிக்கும்.
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் பிராச்சாரத்தில் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த மோடி அரசு, திட்டங்களை வகுக்காமல் வெற்று வாக்குறுதிகளை மட்டும் மக்களுக்கு அளித்து வருகிறது. வெற்று வாக்குறுதிகள் மட்டும் நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது என்பதை மோடி புரிந்து கொள்ளவேண்டும்.
- devaraj. p. @thehindutamil. co. in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT