Published : 26 Sep 2016 10:30 AM
Last Updated : 26 Sep 2016 10:30 AM
பிரிக்க முடியாதது எது என்றால், ஆட்டோமொபைல் துறையும் பிரச்சினையும்தான். இது உள்நாட்டில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் இதே நிலைதான். ஃபோக்ஸ்வேகன் புகை மோசடி ஓய்ந்த நிலையில் தற்போது சீனாவில் பேட்டரி வாகன மானிய ஊழல் இத்தகையை வாகனங்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
புகையால் சுற்றுச் சூழல் மாசடையும் என்ற நிலையில் புகை மோசடியில் சிக்கிய ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இன்னமும் அதிலிருந்து வெளியே வரவில்லை. சர்வதேச அளவில் அந்நிறுவனத்துக்கு மிகப் பெரிய அவப்பெயரை இந்த மோசடி ஏற்படுத்தியுள்ளது.
சரி புகை வெளியிடாத பேட்டரி வாகனங்கள்தான் எதிர்கால போக்குவரத்துக்கு சிறந்தது என்ற நிலையில் ஆட்டோமொபைல் துறையினர் அதை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
பேட்டரி வாகனங்களை ஊக்குவிக்க சீன அரசு அளிக்கும் மானியத்திலும் மிகப் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. சீனாவில் நிகழ்ந்த இந்த மோசடி அந்நாட்டு ஆட்டோமொபைல் துறையை கலங்கடித்துள்ளது. இந்த மோசடியில் 5 நிறுவனங்கள் ஈடுபட்டு கோடிக்கணக்கான டாலர்களை சுருட்டியுள்ளன. பேட்டரி பஸ் தயாரிப்புக்காக அளிக்கப்பட்ட இந்த மானிய உதவியைப் பெற்ற நிறுவனங்களில் ஒன்று இதுவரை ஒரு பஸ்ஸை கூட தயாரித்ததில்லை என்பதுதான் இதில் மிகப் பெரிய விநோதமாகும்.
பேன்டம் என்ற பெயரிலான இந்த பேட்டரி பஸ் தயாரிப்புக்காக 5 நிறுவனங்கள் ஏறக்குறைய 12 கோடி டாலர் வரை மானியமாகப் பெற்றுள்ளன.
ஐந்து நிறுவனங்கள் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தாலும் இந்த பிரச்சினை தொடர்பாக 20 நிறுவனங்கள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுவரையில் இந்த வழக்கு தொடர்பாக 90 நிறுவனங்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளன.
மானிய மோசடி வழக்கானது பேட்டரி வாகன மேம்பாட்டில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று இத்துறையைச் சேர்ந்தவர்களே குறிப்பிட்டுள்ளனர்.
பேட்டரி கார், சூரிய மின்னாற்றல், காற்றாலை மின்னுற்பத்தி ஆகியனதான் புதிய மாற்று எரிசக்தி என்பதாலும் இதில் வளமான எதிர்காலம் உள்ளது என்பதாலும் இத்துறையில் சீனா முன்னிலை வகிக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறது.
மேலும் சர்வதேச அளவில் சீனாவை முன்னிலைப்படுத்திக் கொள்ள இத்துறை உதவுவதோடு, வேலை வாய்ப்பை பெருக்கவும், பொருளாதார வளர்ச்சிக்கும் இது உதவும் என்று கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள் உறுதியாக நம்பினர்.
அரசு அதிக மானியம் அளித்ததால் கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான பேட்டரி வாகனத்தை விற்பனை செய்ததில் அமெரிக்காவை மிஞ்சியிருந்தது சீனா.
சீனாவைச் சேர்ந்த பிஒய்டி ஆட்டோ லிமிடெட், அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் ஜப்பானின் நிசான் மோட்டார் கார்ப்பரேஷன் தயாரிப்புகளைவிட அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டில் சர்வதேச அளவில் மிகவும் விரும்பத்தக்க வாகனமாக பிஒய்டி தயாரிப்புகள் இருந்தன.
சீனாவில் தயாராகும் பேட்டரி வாகனங்கள் சீனாவில் விற்பனையாகும். பிஒய்டி பஸ்கள் கலிபோர்னியாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் விற்பனையாகிறது.
பெய்ஜிங் 500 கோடி டாலரை மானியமாக 2009-ம் ஆண்டிலிருந்து 2015-ம் ஆண்டு வரை அளித்துள்ளது. ஷாங்காய் உள்ளிட்ட பிற நகரங்களில் பேட்டரி கார்களுக்கு 15 ஆயிரம் டாலர் வரை லைசென்ஸ் கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
பேட்டரி பஸ் தயாரிப்பாளர்கள் ஒரு பஸ்ஸுக்கு 76,000 டாலரை மானியமாக பெற்றுள்ளனர். காருக்கு 7,500 டாலர் மானியம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மானிய மோசடியானது சீனாவில் விதிமுறைகளை மேலும் கடுமையாக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது.
நான்கு நிறுவனங்கள் பஸ்ஸின் விலையை அதிகமாகக் குறிப்பிட்டு அதிக அளவில் மானியம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. ஐந்தாவது நிறுவனமான ஜெம்சீ பஸ் தயாரிப்பு நிறுவனம் இதுவரை பஸ் தயாரித்ததே இல்லை. இந்நிறுவனம் 4 கோடி டாலரை மானியமாகப் பெற்றுள்ளது.
இந்த நிறுவனங்கள் தாங்கள் பெற்ற மானியத்தொகையை 50 சதவீத அபராத தொகையுடன் திரும்ப செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்கு ஷாங்காய் மாகாணத்தில் உள்ள மிகப் பெரிய நிறுவனமான கிங் லோங் யுனைடெட் ஆட்டோமோடிவ் இண்டஸ்ட்ரி நிறுவனம் 8 கோடி டாலரைப் பெற்றுள்ளது. நிறுவனம் பஸ்களின் விலையை அதிகமாகக் குறிப்பிட்டு மானியம் பெற்ற விஷயம் வெளியானதைத் தொடர்ந்து இந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சீன அரசு பல்வேறு நிறுவனங்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. 2020-ம் ஆண்டில் பேட்டரி வாகனங்களுக்கு அளிக்கும் மானிய உதவியை முற்றிலுமாக நிறுத்துவதென சீன அரசு முடிவு செய்துள்ளது. அதற்குப் பதிலாக டீசல் மற்றும் காசோலினில் இயங்கும் வாகன உரிமையாளர்கள் அளிக்கும் வரியை பேட்டரி வாகன உரிமையாளர்களுக்கு அளிப்பதென முடிவு செய்துள்ளது. மக்களின் வரிப்பணத்தை மானியமாக அளிப்பதற்கு மாற்றாக டீசல், காசோலின் மூலம் கிடைக்கும் வரித் தொகையை மாசில்லா வாகன உரிமையாளர்களுக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எது எப்படியோ கம்யூனிச ஆட்சி நடைபெறும் சீனாவில் நடந்த மானிய மோசடி அந்நாட்டு பஸ் போக்குவரத்தில் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது நிதர்சனமான உண்மை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT