Published : 11 Jul 2016 10:26 AM
Last Updated : 11 Jul 2016 10:26 AM
சமீபத்தில் மத்திய அமைச்சரவை பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டது. இப்போது மத்திய அமைச்சரவையின் எண்ணிக்கை 78-ஆக உள்ளது. பல புது முகங்களுக்கு வாய்ப்பு, இலாகாக்கள் மாற்றம் என பல விஷயங்கள் நடந்துள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிக சர்ச்சைக்குரிய அமைச்சராக அறியப்பட்டவர் ஸ்மிரிதி இராணி. ரோஹித் வெமுலா தற்கொலை, ஐஐஎம் மசோதா, அகமதாபாத் ஐஐஎம்-க்கு தலைவரை நியமிப்பதில் சிக்கல் என்பது உள்ளிட்ட பல சர்ச்சைகள் இவர் மனிதவள மேம்பாட்டு அமைச்சராக இருந்த போது நடந்தது. பல சர்ச்சைகள் இருப்பதால் இவரது மாற்றம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் நிதித்துறை இணையமைச்சராக இருந்த ஜெயந்த் சின்ஹா விமான போக்குவரத்துத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது யாருமே எதிர்பார்க்காதது? இத்தனைக் கும் சர்ச்சைகளில் அடிபடாமல், நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லியுடன் நெருக்கமாகவே இருந்தவர் இவர். தவிர இந்த பதவிக்குத் தகுதியானவரும் கூட. ஆனாலும் மாற்றப்பட்டிருக்கிறார்.
ஜெயந்த் சின்ஹா யார்?
வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக இருந்தவர் யஷ்வந்த் சின்ஹா. அவருடைய மகன்தான் ஜெயந்த் சின்ஹா. ஐஐடி டெல்லியில் படித்தவர். ஹார்வர்டு நிர்வாகக் கல்லூரியில் எம்பிஏ படித்தவர். மெக்கென்ஸி நிறுவனத்தில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர். 1985-ம் ஆண்டே அமெரிக்காவுக்கு சென்றவர் கடந்த மக்களவை தேர்தலின் போதுதான் முழுமையாக இந்தியாவுக்குத் திரும்பினார். ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு மக்களவைக்குத் தேர்வானார். தன்னுடன் ஐஐடியில் படித்த புனிதா குமாரை திருமணம் செய்துகொண்டார். (இது கட்டுரைக்கு தேவையில்லா தகவல் அல்ல)
என்ன காரணம்?
எந்த காரணத்துக்காக நீக்கப்பட்டார் என்பது அறிவிக்கப்படவில்லை என்றாலும் ஜெயந்த் சின்ஹா மாற்றத்துக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதலாவது அவரது தந்தை யஷ்வந்த் சின்ஹா. இவருக்கும் மோடிக்கும் ஏழாம் பொருத்தம். சில நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் விஷயத்தில் தற்போதைய மத்திய அரசு எந்த விஷயத்தையும் செய்யவில்லை என்று யஷ்வந்த் சின்ஹா கூறினார்.
இன்னொரு காரணம், கடந்த மாதம் ஜூன் 6-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பொதுத்துறை வங்கியாளர்களை சந்தித்தார். அன்றைய தினமே ஜெயந்த் சின்ஹா வீட்டிலும் ஒரு தேநீர் விருந்து நடந்திருக்கிறது. இதில் பொதுத்துறை வங்கியாளர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டிருக்கிறார்கள். தவிர அரசுக்கு சம்பந்தம் இல்லாத நபர்களும் இந்த விருந்தில் கலந்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தவிர ஜெயந்த் சின்ஹாவை போல அவரது மனைவி புனிதா குமார் சின்ஹாவும் நிதித்துறையில் 25 வருடங்களுக்கு மேலான அனுபவம் பெற்றவர். தற்போது Pacific Paradigm Advisor என்னும் நிறுவனத்தின் நிறுவனராக இருக்கும் இவர் முன்னதாக பிளாக்ஸ்டோன் ஏசியா அட்வைசர்ஸ் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார். இது தவிர ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், ராலிஸ் இந்தியா, பேர்பாக்ஸ் ஹோல்டிங், இன்போசிஸ் உள்ளிட்ட சில நிறுவனங்களின் இயக்குநர் குழுவிலும் இருக்கிறார். குறிப்பாக இன்போசிஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இணைவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஹெக்ஸாவேர் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருந்து வெளியேறினார். கடந்த ஜனவரியில் இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
நாட்டின் நிதித்துறை இணை அமைச்சராக இருப்பவரின் மனைவியும் நிதித்துறையில் இருப்பது மற்றும் முக்கியமான நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இருப்பதால் மறைமுக பலன்கள் இருக்க கூடும் என்பதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
மூன்றாவது காரணம் சின்ஹாவின் பேச்சு. கடந்த மாதம் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை 10 கோடியாக உயர்த்த திட்டமிட்டிருப்பதாக ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார். ஆனால் அடுத்த நாளே அப்படி எந்த திட்டமும் இல்லை என நிதி அமைச்சகம் மறுப்பு தெரிவித்தது. இது போன்ற தேவையற்ற நடவடிக்கைகள் ஜெயந்த் சின்ஹாவை நிதி அமைச்சகத்தில் இருந்து விமான போக்குவரத்துக்கு மாற்றம் செய்திருக்கிறது.
இதுவரை நிதி அமைச்சகத்துக்கு ஒரு இணை அமைச்சர் இருந்த நிலையில் இப்போது சந்தோஷ் கங்வார் மற்றும் அர்ஜூன் ராம் மேகவால் இரு இணை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
எதுவும் நிலையில்லை!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT