Last Updated : 20 Mar, 2017 11:08 AM

 

Published : 20 Mar 2017 11:08 AM
Last Updated : 20 Mar 2017 11:08 AM

என்பீல்டுக்கு போட்டியாக ஹோண்டா!

இந்தியாவில் எத்தனையோ மோட்டார் சைக்கிள்கள் பன்னாட்டு ரகங்கள் வந்தாலும் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிளுக்கு ஈடு இணை இல்லை என்றுதான் கூறத் தோன்றும். அதன் கம்பீரமான தோற்றம், அதன் சைலன்ஸர் ஓசை அனைத்துமே தனி கம்பீரம்தான். ஒரு காலத்தில் பண்ணையார்களும், அரசியல்வாதிகளும் மட்டுமே பயன்படுத்தினர். பிறகு ராணுவத்திலும் காவல்துறையிலும் என்பீல்டின் ஆதிக்கம் இருந்தது. இப்போது முழுக்க முழுக்க இளைஞர்களின் தேர்வாக மாறிவிட்டது. மாறிவரும் கால நிலைக்கேற்ப ராயல் என்பீல்டு தனது வடிவத்திலும் மாற்றம் செய்தன் விளைவு தொடர்ந்து 350 சிசி பிரிவில் ராஜாவாக வலம் வருகிறது என்பீல்டு.

என்பீல்டுக்குப் போட்டியாக பல நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளைக் களமிறக்கி வருகின்றன. சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த யுஎம் மோட்டார்ஸ் தனது ரெனகேட் மோட்டார் சைக்கிளை சந்தைப்படுத்தியது.

இப்போது என்பீல்டுக்கு போட்டியாக புதிய தயாரிப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது ஹோண்டா. ஆட்டோமொபைல் துறையில் ஜப்பானிய நிறுவனங்கள் கோலோச்சி வந்தாலும் ஐஷர் தயாரிப்பான என்பீல்டுக்கு இணையான 350 சிசி பிரிவில் மோட்டார் சைக்கிளை தயாரிக்கவேயில்லை. இப்போது ஹோண்டா நிறுவனம் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக ஜப்பான் மற்றும் தாய்லாந்தில் உள்ள ஹோண்டா ஆலோயில் உள்ள நிபுணர்கள் அடங்கிய குழுவை ஏற்படுத்தியுள்ளது.

இக்குழுவினர் இந்தியாவுக்கு ஏற்ற என்பீல்டுக்கு போட்டியாக நடுத்தர ரக மோட்டார் சைக்கிளை வடிவமைப்பார்கள் என்று ஹோண்டா நிறுவனத்தின் ஆசியப் பிரிவு தலைமைச் செயல் அதிகாரி நோரியாகி அபே தெரிவித்துள்ளார்.

இந்தத் தயாரிப்பு முழுமைபெற்றால் அதை இந்தியாவிலிருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டமும் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

என்பீல்டு நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 6 லட்சம் மோட்டார் சைக்கிளை விற்பனை செய்துள்ளது. அத்துடன் ஆண்டுக்கு 32 சதவீத வளர்ச்சியையும் அது எட்டி வருகிறது. உள்நாட்டில் மட்டுமின்றி ஏற்றுமதியிலும் ஐஷர் மோட்டார்ஸ் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளளது. கடந்த ஆண்டு 14 ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள் ஏற்றுமதி செய்யப்டப்டுள்ளன. ஏற்றுமதியும் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது.

ஹோண்டா நிறுவனம் ஏற்கெனவே 250 சிசி முதல் 400 சிசி வரையான மோட்டார் சைக்கிள்கை ஜப்பான் சந்தைக்கென உருவாக்கியுள்ளது. ஜப்பான் சந்தை சுருங்கி வருவதைத் தொடர்ந்து இந்தியச் சந்தையில் அது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இதனால் என்பீல்டுக்குப் போட்டியாக புதிய மாடலை உருவாக்கும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

புதிய மோட்டார் சைக்கிள் 250 சிசி முதல் 750 சிசி வரையிலானதாக வடிவமைக்க முடிவு செய்துள்ளது. இதன் விலை 3 ஆயிரம் டாலர் முதல் 7 ஆயிரம் டாலர் வரை இருக்கும் என தெரிகிறது.

பொதுவாக போக்குவரத்துக்கென மோட்டார் சைக்கிளை வாங்குவது ஒரு பிரிவினர். உலக அளவில் 5 கோடி பைக்குகள் இந்த பிரிவினரால் வாங்கப்படுகிறது. அடுத்து மோட்டார் சைக்கிளை பிரியத்துக்காக, பொழுதுபோக்கிற்காக வாங்குவோர் எண்ணிக்கை 10 லட்சமாக உள்ளது. இத்தகைய பிரிவில் காலூன்ற ஹோண்டா முயல்கிறது.

ஹோண்டாவின் போட்டியை என்பீல்டு தாக்குப்பிடிக்குமா அல்லது என்பபீல்டு ராஜ்ஜியத்தில் ஹோண்டா கரைந்து போகுமா என்பதற்கு காலம்தான் பதிலாக அமையும்.

தொடர்புக்கு: ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x