Published : 09 Jan 2017 10:49 AM
Last Updated : 09 Jan 2017 10:49 AM

அன்று கொலைக் குற்றவாளி, இன்று சிஇஓ!

தலைமைச் செயல் அதிகாரி பொறுப்புக்கு வர வேண்டும் என்றால் வாழ்நாளில் தனது மிகச் சிறந்த திறமையை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் அல்லது பாரம்பரிய தொழில் பின்னணியில் இருந்து வந்

திருக்க வேண்டும். இப்படி எந்த விதிகளும் இல்லாமல் அதுவும் ஒரு குற்றவாளி என்ற பட்டத்தோடு தலைமைச் செயல் அதிகாரி ஆக முடியுமா? ஜான் வால்வேர்டே அதைக் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். 16 வருடம் சிறைத் தண்டனை அனுபவித்த ஜான் வால்வேர்டே தற்போது முன்னணி சர்வதேச நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி.

1991-ம் ஆண்டு வால்வேர்டேக்கு வயது 20. அப்போது மிகச் சிறந்த கல்லூரி மாணவராகத்தான் இருந்து வந்திருக்கிறார். ஒரு புகைப்படக்காரர் வால்வேர்டே காதலியை பலாத்காரம் செய்துவிட்டார். இந்தப் புகைப்படக்காரர் ஏற்கெனவே இரண்டு பாலியல் புகார்களில் சிக்கியவர். தன் காதலிக்கு நடந்த கொடுமையை வால்வேர்டேவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்தப் புகைப்படக் காரரின் தலையை நோக்கிச் சுட்டார். அவரது வாழ்க்கை திசைமாறியது. இந்த குற்றத்துக்காக 16 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தார்.

ஆனால் சிறை வாழ்க்கைதான் வால்வேர்டேவின் இந்த முன்னேற்றதிற்கு காரணம். சிறையில் இருக்கும் போது தன்னை மீட்டுக் கொண்டார். தான் எவ்வாறு உருவாக வேண்டும் என்பதை சிறைத் தண்டனை அவருக்கு கற்றுக் கொடுத்தது. ஒழுங்குமுறை அறிவியலில் இளங்கலை பட்டம், நகர அமைச்சகத்தைப் பற்றி முதுநிலை ஆராய்ச்சி பட்டம் என இரண்டு கல்லூரி பட்டங்களை வாங்கினார். சிறை கைதிகளுக்கு எழுத, படிக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்கும் ஆசானாக இருந்தார். ஹெச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கக்கூடியவராக பணிபுரிந்தார்.

2008-ம் ஆண்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். பல்வேறு விதங்களில் தன்னை தகுதிப்படுத்திக் கொண்ட வால்வேர்டேக்கு புதிய வாய்ப்பு வந்தது. ஆனால் லாப நோக்கமற்ற நிறுவனங்களில் மட்டும்தான் பணிபுரிய வேண்டும் என்ற உறுதி எடுத்துக் கொண்டார். அவரது உறுதிக்கேற்ப ஆஸ்போர்ன் கூட்டமைப்பில்வேலை கிடைத்தது. மருத்துவசேவை, கல்வி, இதர சேவைகள் என அனைத்திலும் வால்வேர்டேவால் இயங்க முடிந்தது. இவரது பணித் திறமையை பார்த்து பல்வேறு லாப நோக்கமற்ற நிறுவனங்கள் அழைத்தன.

தற்போது யூத்பில்டு என்ற நிறுவனம் வால்வேர்டேக்கு தலைமைச்செயல் அதிகாரி பொறுப்பை அளித்துள்ளது. இந்த தலைமைப் பொறுப்பிற்கான நேர்காணலில் 124 பேர் பங்கெடுத்துள்ளனர். ஆனால் வால்வேர்டே பின்னணியை பார்க்காமல் திறமையை மதிப்பிட்டு யூத்பில்டு நிறுவனம் இந்தப் பொறுப்பை அளித்துள்ளது. அடுத்த வாரம் யூத்பில்டு யுஎஸ்ஏ நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்க இருக்கிறார்.

இந்த நிறுவனம் சர்வதேச அளவில் இளைஞர்களுக்கு உதவிகளை வழங்கி வரக்கூடிய நிறுவனம். அதாவது வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கக்கூடிய இளைஞர்களை தகுதிப்படுத்துவது போன்றவற்றை இந்த நிறுவனம் செய்து வருகிறது.

ஜான் வால்வேர்டேவுக்கு தற்போது 47 வயது ஆகிறது. இளைஞர்களுக்காக தற்போது அவர் தன்னை அர்ப்பணிக்க போகிறார். ``நான் இரண்டாவது வாய்ப்பை பயன்படுத்தி வந்தவன் என்று அழைக்கப்பட்டிருக்ககூடும் என்று என் மனதில் தோன்றும். அப்போதெல்லாம் ஏன் இரண்டாவது வாய்ப்புக்கென்று ஒரு குரல் இருக்கக்கூடாது என்று நினைத்துக் கொள்வேன்’’ என்று தனது அறிக்கையில்குறிப்பிட்டுள்ளார்.

உண்மைதான் முதல் வாய்ப்பில் நாம் சாதிக்க வில்லையே என்று ஓராயிரம் பேர் சோர்ந்து போய்க் கொண்டிருக்கையில் ஜான் வால்வேர்டே போன்றோர் உத்வேகம் தந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x