Last Updated : 21 Mar, 2016 11:50 AM

 

Published : 21 Mar 2016 11:50 AM
Last Updated : 21 Mar 2016 11:50 AM

குறள் இனிது: கூலிக்கு மாரடிக்கிறவனை வச்சிக்கிட்டு...

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்

பற்றிலர் நாணார் பழி (குறள் 506)



சுமார் 35 வருடங்களுக்கு முன்பு பிபிஎஃப்-ல் பணம் செலுத்துவதற்காக நாகபுரி ஸ்டேட் பாங்கின் பிரதான கிளைக்குச் சென்றிருந்தேன். பழமையான கட்டிடம், உயர்ந்த தூண்கள். மிகப்பெரிய ஹாலில் வரிசையாகக் கவுண்டர்கள்.

எக்கச்சக்கக் கூட்டம். 41டிகிரி வெயிலின் எரிச்சல், ஒன்றும் புரியவில்லை. யாரைக் கேட்டாலும் முறைப்பார்கள்; அல்லது விசாரணைக் கவுண்டரில் கேளுங்கள் என்பார்கள்.

பிரச்சினை என்னவென்றால் விசாரணைக் கவுண்டர் இருக்குமிடமும் யாருக்கும் தெரியவில்லை. நான் சோர்ந்து போய் கிட்டத்தட்ட மயங்கிய நிலையில் இருந்த பொழுது, சேமிப்புக் கவுண்டரில் இருந்த இளம்பெண் ஒருவர் என்ன வேண்டுமென ஆதரவாய்க் கேட்டார். நான் சொன்னதும் ‘நீங்கள் 53 ஆம் நம்பர் கவுண்டருக்குச் செல்லுங்கள்.

அது பின்னால் உள்ள கட்டிடத்தில் பெரிய கடிகாரம் மாட்டி இருக்கும் தூணுக்கு அருகில் உள்ளது' என இந்தியில் கூறினார். நான் மகிழ்ச்சியுடன் நடக்கத் தொடங்கியதும் பின்னால் ஒடி வந்து ‘இந்தப் பக்கம் குறுக்கு வழி உள்ளது, சீக்கிரம் போய் விடலாம்' என்றும் கைகாட்டினார்!

செய்யும் வேலையைச் சிரத்தையுடனும் மகிழ்ச்சியுடனும் செய்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்களை வேலையில் வைத்து இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் தரையைத் துடைக்கும் தொழிலாளியிடம் கமல்ஹாசன் சொல்வாரே அதுபோல, ஒவ்வொரு வேலையும் முக்கியமானதே. இதையே தான் மார்ட்டின் லூதர்கிங்கும் ‘நீங்கள் தெருவைக் கூட்டும் வேலையைச் செய்தால் கூட, ஏதோ மைக்கேல் ஆஞ்சலோ ஓவியம் தீட்டுவது போலப் பெருமையுடன் செய்யுங்கள்' என்கிறார்.

பற்று இல்லாதவனை பணிக்குத் தேர்வு செய்யக்கூடாது; அப்படிப்பட்டவன் பழிக்கும் அஞ்ச மாட்டான் என்கிறது குறள்.இல்லையா பின்னே?எடுத்த வேலை ஒழுங்காக முடிந்தால் மகிழ்ச்சி அடைபவன்தானே அது சரியாய் நடக்காவிட்டால் வரும் கெட்ட பெயருக்கும் பயப்படுவான்? காலையில் எழுந்தவுடன் அலுவலகம் சென்று இதைச் செய்ய வேண்டும் அவரைப் பார்க்க வேண்டும் என்று உற்சாகமாய் உத்வேகத்துடன் இருப்பவர்கள் அவர்கள்!

செய்யும் பணியில் திருப்தி (job satisfaction) என்பது இல்லாவிட்டால், அதைப் போன்றக் கொடுமையான தண்டனை வேறு இல்லை! எனவே வேலைக்குத் தேர்வு செய்யும் பொழுது எம் கடன் பணிசெய்து கிடப்பதே எனும் எண்ணம் உண்டா என்றும் பார்ப்பது நன்று!

எந்த ஒரு வேலையையும் சிறப்பாக, செவ்வனே செய்வதில் உள்ள ஆத்ம திருப்திக்கு ஈடு இணை இல்லையே. உங்கள் உழைப்பின் உண்மையான ஊதியம் அதுவே.

சற்றே சிந்தித்துப் பாருங்கள். அந்த ஆனந்தத்தை வேறு யாராலும் கொடுக்க முடியாது; உங்களிடமிருந்து யாராலும் அதைப் பறிக்கவும் முடியாது!

இக்குறளை பந்த பாசம் இல்லாதவனை வேலைக்கு எடுக்கக் கூடாதெனக் கூறுவதாகவும் பொருள் கொள்ளலாம்.உண்மை தானே, கார் ஓட்டுநர்களில் சிலர் தம் மனைவி மக்கள் புகைப்படத்தை காரில் கண்ணில் தெரியும்படி வைத்துக்கொள்வார்கள்.

அப்படிப்பட்டவர்கள் வண்டியை கவனமாக ஓட்டுவதாக சில ஆராய்ச்சிகள் சொல்கின்றன. ஷிமோகா ஆர்டிஓவில் இதை விதியாகவே ஆக்க நினைக்கிறார்களாம்!

தொடர்புக்கு - somaiah.veerappan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x