Published : 05 Sep 2016 12:43 PM
Last Updated : 05 Sep 2016 12:43 PM
கடந்த வாரத்தின் ஹாட் டாபிக் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் தான். பங்குச்சந்தை, தொலை தொடர்புத் துறை என அனைத்து ஏரியாக்களிலும் ஜியோமயம்தான். இனி குரல் அழைப்புகளுக்கு கட்டணம் இல்லை, ஒரு ஜிபி டேட்டா 50 ரூபாய் மட்டுமே, மாணவர்களுக்கு 25 சதவீத சலுகை, இந்த வருடம் முழுவதும் இலவசம், அடுத்த வருடம் வரை 15,000 ரூபாய்க்கு இலவசமாக செயலிகளை பயன்படுத்திக்கொள்ள முடியும் என வாடிக்கையாளர்களுக்கு உற்சாகம் அளிக்கும் பல விஷயங்கள் இருந்தாலும், ஒரு புறம் எப்படி ரிலையன்ஸ் ஜியோ லாபம் ஈட்டும் என்ற சந்தேகமும் இருந்தன.
முகேஷ் அம்பானி இது குறித்து அறிவிப்பு வெளியிட்ட சமயத்தில் பார்தி ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்தன. அதே சமயத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கும் சரிந்தது. அடுத்த நாள் வெள்ளிக்கிழமை இந்த பங்கு சரிந்ததற்கும் முதலீட்டாளர்களிடையே நிலவிய எப்போது லாபம் ஈட்டும் என்னும் சந்தேகம்தான். காரணம் கிட்டத்தட்ட ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
குறுகிய காலத்தில் லாபம் ஈட்டுவது கடினம்தான். ஆனால் நீண்ட காலத்தில் கணிசமாக லாபம் சம்பாதிக்க வாய்ப்பு இருப்பதாக சில வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர். தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரு வாடிக்கையாளர் மூலம் மாதம் 150 ரூபாய் கிடைக்கிறது. ஆனால் ரிலையன்ஸ் ஜியோ கட்டணங்களை கூர்த்து கவனித்தால் இதில் உள்ள உத்தி தெரியும். குறைந்தபட்ச கட்டணம் 149 ரூபாய். இதில் 0.3 ஜிபி டேட்டா மட்டுமே பயன்படுத்த முடியும்.
குரல் வழி கட்டணம் இலவசமாக இருந்தால் கூட 0.3 ஜிபி மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் பெரும்பாலானவர் கள் இந்த திட்டத்தை தேர்ந்தெடுக்க மாட்டார்கள். இதற்கு அடுத்த திட்டத் துக்கு செல்ல வேண்டும் என்றால் 499 ரூபாய்க்குத்தான் செல்ல வேண்டும். கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். அந்த திட்டத்தில் கூட 4ஜிபி மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும். ஒரு ஜிபி 50 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றால் 4ஜிபி எப்படி 499 ரூபாய்?
மேலும் அதிக டேட்டா வேண்டும் என்றால் ரூ.1,000-க்கு மட்டுமே உங்களால் எடுக்க முடியும். இடையில் எந்த விலையும் கிடையாது. 1,000 ரூபாய்க்கு கூட 10 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இதுபோல விலை நிர்ணயம் செய்வதில் நல்ல உத்தியை கடைபிடித்திருக்கிறது.
இன்னொரு விஷயம் இந்த அனைத்து திட்டங்களுமே 28 நாட்களுக்கானது. ஒரு வருடத்துக்கு 365 நாட்கள் என்னும் போது 13 முறை கட்டணம் செலுத்தியாக வேண்டும்.
எப்படி இலவசம்?
எப்படி குரல் அழைப்புகள் இலவச மாகக் கொடுக்க முடியும் என்பது அடுத்த கேள்வி? அனைத்து அழைப்புகளும் இணையம் வழியே செல்கிறது. உதார ணத்துக்கு வாட்ஸ்அப்-பில் நாம் எப் படி பேசுகிறோமோ அல்லது தகவல் அனுப்புகிறோமோ அதேபோல இங்கேயும். அதனால் குரல் அழைப்புகளை இலவசமாக கொடுக்கிறது.
ஐடிஎப்சி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் தகவல்படி 8 கோடி வாடிக்கை யாளர்கள் ரிலையன்ஸ் ஜியோ வசம் இருப்பார்கள். ஒரு மாதத்துக்கு ஒரு வாடிக்கையாளர் மூலம் கிடைக்கும் கட்டணம் 180 ரூபாய் என்ற அளவில் இருக்கும். அடுத்த மூன்று வருடங்களில் பிரேக் ஈவன் ஆகும் என தெரிவித்திருக்கிறது. கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் 2019-20-ம் நிதி ஆண்டில் பிரேக் ஈவன் ஆகும் என கணித்திருக்கிறது.
எடில்வைஸ் நிறுவனம் கூறும் போது 500 ரூபாய்க்கு கீழ் இரு பேக்கேஜ் மட்டுமே இருப்பதால் அதிக வாடிக்கையாளர்கள் ரிலையன் ஸுக்கு செல்லும் வாய்ப்பு குறைவு. தற்போதைய தொலைதொடர்பு நிறு வனங்கள் பல திட்டங்களை வைத் துள்ளன. அதனால் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான திட்டத்தை தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள் என்றும் கூறியிருக்கிறது.
கோடக் செக்யூரிட்டீஸ் கூறும் போது ஆரம்பத்தில் இலவசங்களால் வாடிக்கையாளர்கள் வருவார்கள். தற்போது இ-காமர்ஸ் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வதற்கு சிரமப்படுவது போன்ற சூழ்நிலை இருக்கும். வாடிக்கை யாளர்கள் யாருக்கும் உண்மையாக இருக்க மாட்டார்கள் என்று கூறியிருக்கிறது. நான்கு வருடங்களில் லாபம் சம்பாதித்தாலும் மொத்த முதலீட்டை மீண்டும் எடுப்பதற்கு 7-10 வருடங்கள் கூட ஆகலாம் என்ற கருத்தும் சந்தையில் இருக்கிறது.
ரிலையன்ஸ் மீன் பிடிக்குமா என்பது தெரியவில்லை ஆனால் மொத்த குட்டையையும் குழப்பி இருக்கிறது. டாடா டொகோமோ ஒரு வினாடிக்கு ஒரு பைசா என்னும் திட்டத்தை அறிவித்த போது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தடுமாறின. அதன் பிறகு இப்போது…!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT