Published : 13 Jun 2016 10:08 AM
Last Updated : 13 Jun 2016 10:08 AM
மொபிலியோ தயாரிப்பை நிறுத்திவிட்ட ஹோண்டா நிறுவனத்திற்கு புது தெம்பை அளித்திருக்கிறது பிஆர்வி. காம்பக்ட் எஸ்யூவி மாடல் கார்களில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிப்பதற்காக பல்வேறு அம்சங்களுடன் ஹோண்டா பிஆர்வி வெளிவந்துள்ளது.
மாருதி சுசூகியின் எர்டிகாவுக்கு போட்டியாகத்தான் ஹோண்டா நிறு வனம் மொபிலியோவை 2014ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்தியது. ஆனால் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டிருந்தும் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை ஆகவில்லை.
மொபிலியோ அறிமுகப்படுத்தும் போதே மாருதி சுசூகி நிறுவனம் எர்டிகாவின் விலையை ரூ.80,000 வரை குறைத்தது. இதனால் ஆரம்பத்திலேயே மொபிலியோவின் விற்பனை தடுமாறியது. அறிமுகப்படுத்திய 7 மாதத்திலேயே விற்பனை 70 சதவீதம் குறைந்தது. இதற்கு மிக முக்கிய காரணம் மொபிலியோவின் விலை.
எர்டிகா டீசல் காரை விட மொபிலியோ டீசல் கார் 2 லட்சம் வரை அதிகமாக இருந்தது. இதனால்தான் கடைசியில் ஹோண்டா மொபிலியோ தயாரிப்பை நிறுத்தியது. தற்போது புது உத்வேகத்துடன் பிஆர்வி மூலம் காம்பெக்ட் எஸ்யூவி ரக சந்தையில் இறங்கியுள்ளது. காம்பாக்ட் ரக எஸ்யுவி மாடல் கார்களுக்குதான் தற்போது இந்திய சந்தையில் கடுமையான போட்டி நிலவுகிறது.
ஹூண்டாய் கிரெடா, மாருதி சுசூகியின் எஸ் கிராஸ், ரெனால்ட் டஸ்டர், நிஸ்ஸான் டொரானோ என வரிசைக் கட்டி நிற்கின்றன. ஆனால் இந்த போட்டியை சமாளிக்கும் வகையில் பல்வேறு புதிய அமசங்களுடன் பிஆர்வியை உருவாக்கியுள்ளது ஹோண்டா நிறுவனம்.
கடந்த மே மாதம்தான் ஹோண்டா நிறுவனம் பல்வேறு நகரங்களில் பிஆர்வியை அறிமுகப்படுத்தியது. சுற்றுலா நகரமான கோவாவின் கடற்கரை சாலைகளில் பிஆர்வி காரை ஓட்டிப்பார்த் தேன். நம் நாட்டினவர் மட்டுமல்லாமல் வெளிநாட்டினவரையும் திரும்பி பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது பிஆர்வி காரின் வடிவமைப்பு.
வெளிப்புறத் தோற்றம்
காரின் முன்பக்கத் வெளிப்புறத் தோற்றம் பிரீமியம் எஸ்யூவி காரின் தோற்றத்தைத் தருகிறது. மிக அகலமான பட்டைக்கு நடுவே ஹோண்டாவின் லோகோ பதிக்கப்பட்டுள்ளது. மேலும் புரொஜக்டர் முகப்பு விளக்குகள், எல்இடி பொஷிசன் விளக்குகள் என பல்வேறு அம்சங்கள் முன்பக்கத்திற்கு சிறப்புத் தோற்றத்தை அளிக்கின்றன.
கிரெடாவை விட அளவில் பெரியதாக பிஆர்வி இருக்கிறது. மேலும் ஹோண்டா பிஆர்வியின் முன்பக்க வடிவமைப்பு சிஆர்வியை நமக்கு நினைவூட்டுகிறது. 16 அங்குல அலுமினியம் சக்கரங்கள் கொண்டிருப்பது புது விதமான தோற்றத்தைத் தருகிறது.
உட்புறத் தோற்றம்
உட்புறத் தோற்றத்தில் பிஆர்வி பல்வேறு வசதிகளை கொண்டிருக் கிறது. கருப்பு கலரை மையமாக வைத்து உட்புறத் தோற்றத்தை வடிவமைத் துள்ளனர். 3டி ஸ்பீடாமீட்டர், பல தகவல்களை வழங்கும் டிஸ்பிளே, மேம்படுத்தப்பட்ட புளூடுத் ஆடியோ சிஸ்டம்ஸ் என பல வசதிகள் இருக்கின்றன. மூன்று வரிசை இருக்கைகள் இருப்பது பிஆர்விக்கு பலம்.
மற்ற காம்பாக்ட் எஸ்யூவிகளான கிரெடா, டஸ்டர் போன்றவற்றில் இரண்டு வரிசை மட்டுமே உள்ளன. முதல் வரிசையில் டிரைவர் இருக்கையின் உயரத்தை அதிகப்படுத்தவோ குறைத்து கொள்ளவோ முடியும். இட வசதிக்கு அதிக முக்கியத்துவத்தை ஹோண்டா நிறுவனம் கொடுத்துள்ளது. பின்பக்க இருக்கைகளிலும் இட வசதி அதிகமாக இருக்கிறது. ஆனால் மூன்றாவது வரிசையில் பெரியவர்கள் காலை மடக்கி உட்காருவதற்கு சிரமமாக இருக்கிறது. பூட் பேஸ் 223 லிட்டர் அளவிற்கு இருக்கிறது.
இன்ஜின்
ஹோண்டா பிஆர்வி பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகைகளிலும் கிடைக்கிறது. 4 சிலிண்டர்கள் கொண்ட 1497 சிசி திறனில் இன்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது. மொபிலியோ ஐ-விடெக் வெர்ஷனில் மட்டும்தான் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இருந்தது. ஆனால் பிஆர்வி 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இருப்பதால் சிறந்த செயல்பாட்டை தரும்.
பாதுகாப்பு
பாதுகாப்புக்கு பிஆர்வியில் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட பொறியியல் தொழில் நுட்பத்தில் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு ஏர் பேக்குகள் உள்ளன.
பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் இ, எஸ், வி, வி எக்ஸ் என 4 நான்கு மாடல்களில் வெவ்வேறான மாடல்களில் பிஆர்வி கிடைக்கிறது. அதுமட்டுல்லாமல் கூடுதலாக பிஆர்வி சிவிடி பெட்ரோல் என்ற பிரத்யேக மாடலும் கிடைக்கிறது.
தற்போது 5,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. காம்பாக்ட் எஸ்யூவி மாடலில் கடுமையான போட்டி நிலவி வந்தாலும் வெளிப்புறத் தோற்றம் ஹோண்டாவின் பெட்ரோல் இன்ஜின் என அனைத்து அம்சங்களிலும் மற்ற கார்களுக்கு கடுமையான போட்டி யாளராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
டெல்லி மற்றும் என்சிஆர் பிராந்தியத் தில் புதிய டீசல் கார்களுக்கு விதிக்கப் பட்டுள்ள தடை பிஆர்வி-யை எந்த வகை யிலும் பாதிக்காது. எனவே தலைநகரிலும் இது கோலோச்ச முடியும்.
பிஆர்வியை `LET THE HUNT BEGIN’ என்று ஹோண்டா நிறுவனம் விளம்பரப்படுத்தி வருகிறது. ஆம் வேட்டை ஆரம்பித்துவிட்டது போலும்!
devaraj.p@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT