Published : 20 Jun 2016 11:00 AM
Last Updated : 20 Jun 2016 11:00 AM
சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (ஜேஎல்ஆர்) நிறுவனம் பிரேசிலில் ஆலையைத் தொடங்கியுள்ளது.
பொருளாதார மந்த நிலை காரணமாக கார் விற்பனை பிரேசிலில் சரிந்து வரும் நிலையில் அங்கு ஆலையைத் தொடங்கியுள்ளது ஜாகுவார்.
ஜாகுவார் நிறுவனத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கையகப்படுத்திய பிறகு மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய விரிவாக்க நடவடிக்கை இதுவாகும்.
இதன் மூலம் பிரேசிலில் ஏற்கெனவே மிக வலுவான தளம் அமைத்துள்ள ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் தயாரிப்புகளுடன் போட்டிக் களத்தில் குதிக்கிறது ஜாகுவார். பிரேசிலில் வெளிநாட்டு தயாரிப்புகளுக்கு கடுமையான சுங்க வரி விதிப்பு இருப்பதால் அந்நாட்டிலேயே ஆலையைத் தொடங்கி விற்பனை செய்யும் முடிவை எடுத்துள்ளது ஜாகுவார்.
2013-ம் ஆண்டிலேயே இங்கு ஆலை தொடங்கும் முடிவு எடுக்கப்பட்டு 35 கோடி டாலர் முதலீட்டில் ஆலை தொடங்கப்படும் என அறிவித்தது.
பிரேசிலில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார தேக்க நிலை நிலவும் சூழலில் அங்கு கார் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மேலும் குறையலாம் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
பிரேசிலில் உயர் ரக கார்களின் விற்பனை குறையவேயில்லை. இதனால் தங்கள் தயாரிப்புகளுக்கு சிறந்த வரவேற்பு இருக்கும் என ஜாகுவார் கணித்துள்ளது.
இருப்பினும் கடந்த ஆண்டில் ஜனவரி முதல் மே மாதம் வரையான காலத்தில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையான ஜாகுவார் கார்களைக் காட்டிலும் இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரையான காலத்தில் விற்பனையான கார்களின் எண்ணிக்கை 4 சதவீதம் குறைவாகும்.
ஆனால் ஆட்டோமொபைல் துறையின் ஒட்டுமொத்த சரிவு 27 சதவீதமாகும். அந்த வகையில் ஜாகுவார் விற்பனை சரிவு பெரிய விஷயமல்ல என்று இத்துறை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
ஜாகுவார் நிறுவனம் 2014-ம் ஆண்டில் சீனாவில் ஆலையைத் தொடங்கியது. இந்த ஆலை கூட்டு ஆலையாகும். ஆனால் பிரேசிலில் தொடங்கப்பட்டது இந்நிறுவனத்தின் 100 சதவீத முதலீட்டில் தொடங்கப்பட்டதாகும்.
இந்த ஆலையில் லாண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் மற்றும் ரேஞ்ச் ரோவர் எவோக் ஸ்போர்ட் மாடல் கார்கள் உற்பத்தி செய்யப்படும். இந்த ஆலையின் ஆண்டு உற்பத்தி 24 ஆயிரம் கார்களாகும். இந்த ஆண்டு 10 ஆயிரம் கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு உலகம் முழுவதும் ஜாகுவார் கார்கள் 5 லட்சம் வரை விற்பனையாகியுள்ளன. இந்த விற்பனையை 10 லட்சமாக எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது டாடா மோட்டார்ஸ். தாய் நிறுவனமான டாடா மோட்டார்ஸின் நிதி உதவியின்றி விரிவாக்க நடவடிக்கைகளை ஜாகுவார் மேற்கொண்டுள்ளது.
இங்கிலாந்தில் உருக்கு ஆலை கையகப்படுத்தியதில் கடுமையான நஷ்டத்தை சந்தித்த டாடா குழுமம், ஜாகுவார் நிறுவனத்தைக் கையகப்படுத்தியதன் மூலம் லாபம் ஈட்டியுள்ளது. எதிர்வரும் காலத்தில் பிரேசில் ஆலையும் டாடாவுக்கு லாபகரமான ஆலையாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT