Published : 26 Sep 2016 10:27 AM
Last Updated : 26 Sep 2016 10:27 AM

குழந்தைகளைப் பாதிக்கும் கார் இருக்கைகள்!

`பேபி ஆன் போர்ட்’ என்ற வாசகத்துடன் சில பல கார்களை நாம் அன்றாடம் பார்த்திருக்கிறோம். காரில் குழந்தை பயணிக்கிறது என்பதை அந்த வாகனங்களைக் கடந்து செல்லும் அல்லது பின்னால் வரும் வாகனங்களுக்கு அறிவுறுத்துவதற்காகவே இத்தகைய வாசகங்கள் காரில் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் குழந்தைகள் பயணிக்கும் காரின் இருக்கைகள் சரியாக பொறுத்தப்படுவதில்லை என்ற அபாயகரமான விஷயம் எத்தனை கார் உரிமையாளர்களுக்குத் தெரியும்?.

ஐந்து காரில் நான்கில் குழந்தைகளுக்கான இருக்கைகள் சரியாகப் பொறுத்தப்பட்டிருப்பதில்லை என்பதை அமெரிக்காவின் ஒரேகான் மாகாண மருத்துவ பல்கலைக் கழக ஆய்வு சுட்டிக் காட்டியிருக்கிறது.

உயர் வகுப்பினர்தான் கார்களைப் பயன்படுத்துவர் என்ற நிலை மாறி இப்போது நடுத்தர மக்களும் போக்குவரத்து வசதிக்காக காரைப் பயன்படுத்துகின்றனர்.

பிறந்த குழந்தையை வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்குப் பெரும்பாலும் கார்களைப் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் கார்களில் குழந்தையை அழைத்துச் செல்வது பல்வேறு உடல் பாதிப்புகளுக்குக் காரணமாகிறது என்று மருத்துவ அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

சில குழந்தைகளுக்கு மிகவும் மோசமான உடல் பாதிப்பு ஏற்பட கார் பயணம் காரணமாகிறது. அதிலும் குறிப்பாக அதிலுள்ள இருக்கைகள் முக்கியக் காரணமாக உள்ளது என்று மருத்துவ ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

குழந்தை பிறந்தவுடன் பெற்றோர்கள் மருத்துவமனையிலிருந்து தாயையும் சேயையும் வீட்டுக்குப் பத்திரமாகக் கொண்டு செல்வதில் மிகுந்த அக்கறை செலுத்துவர். ஆனால் இந்த விஷயத்தில் அறிவுபூர்வமாக சில விஷயங்களை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக காரின் இருக்கைகள் மிகவும் கடினமானவையாக உள்ளன.

குழந்தையை வீட்டுக்கு எடுத்துச் செல்லும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். கார் வைத்திருப்போர் குழந்தைகளுக்கான இருக்கையை தொடர்ந்து உபயோகிக்க நேர்ந்தால் இருக்கை சரிவர பொறுத்தப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். இவ்விதம் பொறுத்தப்படவில்லை எனில் குழந்தைகளின் எலும்பு பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படுகின்றன. குறிப்பாக முதுகுத் தண்டுவடம் பாதிப்பு சிறு குழந்தையாக இருக்கும்போதே ஏற்படுவதற்கு கார்களின் இருக்கை முக்கியக் காரணம் என அறிக்கை தெரிவித்துள்ளது.

இதற்காக தற்போது அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளை வைத்து எடுத்துச் செல்வதற்கான இருக்கையை காரில் பொறுத்தித் தர ரோபோ இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை கன கச்சிதமாக எவ்வித மனிதத் தவறும் இன்றி பொறுத்துகின்றன. இதன் மூலம் குழந்தைக்கு எவ்வித உடல் பாதிப்பும் ஏற்படுவதில்லை. பெற்றோர்களும் மகிழ்ச்சியாக இருக்க வழி ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள கார்களில் குழந்தைகளுக்கான இருக்கைகளை சரிவரப் பொறுத்தும் நுட்பம் எப்போது வரப்போகிறது?

கார் தயாரிப்பு நிறுவனங்கள் இனி குழந்தைகளுக்கான இருக்கை தயாரிப்பு அதை சரிவர பொறுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டியது கட்டாயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x