Published : 12 Sep 2016 10:38 AM
Last Updated : 12 Sep 2016 10:38 AM

மொபைல் போனில் லைசென்ஸ், ஆர்சி புத்தகம்

வாகனத்தை சர்வீஸ் சென்டரிலிருந்து எடுத்து அங்கிருந்து அப்படியே அலுவலகத்துக்கு எடுத்துச் செல்வோர் பலர். இதில் ஒரு பிரச்சினையும் இருக்காது. ஆனால் நடுவழியில் வாகன சோதனை என்ற பெயரில் போக்குவரத்து காவலர் வாக னத்தின் ஆர்சி புத்தகம், இன்ஷூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களைக் கேட்கும்போதுதான், அடடா, சர்வீசுக்கு விடும்போது அதைக் கையோடு எடுத்துச் சென்று வீட்டில் பத்திரமாக வைத்துவிட்டது நினைவுக்கு வரும். பிறகென்ன, போலீசாரை ஏதாவது ஒரு வழியில் சமாளித்து நொந்தபடியே வீட்டுக்குச் செல்வோர் பலர்.

வாகனங்களில் அதற்குரிய ஆவணங் களின் நகல் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். கார் உள்ளிட்டவற்றில் இதைப் பத்திரப்படுத்தும் வசதி இருக்கும். ஆனால் இரு சக்கர வாகனங்களுக்கு இதைப் பத்திரப்படுத்தி வைப்பதே பெரும் பிரச்சினைதான்.

இதற்கும் இப்போது தீர்வு வந்து விட்டது. இனி போக்குவரத்து காவலர் உரிய ஆவணங்கள் கோரி வாகனத்தை நிறுத்தினால் நீங்கள் உங்களது செல்போனில் அந்த விவரங்களை காட்டிச் சென்றுவிடலாம்.

டிஜி லாக்கர் எனப்படும் மின்னணு பெட்டகத்தில் வாகனங்களின் பதிவுச் சான்று (ஆர்சி), காப்பீடு மற்றும் வாகன ஓட்டியின் லைசென்ஸ் விவரத்தை பதிவு செய்து மின்னணு ஆவணமாக பாதுகாக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போலீசார் தேவைப்படும்போது இந்த விவரங்களை டிஜி லாக்கரிலிருந்து பரிசோதித்துக் கொள்ள முடியும்.

மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இணைந்து கடந்த வாரம் இத்தகைய வசதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வசதியை அனைவருமே பயன்படுத்திக் கொள்ள முடியும். லாக்கர் என்ற உடனேயே வங்கிகளில் உள்ள லாக்கர் என்றோ அதற்கு பணம் செலுத்த வேண்டும் என்றோ நினைக்க வேண்டாம். வங்கி லாக்கரில் பணம், நகை, சொத்துகளை பாதுகாப்பாக வைப்பது போல டிஜிட்டல் லாக்கரில் உங்களது மின்னணு தகவலை பாதுகாப்பாக வைக்கலாம்.

உங்களது ஆதார் அடையாள அட்டையுடன் உங்களது செல்போன் எண்ணை இணைத்து இந்த டிஜிட்டல் லாக்கரில் கணக்கைத் தொடங்கலாம்.

இந்த சேவை முழுமையாக செயல்படும்போது ஆவணம் பற்றிய விவரம், ஓட்டுநர் உரிமம் (லைசென்ஸ்) உள்ளிட்டவற்றை தேசிய ஆவண பதிவுகளின் மூலம் பெற முடியும். நாட்டின் எந்த மூலையிலிருந்தாலும் மின்னணு தகவலை உபயோகிப்பாளரின் செல்போனில் பார்த்து அனுப்ப முடியும்.

வாகன உரிமையாளர் பற்றிய விவரம், ஓட்டுநர் உரிமம் குறித்த விவரங்களை சரிபார்க்க போக்குவரத்து காவலரிடம் ஒரு செயலி இருந்தால் போதுமானது. இதற்கான செயலியை (ஆப்) விரைவிலேயே தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட உள்ளது.

இந்த மின்னணு வாகன சோதனை டெல்லி மற்றும் தெலங்கானாவில் நடை முறைக்கு வந்துவிட்டது. போக்குவரத்து காவலர்களும் அபராதத் தொகைக்கு ரசீது அளிக்காமல் இ-சலானை வழங்குகின்றனர்.

அதிக வேகமாகச் செல்வது, தடையை மீறிச் செல்வது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டாலும், வாகன எண்ணைக் குறித்து உடனடியாக இந்த செயலி மூலம் அபராதம் விதிக்கவும் முடியும்.

இந்த செயலி நாடு முழுவதும் விரைவிலேயே செயல்பாட்டுக்கு வந்து விடும். போக்குவரத்து காவலருக்கு போக்கு காட்டிவிட்டு வந்துவிட்டோம் என நினைக்க முடியாது. உங்கள் வாகன எண்ணுக்கான அபராதம் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து கழிக்கப் பட்டு விடும். புதிய தொழில்நுட்பத்தை வரவேற்கும் அதே நேரத்தில் விதிகளையும் மதித்து நடக்க வேண்டிய கட்டாயம் நிச்சயம் உருவாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x