Published : 16 Jan 2017 11:52 AM
Last Updated : 16 Jan 2017 11:52 AM
அதிபர்களுக்கான கார்கள் அதிக பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டவை. அதிலும் குறிப்பாக அமெரிக்க அதிபர் மற்றும் ரஷிய அதிபர்களுக்கான கார்களில் அதிக பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும்.
அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் `பீஸ்ட்’ காரை விட அதிக பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டது ரஷிய அதிபர் பயன்படுத்தும் கார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ரஷிய அதிபர் பயன்படுத்தும் மெர்சிடஸ் எஸ் பிரிவு லிமோசன் காரின் விலை 2 லட்சம் டாலரை விட அதிகமாகும். இந்தக் காருக்கு கோர்டெஜ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்களும் இத்தகைய காரை வாங்கிப் பயன்படுத்த முடியும். இந்த ஆண்டில் இத்தகைய கார்களை முக்கிய பிரமுகர்களுக்குத் தயாரித்து அளிக்க நிறுவனம் முன்வந்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அதாவது 2020-ம் ஆண்டு வரை இக்கார்கள் தயாரிக்கப்படும். முதல் கட்டமாக 200 கார்களைத் தயாரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மொத்தம் 5 ஆயிரம் கார்களை 3 ஆண்டுகளுக்குள் தயாரிக்க முடிவு செய்துள்ளது. லிமோ, மினிவேன், செடான், எஸ்யுவி ஆகிய நான்கு மாடல்களில் இத்தகைய அதிக பாதுகாப்பு நிறைந்த கார்களைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கார் உற்பத்திக்கென 50 கோடி டாலரை ரஷிய அரசு ஒதுக்கியுள்ளது. அதிக பாதுகாப்பு அம்சங்களை அளிப்பதற்கான பணியை மத்திய ஆராய்ச்சி மற்றும் ஆட்டோமொபைல் ஆட்டோமோடிவ் மையம் (நாமி) உருவாக்கி வருகிறது. இந்தக் குழுவில் ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரியா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த காருக்கான பவர் டிரைனை ஜெர்மனியைச் சேர்ந்த போர்ஷே நிறுவனம் உருவாக்கித் தருகிறது. எத்தகைய பாதுகாப்பு அம்சங்கள் இந்தக் காரில் இடம்பெறும் என்பது இன்னமும் பரம ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதி நவீனமான இந்த கார் துப்பாக்கியால் துளைக்க முடியாது போன்ற அடிப்படை அம்சங்களையும் உள்ளடக்கியது. இந்த காரில் வி12 டர்போ இன்ஜின் 850 ஹெச்பி உயர் திறன் கொண்டதாக இணைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபருக்கான காரின் முன்பக்கத் தோற்றத்தைக் கொண்டதாக இந்தக் கார் இருக்கும் என்றும், அழகிய வடிவமைப்பைக் கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. பொதுவாக எந்த ஒரு போட்டியும் அமெரிக்கா, ரஷியா ஆகிய இரு பெரும் வல்லரசுகளிடையேதான் இருக்கும். ரஷிய அதிபருக்கான கார் அமெரிக்க அதிபரின் காரை விட விலை அதிகம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இரு பெரும் வல்லரசு நாடுகளின் அதிபர்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய பாதுகாப்பு மிகுந்த கார்கள் இனி முக்கிய பிரமுகர்களுக்கும் கிடைக்கும் என்பது மகிழ்ச்சியான விஷயமே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT