Published : 18 Jan 2016 10:50 AM
Last Updated : 18 Jan 2016 10:50 AM
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தான் செயின் (குறள் 497) |
உங்களுக்கு கிரெடிட்கார்டு தெரியும்; டெபிட்கார்டு தெரியும்; காஷ்கார்டு தெரியுமா? அதான் பிரீபெய்ட் வெர்சுவல் கார்டு, மொபைல்வாலட் என்றெல்லாம் சொல்கிறார்களே! உங்கள் கைபேசிக்குள் ஒளிந்திருக்கும் பணம் இது! வங்கிக்குப் போகாமல், ஏன் உங்களுக்கு வங்கிக் கணக்கே இல்லையென்றால் கூட நீங்கள் இதைப் பயன்படுத்தி மற்றொரு ஊரிலிருப்பவருக்குப் பணம் அனுப்பலாம். கரண்ட் பில் கட்டலாம். டாப்அப் செய்யலாம். ரயில் டிக்கெட்டும் சினிமா டிக்கெட்டும் கூட எடுக்கலாம். பேடிஎம் போன்ற பல நிறுவனங்கள் இச்சேவையை அளித்தாலும் இன்று இச்சந்தையைக் கலக்கிக் கொண்டிருப்பது ஐகேஷ் எனும் காஷ்கார்டு சேவையே!
பீஹாரிலிருந்து சென்னை வந்து கட்டிட வேலை செய்பவரை எடுத்துக் கொள்ளுங்கள். அத்தொழிலாளியிடம் இணைய வசதி இருக்காது; வங்கிக்குச் செல்ல நேரம் இருக்காது. ஆனால் கைபேசி இல்லாமல் இருக்குமா? அம்மாதிரியான ஆட்கள் தெருக்கோடியில் இருக்கும் ஸ்மார்ட்ஷாப் எனும் முகவரின் கடைக்குச் சென்று தங்களது கணக்கில் பணத்தைச் செலுத்திவிடலாம். பின்னர் தேவையான பணத்தை கைபேசி மூலமாக அனுப்பினால், சில நொடிகளில் அவரது உறவினர் தமது ஏடிஎம் கார்டு மூலம் அதை எடுத்துக் கொள்ளலாம். கோயம்பேடு சந்தைகளிலுள்ள சிறு வியாபாரிகள் இச்சேவையைப் பயன்படுத்துகிறார்கள்!
இதன் பின்னணி சுவாரஸ்யமானது! 2008ல் கைபேசிகளின் ஆதிக்கத்தால் எஸ்டீடி பூத்துகளுக்கு தேவை குறைந்ததால் பல ஆயிரம் கடைகளை மூடிவிடக்கூடிய சூழ்நிலை உருவா யிற்று. ஆனால் அதே சமயம் பல லட்சக்கணக்கான தொழிலா ளர்கள் வங்கி மூலம் பணம் அனுப்புவதில் சிரமப்பட்டனர்.
இவையிரண்டையும் பார்த்த ராமுஅண்ணாமலை, பழனியப்பன் எனும் நம்மூர் சகோதரர்களுக்கோ இதில் ஒரு அரிய சேவை மற்றும் வர்த்தக வாய்ப்பு கண்ணுக்குத் தெரிந்திருக்கிறது. வங்கிகளே தயங்கிய காலத்தில் அவர்கள் தைரியமாக இறங்கினார்கள். இவ்விரண்டையும் இணையத்தினால் இணைத்தார்கள். ஐகேஷ் என்னும் கைபேசி பணப்பரிமாற்றச் சேவையை உருவாக்கி ஒரு அமைதிப் புரட்சியே செய்துவிட்டார்கள். இன்று இந்தியாவெங்கும் 90,000 ஸ்மார்ட்ஷாப்புகளில் ஐகேஷ்-ஐ பயன்படுத்தி நடக்கும் பரிவர்த்தனைகள் நாளொன்றுக்கு இரண்டரை லட்சமாம்!
சச்சின் பன்சால், பின்னி பன்சால் கதையும் இதுதான். 2007ல் அமெரிக்காவில் அமேசான் இ-காமர்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இணைய வணிகம் குறித்து இந்தியாவில் யாரும் யோசிக்காத காலம் அது. இந்தியர்கள் நேரில் பார்க்காத பொருளை வாங்குவார்களா எனப் பலரும் அஞ்சிய நேரம் அது. ஆனால் இந்தியாவில் பலகோடி மக்கள் இருக்கிறார்கள்.
அமெரிக்காவைப் போல இங்கும் பொருட்களை வாங்கும் அணுகுமுறை மாறுமென அவர்கள் நம்பினார்கள். அங்கிருந்த நல்லவேலையை விட்டுவிட்டு இங்கு வந்து துணிந்து 4 லட்சம் மூலதனத்தில் புத்தகம் விற்க தொடங்கிய நிறுவனம்தான் பிளிப்கார்ட்! இன்று 33,000 பேர் வேலை செய்கிறார்கள். விற்பனை சுமார் 3,000 கோடி! நிறுவனத்தின் மதிப்பீடு ஒரு லட்சம் கோடி ரூபாய்!! செயலாற்றும் திறனை எண்ணி இடம் பார்த்து செய்தால் வெற்றி பெற துணிவு ஒன்றே போதும் என்கிறார் வள்ளுவர்.
somaiah.veerappan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT