Published : 09 Jan 2017 10:50 AM
Last Updated : 09 Jan 2017 10:50 AM

பட்டு சாலை 2.0

பழமையின் நவீன வடிவங்களை ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கு ஏற்ப உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் சீனாவும் ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. அதுதான் சில்க் ரோடு 2.0 என்று குறிப்பிடப்படும் ஒன் பெல்ட், ஒன்ரோடு முயற்சி. அதில் முதற்கட்ட சாதனையையும் நிகழ்த்தியுள்ளது.

எல்லா நாடுகளும் தங்களது பாரம்பரிய வர்த்தக முறைகளுக்கு நவீன வடிவங்களை கொடுத்து வருகின்றன. நாடுகளிடையே வர்த்தகம் செய்ய கடல் மார்க்கங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு புதிய சந்தைகள் உருவானது என்றால், அதற்கு முன்பிருந்தே சீனா சர்வதேச வர்த்தகத்தில் முக்கிய இடத்தில் இருந்துள்ளது. பண்டமாற்று காலத்திலிருந்தே உலகம் தழுவிய வர்த்தக நடவடிக்கைகள் சீனா மேற்கொண்டு வருகிறது. மத்திய ஆசியா, ஐரோப்பிய நாடுகளிடையேயான தரை வழி போக்குவரத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது.

சீனாவிலிருந்து பாரசீகம் வழியாக மேற்கு ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளுக்கு நடைபெற்ற தரை வழி வர்த்தகத்தில் முக்கியமான மார்க்கம் சில்க் ரோடு என்றழைக்கப்பட்டது. இது சீனா, இந்தியா, பெர்சியா, அரேபியா, எகிப்து, ஐரோப்பா என்று நீண்டது. இந்த தரை வழி வர்த்தகத்தில் சீனாவின் பட்டு முக்கிய வர்த்தக பொருளாக விளங்கியதால் இதற்கு பட்டு சாலை என பெயர் வந்தது. ஆனால் கால மாற்றத்தில் பட்டு சாலை என்பதே மறைந்து விட்டது. நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்திலும் பல மாற்றங்கள் உருவாகிவிட்டன.

இப்போது சீனா இந்த பட்டு சாலை மார்க்கத்தை புதிய வடிவில் ரயில் வழி பாதையாக உருவாக்கியுள்ளது. இதற்காக பல ஆயிரம் கோடியை ஒதுக்கி முயற்சிகளை எடுத்துள்ளது. சமீபத்தில் இந்த பட்டு சாலை மார்க்கத்தில் சரக்கு ரயில் சேவையையும் தொடங்கிவிட்டது. சீனாவின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக இந்த திட்டத்துக்கு நவீன வடிவம் கொடுத்ததாக சீனா கூறியுள்ளது.

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள யிவூ இன் சர்வதேச ஏற்றுமதி மையத்திலிருந்து புறப்பட்டுள்ள ரயில் கஜகஸ்தான், ரஷ்யா, பெலாரஸ், போலந்து, ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ் வழியாக லண்டன் சென்றடைகிறது. சுமார் 12,000 கிலோமீட்டர் தூரத்தை 18 நாட்களில் கடந்து லண்டனை சென்றடையும் என்று சீனா ரயில் கார்ப்பரேசன் கூறியுள்ளது. புத்தாண்டு தொடக்கத்தின் போது இந்த சேவையை சீனா தொடங்கியுள்ளது.

இந்த ரயிலின் சரக்கு பெட்டகங்களில் வீட்டு உபயோகப் பொருட்கள், ஆயத்த ஆடைகள், பைகள், சூட்கேஸ்கள் போன்றவை ஏற்றப்பட்டுள்ளன. இந்த பட்டு சாலை சரக்கு ரயில் சேவை மூலம் சீனாவில் ஏற்றுமதியில் புதிய மாற்றம் உருவாகும் என்றும், ஐரோப்பிய - சீனா வர்த்தகம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. யுவூ ஏற்றுமதி மண்டலம் சிறு உற்பத்தியாளர்களுக்கானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாகவே சீன பொருளாதாரத்தில் தேக்கமான நிலை நிலவுகிறது. உள்நாட்டு நிகர உற்பத்தி 6 முதல் 7 சதவீதத்துக்குள் என்கிற நிலையிலேயே உள்ளது. 2014-ம் ஆண்டில் 2.34 லட்சம் கோடிக்கு நடைபெற்ற ஏற்றுமதி வர்த்தகம், 2015-ம் ஆண்டில் 2.27 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.

இந்த நிலையில்தான் தனது பாரம்பரிய வர்த்தக பாதைக்கு புதிய வடிவத்தை சீனா கொடுத்துள்ளது. ‘ஒன் பெல்ட், ஒன் ரூட்’ என்கிற இந்த திட்டத்துக்காக பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கியுள்ளது. இந்த சரக்கு ரயில் சேவைக்கு அடுத்து, தரை வழியாகவே ஆப்பிரிக்க நாடுகளுக்கு சரக்குகளைக் கொண்டு செல்லவும் திட்டமிட்டு வருகிறது. சுமார் 15 நகரங்களையும் 7 நாடுகளையும் கடந்து செல்வது இந்த ரயிலுக்கு மிகப் பெரிய சவால்தான். எப்படி இருந்தாலும் தனது ஏற்றுமதிக்காக ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது சீனா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x