Published : 20 Mar 2017 11:25 AM
Last Updated : 20 Mar 2017 11:25 AM
இந்திய நெசவு தொழில் மிக தனித்துவமானது. 5,000 வருடங்களுக்கு முன்பு சிந்து சமவெளி காலக் கட்டத்திலிருந்தே நம் நெசவுத் தொழில் கைவினைஞர்களின் படைப்பாற்றல் துணி நெய்தலில் வெளிப்பட்டிருக்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு ஆடை வடிவமைப்பு, அதையொட்டிய கலாசாரம் என பரந்து விரிந்தது நமது நெசவு தொழில்நுட்பம். இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது கைத்தறி மிகப் பெரிய பங்காற்றியது. ஆங்கிலேயர்களின் நிறுவனங்கள் இயந்திர நூற்பாலைகளை வைத்து குறைந்த விலையில் துணிகளை உற்பத்தி செய்து வந்தபோது, காந்தி கைத்தறியை போராட்டமாக மாற்றினார். கதரை ஆயுதமாக கையில் எடுத்து வெற்றி பெற்றார்.
இவ்வளவு பாரம்பரியம் மிக்க இந்திய நெசவுத் தொழிலுக்கு மிகப் பெரிய அளவுக்கு திறன் இருந்தாலும் சமகாலத்தில் பல சிக்கல்கள் உருவாகியுள்ளன. மூலப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல், வேலையாட்களின் இடப்பெயர்வு, போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாதது போன்றவை பாரம்பரிய நெசவுத் தொழில் வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடையாக இருக்கின்றன.
தரமற்ற பருத்தி
சில பத்தாண்டுகளுக்கு முன்புவரையும் கூட வெவ்வேறு விதமான பருத்தி வகைகள் இந்தியாவில் இருந்தன. குறிப்பிட்ட பகுதிகளில் விளையும் பருத்தி வகைகள் நெசவுத் தொழிலுக்கு மிகவும் ஏற்றதாக இருந்தன. ஆனால் தற்போது அவை அழிக்கப்பட்டு விட்டன. தற்போது அமெரிக்க பருத்தி வகைகளே இந்தியாவில் அதிகம் விளைகிறது. இந்த பருத்தி வகைகள் கைத்தறி நெசவுத் தொழிலுக்கு ஏற்றதாக இல்லை. தரமான மூலப்பொருள் கிடைக்காமல் பாரம்பரிய நெசவுத் தொழிலில் ஈடுபடுவோர் சிரமப்படுகின்றனர்.
நெசவாளிகள் இடப்பெயர்வு
விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்பை அளிக்கும் தொழிலாக நெசவுத் தொழில் இருந்தது. இந்த தொழிலில் ஈடுபடும் கைவினைஞர் கள் மற்றும் நெசவுத் தொழிலும் இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் பங்காற்றுகின்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் இந்த தொழிலை விட்டு ஏராளமான மக்கள் வெளியேறியுள்ளனர். நிறுவனங்களுக்கு தினக்கூலிகளாக செல்கின்றனர். தொடர்ச்சியாக ஆர்டர் கிடைக்காதது, அரசின் திட்டங்கள் நெசவாளர்களுக்கு சென்று சேராதது போன்றவற்றால் நெசவு குடும்பங்கள் இடப்பெயர்வு நடக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் தற்போது நிறுவனங்கள் விசைத்தறி இயந்திரங்களின் மூலம் பாரம்பரிய தயாரிப்புகளை குறைந்த நேரத்தில் குறைந்த முதலீட்டில் அதிகம் உற்பத்தி செய்கின்றன. இது பாரம்பரியமாக நெசவுத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவாகி உள்ளது. பாரம்பரியமாக நெய்து வரும் தயாரிப்புகள் விலை அதிகமாகவும் இருக்கிறது. ஏனென்றால் அதற்கான மனித உழைப்பு நாட்கள் அதிகமானது. உதாரணமாக கையால் நெய்யக்கூடிய பனாரஸ் புடவையின் விலை 5,000 ரூபாயாக இருக்கிறது. ஆனால் இயந்திரத்தில் நெய்யக்கூடிய பனாரஸ் சேலை 1,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு இரண்டையும் வேறுபடுத்தி பார்க்க முடிவதில்லை என்கின்றனர் நெசவுத் தொழிலாளிகள்.
அரசின் திட்டங்கள்
மேம்படுத்தப்பட்ட நெசவு மேம்பாடு திட்டம், மார்க்கெட்டிங் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம், கைத்தறி நெசவாளிகள் நலத்திட்டம் போன்ற வற்றை அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால் அவற்றின் பலன்கள் முழுமையாக கைத்தறி நெசவாளிகளை சென்றடைவதில்லை. இதற்கென்று தனிப்பட்ட அமைப்பை நிறுவவேண்டியது அவசிய மாக உள்ளது என்று கூறுகின்றனர். மேலும் பாரம் பரிய நெசவு தொழிலாளிகளுக்கு மார்க்கெட்டிங், தற்போதைய சந்தை சூழல், தொழில்நுட்பம் ஆகிய வற்றை பயிற்றுவிக்க வேண்டிய தேவையும் அரசுக்கு உள்ளது. ஏனெனில் தங்களது உற்பத் தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு உரிய படிப்பறிவு அவர்களிடம் இல்லை என்று கூறப் படுகிறது. தவிர விசைத்தறி, கைத்தறி நெசவாளர் களுக்கு என்று தனித்தனியான கொள்கைகள் இல்லை.
மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் சமீபத்தில் இந்தியா ஹேண்ட்லூம் பிராண்டை அறிமுகம் செய்துள்ளது. அதாவது வேறுபட்ட அடையாளத்துடன் தனித்துவமான துணிகளை உற்பத்தி செய்யும் நோக்கில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் எளிதாக பாரம்பரியமாக உற்பத்தி செய்யப்பட்ட துணிகளை எளிதாக அடையாளம் கண்டு வாங்கமுடியும்.
ஆனால் தற்போது பாரம்பரிய நெசவாளிகள் ஏதேனும் இடைத்தரகர்கள் மூலமாகவே தங்களது தயாரிப்புகளை விற்பனை செய்ய முடிகிறது. இதனால் தயாரிப்புக்கான முழுமையான பலன் நெசவாளிகளை சென்றடைவதில்லை. தற்போதைய சூழ்நிலையில் இ-காமர்ஸ் துறை இந்தியாவில் பெருமளவு வளர்ந்து வருகிறது. நெசவாளியோ அல்லது கைவினைஞர்களோ ஒருமுறை பதிவு செய்து விட்டால் அவரது பொருட்களை எளிதாக விற்க முடியும். தங்களது பொருட்களை இந்தியா முழுவதும் விற்பதற்கு இது உதவியாக இருக்கும். அரசோ அல்லது தொண்டு நிறுவனங்களோ இதுபோன்ற வாய்ப்புகளை நெசவாளர்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும்.
இ-காமர்ஸ் நிறுவனங்களின் பங்கு
முக்கிய இ-காமர்ஸ் நிறுவனமான ஸ்நாப்டீல் ஆறு மாநிலங்களில் உள்ள நெசவுத் தொழில் கூட்டுறவு சங்கங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. பேப் இந்தியா, ஜெய்பூர், இந்தியா ரூட்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கைத்தறி விற்பனைக்கு முக்கிய இடம் கொடுத்துள்ளன. பேப் இந்தியா நிறுவனம் கைத்தறி நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 55 ஆயிரம் கைத்தறி நெசவாளிகளை உறுப்பினர்களாக ஒருங்கிணைத்துள்ளது. இவர்களுக்கு ஆடை வடிவமைப்பை அளிப்பது, கைத்தறி உருவாக்கம், சிறு கடன் என பல உதவிகளை மேற்கொள்கிறது. இதன் மூலம் தரமாக கைத்தறி ஆடைகள் தங்களது விற்பனையகத்துக்கு கொண்டு வருகிறது.
மிகச் சமீபத்தில் தங்களது இ-காமர்ஸ் ஸ்டோர் மூலமாகவும் கைத்தறி விற்பனையை பேப் இந்தியா தொடங்கியுள்ளது. இது தவிர கிட்டத்தட்ட அனைத்து இ-காமர்ஸ் நிறுவனங்களும் கைத்தறிக்கு என்று தனி பிரிவில் விற்பனை செய்கின்றன. இதற்காக வரிச்சலுகை போன்றவற்றை இந்த நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன.
காதி சர்ச்சை
பேப் இந்தியா நிறுவனம் தங்களது பருத்தி ஆடைகள் விற்பனையில் காதி என்கிற பெயரை பயன்படுத்தி வந்தது. பொதுவாக பருத்தி ஆடைகளை, கதர் ஆடைகள், காதி ஆடைகள் என்று அழைக்கும் நிலையில், காதி என்கிற பிராண்ட் தங்களுக்கே சொந்தம் என்று இந்திய கதர் பொருட்கள் விற்பனை வாரியம் பேப் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. பேப் இந்தியா உடனடியாக பிராண்ட் பெயர்களை வாபஸ் பெற்றுவிட்டாலும், காதி என்கிற பெயர் கிராமப்புற நெசவுத் தொழிலை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் பாரம்பரிய கைத்தறி நெசவுத் தொழிலை விசைத்தறி இயந்திரங்கள் ஆக்கிரமித்து வரும் நிலையில் காதி என்கிற பெயருக்கு மட்டும் அரசு உரிமை கொண்டாடக் கூடாது. கிராமப்புற சுயசார்பு பொருளாதாரத்தோடு இணைந்த நெசவு தொழிலை காப்பாற்ற வேண்டிய கடமையும் உள்ளது என்பதை உணர வேண்டும்.
- devaraj.p@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT