Published : 04 Jul 2016 10:16 AM
Last Updated : 04 Jul 2016 10:16 AM
வாகனப் புகையைக் குறைக்க ஒவ்வொரு நாடும் பல வித முயற்சிகளை எடுத்து வருகின்றன. டெல்லி மாசைக் குறைக்க 2000 சிசிக்கு அதிகமான கார்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட் டுள்ளது. அதேபோல 15 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச் சூழலை பாதிக்காத வாகனங் கள் தயாரிப்புக்காக பேட்டரி வாகனங் களை தயாரிக்கும் முயற்சியில் முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
பேட்டரி கார், மோட்டார் சைக்கிளின் இழுவைத் திறன், வேகம் குறைவாக இருப்பதால் இவற்றுக்கு பொதுமக்களிடம் போதிய வரவேற்பு இருப்பதில்லை. இதைப் போக்கும் வகையில் விரைவாகச் செல்லும் வாகனங்கள் தயாரிக்கும் முயற்சி வேகமாக நடைபெற்று வருகிறது.
இவை அனைத்துக்கும் முன்னோடி யாக ஸ்வீடனில் மின்சார நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. நம் ஊரில் மின் ரயில்களுக்காக தண்டவாளத்தின் மீது உயர் மின் அழுத்த கேபிள்கள் செல்லும். அதைப்போன்ற கேபிள்களை ஸ்வீடன் உருவாக்கியுள்ளது.
இதனால் மின்சாரத்தில் செல்லும் சரக்கு வாகனங்கள் இதில் செல்ல முடியும். இதற்கான டிரக்கை ஸ்கானியா நிறுவனம் உருவாக்கியுள்ளது.
22 கி.மீ. தூரத்துக்கு இந்த சாலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாலை ஆஸ்லோவையும் ஸ்வீடனையும் இணைக்கிறது. இந்த உயர் மின் அழுத்த கேபிள்களை சீமென்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
சாலையில் டிராம் வாகனம் செல்வதைப் போல உயர் மின் அழுத்தக் கம்பியில் உராய்ந்தபடி அதிலிருந்து மின்சாரத்தைப் பெற்று டிரக்குகள் செல்லும்.
முற்றிலுமாக வாகன புகையில்லா முயற்சியின் முதல் கட்ட நடவடிக்கை என்று ஸ்வீடன் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் லெனா எரிக்ஸன் தெரிவித்துள்ளார்.
ஸ்கானியா நிறுவனம் தயாரித்துள்ள இந்த டிரக்குகள் மின்சார இணைப்பு இல்லாத சாலைகளில் செல்லும்போது மாற்று எரிபொருளில் இயங்கும். இத்தகைய லாரிகள் 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க உதவும் என்று ஸ்கானியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
2030-ம் ஆண்டுக்குள் கரியமில வாயுவை உமிழாத வாகனங்களை மட் டுமே பயன்படுத்துவது என்ற இலக்கை எட்ட ஸ்வீடன் திட்டமிட்டுள்ளது. அத்தகைய முயற்சிக்கு இந்த மின்சார சாலை மற்றும் மின்சாரத்தில் இயங்கும் டிரக்குகள் உதவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT