Published : 13 Jun 2016 10:44 AM
Last Updated : 13 Jun 2016 10:44 AM

முகநூல்: சில வியத்தகு தகவல் குறிப்புகள்!

மனிதனின் உற்ற நண்பனாக தற்போது பேஸ்புக் எனும் முகநூல் மாறிவிட்டது. சந்தோஷம், துக்கம், கருத்து, விமர்சனம் என அனைத்தையும் வெளிப்படுத்தும் விதமாக பேஸ்புக் இன்று உலக மக்களிடையே மாறிவிட்டது.

சொல்லப்போனால் ஒரு சமூக புரட்சியை பேஸ்புக் செய்துள்ளது எனக் கூறலாம். முடங்கி கிடந்த ஒரு சமூகத்தை பொதுத் தளத்திற்கு கொண்டு வந்ததில் பேஸ்புக்கின் பங்கு மிகப் பெரியது. இந்திய தொழில்நுட்ப இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது.

சின்னதாக ஒரு கல்லூரிக்குள் ஆரம்பிக்கப்பட்ட சமூக வலைதளம் இன்று தகவல் தொழில்நுட்பத்தில் அடுத்தக் கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தகவல் தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய பேஸ்புக் பற்றிய சில தகவல்கள்…

2003-ம் ஆண்டு

மார்க் ஜூகர்பெர்க் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்த போது பேஸ்மாஸ் என்று அழைக்கப்பட்ட பேஸ்புக் இணையதளத்தை உருவாக்கினார்.

காப்புரிமை, தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றில் தலையிடுவதாக இந்த தளத்தினை ஹார்வேர்டு பல்கலைக்கழக நிர்வாகம் மூடியது. மேலும் ஜூகர்பெர்க் மீது நடவடிக்கை எடுத்தது.

2004-ம் ஆண்டு

பிப்ரவரி 4-ம் தேதி `தி பேஸ்புக்’ என்ற வலைதளத்தை தொடங்கினார். தொடங்கப்பட்ட 24 மணி நேரத்தில் 1,500 பயனாளிகள் உறுப்பினராக இணைந்தனர்.

2006-ம் ஆண்டு

13 வயதுக்கு மேல் உள்ள அனைத்து நபர்களும் பேஸ்புக்கில் உறுப்பினராக இணையலாம் என்று நிறுவனம் அறிவித்தது.

2012-ம் ஆண்டு

மே மாதம் பொதுப் பங்கு வெளியீட்டினை பேஸ்புக் மேற்கொண்டது. இதன் மூலம் 1,600 கோடி டாலர் திரட்டியது. அமெரிக்க சரித்திரத்தில் இது மூன்றாவது பெரிய பங்கு வெளியீடாக அமைந்தது.

பேஸ்புக்கின் முகப்பு பக்கத்தில் முதன் முதலில் வைக்கப்பட்ட படம் அல் பாஸினோ. இவர் ஹாலிவுட் நடிகர்.

2014-ம் ஆண்டு வாட்ஸ் அப் அப்ளிகேஷனை 22 பில்லியன் டாலர் மதிப்புக்கு பேஸ்புக் நிறுவனம் வாங்கியது.

பேஸ்புக் மட்டுமல்லாது இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், பிரைவேட் கோர், அக்குலஸ் விஆர் போன்ற சேவைகளையும் வழங்கி வருகிறது.

நீங்கள் உங்களுடைய முகநூல் நண்பர்கள் எத்தனை பேரை வேண்டுமானாலும் பிளாக் செய்ய முடியும். ஆனால் மார்க் ஜூகர்பெர்க்கை பிளாக் செய்ய முடியாது.

சமீபத்தில் மார்க் ஜூகர்பெர்க் அறிவித்த அறிவிப்பு ஒன்று எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது. மார்க் ஜூகர்பெர்க் பேஸ்புக்கின் 99 சதவீத பங்குகளை தனது தொண்டு நிறுவனத்திற்கு அளித்துவிட்டார். இதன் மதிப்பு 45 பில்லியன் டாலர்.

கடந்த வருடம் பேஸ்புக் நிறுவனம் மார்க் ஜூகர்பெர்க் பாதுகாப்புக்காக செலவிட்ட தொகை 28 கோடி ரூபாய்

மார்க் ஜூகர்பெர்க்கின் ஆண்டு சம்பளம் ஒரு டாலர் ஆனால் நிறுவனங்கள் வழங்கும் பிற சலுகைகள் பிற படிகள் 2014-ம் ஆண்டு நிலவரப்படி 6,10,454 டாலர்

மார்க் ஜூகர்பெர்க் இந்தியாவை ஞானத்தின் கோயில் என்று வர்ணித்தார்.

பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்களில்... 66% ஆண்கள் 76% பெண்கள்

# மார்ச் 31ம் தேதி வரை பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்களின் மொத்த எண்ணிக்கை 165 கோடி

# 140 மொழிகளில் பேஸ்புக் சேவைகள் மற்றும் தகவல்களை பெற முடியும்

# இன்று சர்வதேச அளவில் பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்களில் 8.7 சதவீதம் பேர் போலியான கணக்கு வைத்திருப்பவர்கள்.

# சீனா உட்பட மொத்தம் 13 நாடுகளில் பேஸ்புக் செயல்பாடுகள் முடக்கிவைக்கப் பட்டுள்ளன. இந்த தடையால் சீனாவில் மட்டும் 9.5 கோடி பயன்பாட்டாளர்களை பேஸ்புக் நிறுவனம் இழந்துள்ளது.

# ஒரு நாளைக்கு 30 கோடி புகைப்படங்கள் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

# அமெரிக்கர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் பேஸ்புக்கில் செலவிடுகின்றனர்.

# ஒரு நாளைக்கு 6 லட்சம் முறை பேஸ்புக் கணக்கை திருட்டு தனமாக நுழைவதற்கு முயற்சி செய்யப்படுகிறது.

# ஒரு நாளைக்கு 18 லட்சம் மக்கள் பேஸ்புக்கில் லைக் இடுகின்றனர்.

# 2016-ம் ஆண்டு மார்ச் 31 தேதி வரை பேஸ்புக் நிறுவனத்தில் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 13,598

# ஒவ்வொரு நொடிக்கும் ஐந்து புதிய பேஸ்புக் கணக்குகள் துவங்கப்படுகின்றன.

# 2015-ம் ஆண்டு நிலவரப்படி பேஸ்புக் நிறுவனத்தின் மொத்த வருமானம் 1,792.8 கோடி டாலர், நிகர வருமானம் 368.8 கோடி டாலர்.

# பேஸ்புக் நிறுவனத்தின் மொத்த சொத்துமதிப்பு 4,940.7 கோடி டாலர்

கிராஃபிக்ஸ்: தே.ராஜவேல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x