Last Updated : 28 Mar, 2016 12:49 PM

 

Published : 28 Mar 2016 12:49 PM
Last Updated : 28 Mar 2016 12:49 PM

குறள் இனிது: அன்பு கொண்டா, ஆற்றல் கண்டா..?

காதன்மை கந்தா அறிவுஅறியார்த் தேறுதல்

பேதமை எல்லாம் தரும் (குறள் 507)



எனது நண்பர் ஒருவர் ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் மனிதவளத் துறையின் மேலாளர். நேர்மையானவர், திறமையானவர். சமீபத்தில் அவரது தூரத்து உறவுப் பையன் குமார் (இந்தப் பெயர் பிடிச்சிருக்கா..) அவரிடம் வேலை கேட்டு வந்தார். வயது 23, படிப்பு பிளஸ்டூ.

நிறையப் பேசினார். வெட்டிப் பேச்சென்பது சட்டெனப் புரிந்துவிட்டது. 4 ஆண்டுகளில் 5 வேலைகள் மாறியிருந்தார். நண்பருக்கு தர்மசங்கடம். தனக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லிப் பார்த்தார். முதலில் சம்மதிப்பவர்கள் குமாரைப் பார்த்ததும் பயந்து மறுத்து விடுவார்கள்.

வேறு வழியின்றி தனது அலுவலகத்திலேயே எடுபிடி வேலைக்கு வைத்துக் கொண்டார். குமார் எதையும் ஒழுங்காய்ச் செய்யாவிட்டாலும் நண்பரின் பதவி காரணமாக மற்றவர்கள் சகித்துக்கொண்டனர்.

ஆறு மாதம் கழித்து டெஸ்பாட்ச் பகுதியில் ஓர் எழுத்தர் வேலை காலியாய் இருப்பது தெரிந்ததும் குமார் நம் நண்பரை நச்சரிக்கத் தொடங்கிவிட்டார்.

நண்பருக்கு ‘நாம் இந்த நிறுவனத்திற்கு எவ்வளவோ உழைத்திருக்கிறோம். நமக்கு வேண்டிய ஒருவருக்கு உதவினால் தப்பில்லை' என்கிற எண்ணம் வந்து விட்டது.

அலுவலகத்தில் பலரையும் சரிக்கட்டி அந்த வேலையை குமாருக்கே வாங்கிக் கொடுத்து விட்டார். ஆனால் குமார் குமாரராகவே இருந்தார். பின்னே என்ன? பிச்சைக்காரனை ராஜமுழி முழிக்கச் சொன்ன கதைதான்! அவ்வேலைக்கு வேண்டிய சுறுசுறுப்போ, மற்றவர்களிடம் வேலை வாங்கும் சாமர்த்தியமோ குமாரிடம் சுத்தமாக இல்லை! ஆவணங்கள் போய்ச் சேர தாமதமாயிற்று. பல புகார்கள் குவிந்தன.

ஆனால், கொடுமை என்னவென்றால், குமார் என்ன தவறு செய்தாலும் எல்லோருக்கும் உடனே நம்ம நண்பர் ஞாபகம் தான் வரும்! அவர்கள் குமாரைக் கண்டிப்பதை விட்டுவிட்டு நம்ம நண்பரையே சாட ஆரம்பித்து விட்டனர்! அவருக்கு நிறுவனத்தில் இருந்த மதிப்பும் மரியாதையும் போயின!

அறிய வேண்டியவற்றை அறியாதவரை அன்புடமை காரணமாக தேர்ந்தெடுப்பது எல்லா மடமையான விளைவுகளையும் உண்டாக்கும் என்கிறது குறள். உங்கள் அனுபவத்திலும் பார்த்திருப்பீர்கள்.

பணியமர்த்து வதற்கான, பதவி உயர்விற்கான நேர்முகத் தேர்வுகள் நடத்துபவர்களுக்குப் பல சிபாரிசுகள் வரும். கைதூக்கி விடுங்கள் என்பார்கள். ஐயா, இது என்ன தர்மகாரியமா? கொஞ்சமும் தகுதியற்றவனைத் தேர்ந்தெடுக்கலாமா? நிறுவனம் என்னவாகும்? கள்ளிச் செடியையா நடுவது?

தொழிலில் வெற்றி பெற்ற வளர்ச்சியடைந்த குடும்பங்களிலும் இதே கதை தான். எனக்குத் தெரிந்த ஒருவர் கோடிக்கணக்கில் வர்த்தகம் புரிந்து வந்தார்.

தனது மகனை பள்ளிப்படிப்பிற்கே ஸ்விட்சர்லாந்து அனுப்பி இருந்தார். மகன் இந்தியா திரும்பியவுடன் அவரிடம் எல்லாப் பொறுப்புக்களையும் கொடுத்தார். ஆனால் மகனுக்கோ இங்கிருந்தது ஒன்றும் பிடிபடவில்லை. அண்ணே, பிள்ளைகளை முதலாளி ஆக்குவது வேறு; நிறுவனத்தை நடத்தச்சொல்வது வேறு!

கார் ஓட்டப்பழகிக் கொண்டிருப்பவனிடம் போய் நாம் பயணிக்கும் பெரிய பஸ்ஸைக் கொடுக்கலாமா? அது அவனுக்கும் நமக்கும்கூட ஆபத்தானதாயிற்றே! அலுவலகப் பணிகள் ஆற்றலைப் பார்த்து கொடுக்கப்படவேண்டியவை. அங்கு பச்சாதாபமோ பாசமோ பார்ப்பது காலப்போக்கில் எல்லோருக்கும் தீங்காய் முடியும்!

- somaiah.veerappan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x