Published : 18 Jul 2016 11:44 AM
Last Updated : 18 Jul 2016 11:44 AM
ஒரு ஊரில் ஒரு போட்டி வைத்தார்கள். அதாவது ஒவ்வொருவரிடமும் ஒரே மாதிரி அளவுள்ள எலுமிச்சை பழங்களைக் கொடுத்து, யார் அதிக அளவில் அதிலிருந்து சாறு பிழிந்து எடுக்கிறார்களோ அவர்களுக்குக் கோப்பை என்பதுதான் அந்தப் போட்டி.
அந்த ஊரில் உள்ள அனைத்து பலசாலிகளும் ஒருவர் பின் ஒருவராக சாறு பிழிந்து தங்களது திறமையை நிரூபித்தனர். கடைசியில் மெலிதான தேகத்தைக் கொண்ட ஒரு நபர் வந்தார். ஆனால் அவரோ மிக அனாயசமாக சாறு பிழிந்தார். அதிக சாறு பிழிந்து கோப்பையைத் தட்டிச் சென்றார்.
விருது வழங்கும்போது, அந்த நபரிடம், எங்கே பணியாற்றுகிறீர்கள் என்று கேட்டதற்கு அவரோ தான் வருமான வரித்துறை அதிகாரி என்றார். ஒரு காலத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இப்படித்தான் சித்தரிக்கப்பட்டனர்.
ஆனால் தற்போது நிலைமை வேறு. மலரி லிருந்து வண்டானது தேனை எப்படி பாதிப்பின்றி உறிஞ்சுகிறதோ அதைப்போல வரியை வசூலிக்க வேண்டும் என்கிற சாணக்கியரின் அர்த்தசாஸ்திர நூலின் அறிவுரையைப் பின்பற்றுகின்றனர் வருமான வரித்துறையினர்.
செலுத்த வேண்டிய வரியைக் குறைக்க இரண்டு வழிகள் உள்ளன.
சட்டத்திற்கு உட்பட்டு விதிமுறைகளைப் பின்பற்றி வரியைக் குறைப்பதை வரி திட்டமிடல் (Tax Planning) என்பார்கள். சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் வரிகளைக் குறைத்து செலுத்தும் முறையை வரி ஏய்ப்பு (Tax Evasion) என்பார்கள். இதில் வரி ஏய்ப்பு முறையைப் பின்பற்றுவது பாதுகாப்பானது அல்ல
வருமான வரி செலுத்துபவர்களில் தனி நபர், இந்து கூட்டுக் குடும்பம், கூட்டு நிறுவனம், தனி நிறுவனம் என பல பிரிவினர் உள்ளனர்.
வருமான வரி கணக்கு விவரத்தை தாக்கல் செய்பவர்களை Assessee என்கிறார்கள். வருமானம் சம்பாதித்த ஆண்டை முந்தைய ஆண்டு (Previous year) என்றும், அதற்கு அடுத்த ஆண்டை Assesment year என்றும் சொல்வார்கள். முந்தைய ஆண்டு சம்பாதித்த கணக்குகளை ஒவ்வொரு வரி செலுத்துவோரும் அதற்கு அடுத்த ஆண்டான அசெஸ்மென்ட் ஆண்டில் தாக்கல் செய்ய வேண்டும். அதாவது ஏப்ரல் 1, 2015 முதல் 31-3 2016 வரை முந்தைய ஆண்டு என்றால் 1-4-2016-17 அசெஸ்மென்ட் ஆண்டாக இருக்கும்.
வருமானத்தின் வகைகள்
சம்பளம், வீட்டு வாடகை, வியாபாரம், தொழில், சொத்து விற்பதில் லாபம் மற்றும் இதர வருமானம் அனைத்துக்கும் விவரம் தாக்கல் செய்ய வேண்டும்.
உச்ச வரம்பு
வருமானத்தின் அளவு ஆண்டுக்கு 2.5 லட்ச ரூபாய்க்கு மேல் இருந்தால் வருமான வரி செலுத்த வேண்டும். இது தனி நபர்களுக்கு மற்றும் இந்து கூட்டுக் குடும்பங்களுக்கு பொருந்தும். நிறுவனங்கள் மற்றும் கூட்டாளி நிறுவனங்களுக்கு வரம்பு என்பது ஏதும் கிடையாது. அவர்கள் வருமானம் ரூ. 1 ஆக இருந்தாலும் அதில் 30% வரியாக செலுத்த வேண்டும்.
நிரந்தர கணக்கு எண் (பான்)
ஒவ்வொரு குடிமகனுக்கும் வருமான வரித் துறையிலிருந்து தரப்படும் 10 இலக்கங்கள் கொண்ட எண் (Alpha Numeric) நிரந்தர கணக்கு எண் (பான்) எனப்படும்.
`பான்’ இருந்தால் கட்டாயம் வரி தாக்கல் செய்ய வேண்டுமா?
பான் என்பது வருமான வரித்துறையினர் தரும் ஒரு அடையாள எண்தான். வருமானம் இல்லை அல்லது வருமான உச்ச வரம்புக்குள் உள்ளது என்றால் ரிட்டன் தாக்கல் செய்வது கட்டாயம் இல்லை. ஆனாலும் ஒருவர் தொடர்ச்சியாக ரிட்டர்ன் தாக்கல் செய்வதால் அவரது சேமிப்புகளுக்கான கணக்கை வருமான வரித்துறையினர் என்றாவது ஒரு நாள் கேட்கும் பட்சத்தில் அதை அவர்கள் எதிர்கொள்ள முடியும்.
ஆனால் தனி நபர், இந்து கூட்டு குடும்பங்கள் தவிர, கூட்டு நிறுவனங்கள், கம்பெனி போன்ற இதர வகையினர் ஒவ்வொரு வருடமும் கட்டாயம் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.
ஒருவருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்ட அளவுக்கு மட்டுமே வருமானம் உள்ளது. இருந்தாலும் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டுமா?
தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயமில்லை. இருந்தாலும் மேலே குறிப்பிட்டதுபோல, வருமான வரித்துறையினர் ஒருவருடைய சொத்து விவரங்களுக்கு உரிய தகவல் கேட்கப்படும் பட்சத்தில் அவர்கள் தொடர்ந்து ரிட்டர்ன் தாக்கல் செய்திருந்தால் நல்லது.
எனக்கு தொழிலில் நஷ்டம்தான் ஏற்பட்டுள்ளது. லாபமே இல்லை. இருந்தாலும் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டுமா?
கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். நஷ்டக் கணக்குகளுக்கான ரிட்டன் அந்தந்த வருடத்தில் உரிய காலக் கெடுவுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அந்த நஷ்டத்தை அடுத்த 8 ஆண்டுகளில் வரக்கூடிய லாபங்களில் கழித்து செலுத்த வேண்டிய வரியைக் குறைத்துக் கொள்ளலாம். இதை Carry forward of loss என்பார்கள்.
வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் எது?
இதில் பட்டயக் கணக்காளர்களிடம் கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டியவர்கள் செப்டம்பர் 30-ம் தேதிக்குள்ளும், அவ்வாறு தணிக்கை முறைக்கு உள்ளாகாத சிறு வணிகர்கள் மற்றும் சிறிய Assessee க்கள் ஜூலை 31-ம் தேதிக்குள்ளும் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.
ரிட்டர்ன் தாக்கல் செய்ய சிஏ படித்தவர்களிடம்தான் செல்ல வேண்டுமா?
இது கட்டாயம் இல்லை. கணக்கு தணிக்கைக்கு உள்ளாகுபவர்கள் மட்டுமே (அதாவது ஆண்டு விற்பனை ரூ. 2 கோடிக்கு மேல் இருந்தால்) சிஏ மூலம் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
இருந்தாலும் சிஏ மூலம் ரிட்டர்ன் தாக்கல் செய்தால் வருமான வரிச் சட்டத்தில் இருக்கும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டு சட்டப்படி வரியைக் குறைக்க ஆலோசனைகள் கேட்கலாம். மற்றபடி சம்பளம், வாடகை போன்ற வருமானங்கள் மட்டுமே இருப்பவர்கள் மேலும் சிறு வணிகர்கள், வருமான வரிச் சட்டத்தில் சிறிதளவு தெரிந்து வைத்திருந்தால் அவர்களாகவே ரிட்டர்ன் தாக்கல் செய்யலாம்.
ரிட்டர்ன் தாக்கல் செய்ய வருமான வரி அலுவலகத்துக்குப் போக வேண்டுமா?
தேவையில்லை, ரிட்டர்ன் தாக்கல் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று இ-ஃபைலிங் எனப்படும் ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்யும் முறை. இரண்டாவது வரிப்படிவத்தை நிரப்பி தாக்கல் செய்யும் முறை.
இதில் கட்டாயத் தணிக்கைக்கு உட்படுபவர்கள் மற்றும் கட்டாய தணிக்கைக்கு உட்படாத ஆனால் ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்துக்கு மேல் இருப்பவர்கள் இ-ஃபைலிங் முறையில்தான் தாக்கல் செய்ய வேண்டும்.
கட்டாயத் தணிக்கைக்கு உட்படாமல் ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்துக்கு கீழ் உள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தை நிரப்பலாம். அல்லது ஆன்லைன் மூலமாகவும் தாக்கல் செய்யலாம்.
படிவத்தை நிரப்பி தாக்கல் செய்பவர்கள் அவசியம் வருமான வரித்துறை அலுவலகத்துக்குச் சென்று தாக்கல் செய்ய வேண்டும். மனுவை அளித்து அதற்கான அத்தாட்சியைப் பெற வேண்டும்.
ஆன்லைனில் ஃபைல் செய்வது எப்படி?
நிரந்தரக் கணக்கு எண் இருக்கும் ஒவ்வொருவரும் www.incometaxindia.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று லாகின் செய்ய வேண்டும். பிறகு உரிய படிவங்களை பதிவிறக்கம் செய்து அவற்றைப் பூர்த்தி செய்து ஆன்லைனில் தாக்கல் செய்தால் ஐடிஆர்வி என்று ஒரு படிவம் கிடைத்தற்கான சான்று தயாராகும். அதில் ஒரு படிவத்தை எடுத்து அதில் உள்ள பெங்களூரு முகவரிக்கு கையொப்பம் இட்டு அனுப்ப வேண்டும். பதிவுத் தபால் மற்றும் கூரியரில் அனுப்பக் கூடாது. ஆன்லைனில் டிஜிட்டல் கையெழுத்தைப் பயன்படுத்தி தாக்கல் செய்பவர்கள் இவ்விதம் படிவத்தை அனுப்பத் தேவையில்லை.
ஏற்கெனவே தாக்கல் செய்த ரிட்டர்னை மறுபடியும் ரிவைஸ் செய்ய முடியுமா?
முடியும், ஆனால் தாக்கல் செய்வோர் முதலில் தாக்கல் செய்த ரிட்டனை உரிய காலக் கெடுவுக்குள் தாக்கல் செய்திருக்கவேண்டும். காலக் கெடுவுக்குள், வருமான வரித்துறை அதிகாரி படிவத்தை ஆய்வு செய்வதற்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் ரிவைஸ் செய்யலாம்.
காலக் கெடுவுக்குள் தாக்கல் செய்யத்தவறினால் என்ன விளைவு ஏற்படும்?
பயப்படும் அளவுக்கு எதுவும் நிகழ்ந்துவிடாது. கணக்காண்டு முடிவதற்குள் தாக்கல் செய்து விடலாம். இதை காலதாமதமான (Belated Return) தாக்கல் என்பார்கள்.
இவ்விதம் காலதாமதமாக தாக்கல் செய்பவர்கள் அவர்கள் செலுத்த வேண்டிய வரிக்கு மாதத்துக்கு ஒரு சதவீத வட்டியுடன் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.
ஒருவர் எத்தனை நிரந்தரக் கணக்கு எண் அட்டை வைத்திருக்கலாம்?
ஒருவர் ஒரே ஒரு அட்டை மட்டுமே வைத்திருக்க வேண்டும். ஒன்றுக்கு மேல் இருந்தால் அது சட்டப்படி குற்றமாகும்.
பான் கார்டு தொலைந்து போனால் என்ன செய்வது?
பான் கார்டு தொலைந்து போனாலோ அல்லது கிழிந்து போனாலோ அதே எண்ணில் வேறு ஒரு அட்டையைப் பெற முடியும். வருமான வரித்துறை அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடமிருந்து அதற்குரிய படிவத்தை நிரப்பி 10 அல்லது 15 நாள்களுக்குள் புதிய அட்டையைப் பெறலாம்.
நான் வாங்கும் சொத்து விவரங்கள், வங்கி வரவு செலவுகள் பற்றிய விவரம் வருமான வரித்துறைக்கு எப்படித் தெரியும்?
வருமான வரித்துறையில் இதற்கென புலனாய்வுப் பிரிவினர் இருக்கிறார்கள். மேலும் முழுவதும் கணினிமயமாக்கப்பட்டுவிட்டது. ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வரவு, செலவு விவரத்தை வங்கிகள், தனியார் நிறுவனங்கள், துணைப் பதிவாளர் அலுவலகத்தினர் வருமான வரித்துறையினருக்கு தெரிவித்து விடுவர்.
இதை ஆண்டு தகவல் அறிக்கை (Annual Information Report) என்பர். இவ்வாறு தாக்கல் செய்யப்படும் அறிக்கை மூலம் வருமான வரித்துறையினர் விவரத்தை அறிவர். அவ்வாறு ஏஐஆர் விவரத்தை தெரிவிக்கவில்லையெனில் கடுமையான தண்டனை வழங்கப்படும். அவ் வாறு அவர்களால் தாக்கல் செய்யப்படும் விவரங் களை வருமான வரி அதிகாரி தனது கம்ப்யூட்டர் மூலமாகவே அறிந்துகொள்ள முடியும்.
பான் கார்டு பெறாமல் நான் இருந்தால்…
தங்களைப் பற்றிய விவரம் அறிய பான் கார்டு என்பது வருமான வரித்துறையினருக்கு ஒரு வழிதான், அது இல்லாமலேயே வருமான வரித்துறையினர் தங்களைப் பற்றிய விவரத்தை அறிந்து கொள்ள முடியும்.
வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கிறேன். மேலும் ஆண்டுதோறும் முறையாக வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்கிறேன். நான் 15 ஜி, 15 ஹெச் கொடுத்து வரிப்பிடித்தம் செய்யாமல் விடலாமா?
இது தவறு, ஆண்டு வருமானம் அந்த வங்கியிலிருந்து பெறப்படும் வட்டியுடன் சேர்த்து உச்ச வரம்புக்குள் இருப்பவர்கள் மட்டுமே 15 ஜி, 15 ஹெச் சமர்ப்பிக்க வேண்டும்.
மற்றவர்கள் இந்த படிவத்தை தாக்கல் செய்து வரிவிலக்கு பெறுவது சட்டப்படி குற்றமாகும். அதுபோல தவறான விவரங்களை வங்கிக்கு அளிக்கக் கூடாது.
ஆனால் சில வங்கிகள் சேமிப்பை அதிகரிக்க ஆசைப்பட்டு டெபாசிட் பெறும்போது இந்த 15 ஜி, 15 ஹெச் படிவங்களை வாடிக்கையாளரிடம் பெற்றுக் கொள்கிறார்கள். இவ்வாறு தவறாக வழிநடத்தப்படும் வாடிக்கையாளர்கள் பெறும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
balaji_tup@icai.org
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT