Last Updated : 08 May, 2017 10:27 AM

 

Published : 08 May 2017 10:27 AM
Last Updated : 08 May 2017 10:27 AM

கியா மோட்டார்ஸ் ஆந்திரா சென்றது ஏன்?

கடந்த மாத இறுதியில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய அந்நிய முதலீடு கியா மோட்டார்ஸ். கொரியாவைச் சேர்ந்த இந்நிறுவனம் ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் ஆலை அமைக்க ஒப்பந்தம் செய்தது. ரூ. 6,400 கோடி முதலீட்டில் அமைய உள்ள இந்த ஆலைக்கான பணிகள் அக்டோபரில் தொடங்குகிறது. 2019-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்த ஆலையிலிருந்து கார்கள் வெளிவர உள்ளன. 536 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த ஆலையில் பயிற்சி வளாகம், ஆராய்ச்சி மையம் மற்றும் குடியிருப்பு பகுதியையும் அந்நிறுவனம் அமைக்க உள்ளது. இதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்பது கூடுதல் தகவல்.

தமிழகத்தில் அமைந்திருக்க வேண்டிய இந்த ஆலை ஆந்திர மாநிலத்துக்கு இடம் பெயர்ந்துள்ளது என்பதுதான் நமக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி.

இந்தியாவின் டெட்ராய்டு என்றழைக் கப்படும் சென்னையை உதறித் தள்ளி விட்டு கியா மோட்டார்ஸ் அனந்தபூருக்கு செல்வதற்கு எது காரணமாக இருந்தது என்பதை அறிவதற்கு தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவுகிறதா என்பதை ஆராய்ந்தாலே விடை கிடைத்துவிடும்.

2015-ம் ஆண்டு செப்டம்பரில் தமிழ்நாட்டில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. அப்போது ரூ.2.42 லட்சம் கோடிக்கான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இதில் சூரிய மின்னாற்றல் துறையில் ரூ.35,356 கோடிக்கும், உற்பத்தித் துறையில் ரூ.1,04,286 கோடிக்கும், மின்னுற்பத்தித் துறையில் ரூ.1,07,136 கோடிக்கும், தகவல் தொழில்நுட்பத் துறையில் ரூ.10,950 கோடிக்கும், கைத்தறித் துறையில் ரூ.1,955 கோடிக்கும், வேளாண் துறையில் ரூ.800 கோடிக்கும், மீன்வளத்துறையில் ரூ.500 கோடிக்கும், சிறு, குறுந்தொழில் துறையில் ரூ.16,533 கோடிக்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. மொத்தம் 12 துறைகளில் 40 சதவீதம் உற்பத்தித் துறையிலும், 40 சதவீதம் எரிசக்தித் துறையைச் சேர்ந்த நிறுவனங்களும் தொழில் தொடங்க முன்வந்தன. தகவல் தொழில் நுட்பத்துறையின் பங்களிப்பு 10 சதவீதம் என்ற அளவில் இருந்தது.

கடந்த 15 ஆண்டுகளில் (2000 முதல் 2015) வரை தமிழகத்தில் வந்த ஒட்டுமொத்த அந்நிய முதலீட்டு அளவு 1,700 கோடி டாலராகும். அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் ஆண்டுக்கு 14 சதவீத வளர்ச்சியை எட்ட வேண்டும் என்ற இலக்கை நோக்கிய கொள்கை குறிப்பு ``விஷன் 2023’’-ம் வெளியிடப்பட்டது. 3 ஆண்டுகளில் 1.5 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என் பதும் தமிழக அரசின் முழக்கமாக இருந்தது.

கியா மோட்டார்ஸ் நிறுவனம் தமி ழகத்தில் நிச்சயம் ஆலையை அமைக் கும், அந்நிறுவனத்துக்கு 390 ஏக்கர் நிலத்தை அளிப்பதாக அரசு உறுதி யளித்துள்ளது என்று அப்போதைய தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் மாநில சட்டப் பேரவையில் குறிப்பிட் டிருந்தார்.

தமிழகத்திலிருந்து தொழில் நிறு வனங்கள் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடக மாநிலத்துக்குச் செல்வதாக கூறப்பட்ட புகாரை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மறுத்தார். ``ஆந்திர மாநில முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோர் தொழிலதிபர்களை சந்தித்து தொழிற்சாலை அமைக்க இலவசமாக இடவசதி அளிப்பதாக அறிவித்தாலும் எந்த ஒரு நிறுவனமும் அம்மாநிலங்களுக்குச் செல்லத் தயாராக இல்லை.

ஏனெனில் எந்த ஒரு தொழிலும் லாபகரமாக செயல்பட அந்த மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு நிலை சிறப்பாக நிர்வகிக்கப்பட வேண் டும். இரண்டாவது தடையற்ற மின்சார விநியோகம் இருக்க வேண்டும். ஆந்திராவும், கர்நாடகாவும் தமிழகத்திட மிருந்துதான் மின்சாரத்தை வாங்கு கின்றன, எனவே தமிழகத்தை விட்டு எந்த ஒரு நிறுவனமும் பிற மாநிலங்களுக்குச் செல்லாது,’’ என்று ஜெயலலிதா உறுதிபட தெரிவித்திருந்தார்.

ஜெயலலிதா உயிரிழந்த நான்கு மாதங்களில் நிலைமை மாறிவிட்டதா, தமிழகத்துக்கு வர வேண்டிய கியா மோட்டார்ஸ் ஆந்திர மாநிலத்தில் ஆலை அமைக்க வேண்டிய சூழல் உருவானதற்கு என்ன காரணம்?

``பொதுவாகவே தமிழகத்தில் தொழில் தொடங்க நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன, குறிப்பாக அந்நிய முதலீடுகள் வருவதும் குறைந் துள்ளது,’’ என்று தொழில் கூட்டமைப் பைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

``வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதில் பிற மாநிலங்கள் மிகுந்த முனைப்போடு செயல்படுகின்றன. ஆனால் அத்தகைய முனைப்போ, ஆர்வமோ காட்ட போதிய தலைமை தமிழகத்தில் இல்லை என்றே தோன்று கிறது. 2016-ம் ஆண்டு புதிய ஆட்சி அமைந்ததில் இருந்து தொழில்துறையை ஊக்குவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சர்வதேச முதலீட்டாளர் கூட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி ஒரு நிறுவனமும் தமிழகத்தில் தொழில் தொடங்கியதாகத் தெரியவில்லை. 2015 செப்டம்பரில் கூட்டம் நடந்தது. ஆனால் ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுக்கு மேலாகியும் எந்த ஒரு நிறுவனமும் இன்னமும் பூமி பூஜை கூட போட்டதாகத் தெரியவில்லை. தொழில் தொடங்குவதற்கு உரிய சூழல் இல்லை என்பதையை இவை உணர்த்துகிறது,’’ என்று தொழில்துறையைச் சேர்ந்த முக்கியமான தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

``தமிழகத்தில் சிறப்பான தொழில் கொள்கை இருப்பதால்தான் இது வரையில் தொழில் முதலீடுகள் வந் துள்ளன. இப்போது சூழல் சரியில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், அடிப்படையில் கட்டமைப்பு வலுவாக உள்ளது என்பதை எவருமே மறுக்க முடியாது.

முதலீடுகளை ஈர்ப்பதில் ஆர்வம் காட்டப்படவில்லை என்பது முக்கியக் காரணமாக இருக்கலாம். தமிழகத்தில் காணப்படும் இத்தகைய தொய்வு நிலையை தங்களுக்குச் சாதகமாக அண்டை மாநிலங்கள் மாற்றிக் கொள் கின்றன,’’ என்று அவர் குறிப்பிட்டார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டி உருவாக் கப்பட்ட பிறகு ஏறக்குறைய 100 நிறு வனங்கள் அங்கு ஒப்பந்தம் செய்துள்ள தன. அங்கு மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு அளவு ரூ. 18 ஆயிரம் கோடியைத் தொட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

2015-16-ம் நிதி ஆண்டில் தமிழகத்துக்கு வந்த அந்நிய நேரடி முதலீடு ரூ. 29,781 கோடி. இது முந்தைய நிதி ஆண்டில் வந்ததை விட 13 சதவீதம் அதிகமாகும். ஆனால் 2016-17-ம் நிதி ஆண்டின் முதல் 6 மாதத்தில் தமிழகத்துக்கு வந்தது ரூ.4,136 கோடி. இதனாலேயே உலக வங்கி தயாரித்த பட்டியலில் 12-வது இடத்திலிருந்த தமிழகம் 62.8 புள்ளிகளுடன் 18-வது இடத்துக்கு கீழிறங்கியுள்ளது. இந்தப் பட்டியலில் ஆந்திராவும், தெலங்கானாவும் 98.78 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளன.

குஜராத் மாநிலம் கூட இவ்விரண்டு மாநிலங்களைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில்தான் உள்ளது.

முதலீடுகளை ஈர்ப்பதில் ஹரியாணா, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்கள் கூட புதிதாக சேர்ந்துள்ளன. சத்தீஸ்கரும், மத்தியப் பிரதேசமும் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளன.

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் மாநிலங்களில் சாதகமான சூழல் எவை என்பதையும் உலக வங்கி பட்டியலிட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் ஒற்றைச் சாளர முறை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் முதலீட்டாளர்களுக்கென பிரத்யேகமான இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் கிடைக்கும் தொழிலாளர்கள் குறித்த தகவல்கள் இணையதளத்தில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிலம் அளிப்பது, மின்சாரம், குடிநீர் வசதி, அடிப்படைக் கட்டமைப்பு வசதி உள்ளிட்டவற்றை ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இம்மாநிலங்களில் முதலீடுகள் குவிகின்றன.

தொழில் முதலீடுகள் குறைந்து வருவதைக் கவனத்தில் கொண்ட மஹாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், சமீபத்தில் ‘மாற்றுவோம் மஹாராஷ்டிரத்தை’ என்ற கோஷத்தோடு முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார்.

கியா மோட்டார்ஸ் வெளியேறியது தொடர்பாக, அந்நிறுவனத்துக்கு தொழில் தொடங்குவதற்கான சாதக சூழல் குறித்த ஆய்வறிக்கை தயாரித்த இன்பிராடெக் இன்பிரா சர்வீசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கண்ணன் ராமசாமி தனது முகநூலில் பல அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார். இந்நிறுவனம் இரண்டு ஆண்டுகள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடத்திய ஆய்வின்படி முதலிடத்தில் தமிழகமும் அடுத்தது குஜராத் மாநிலமும் தொழில் தொடங்க ஏற்ற மாநிலமாக குறிப்பிட்டுள்ளது. மூன்றாவது இடமாக ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீ சிட்டி குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு, ஆலைக்கான இடத்தை அளிப்பதில் நிலத்தின் மதிப்பைவிட கூடுதலாக 50 சதவீத தொகையை கமிஷனாக இங்குள்ள அரசியல் தலைவர்கள் கேட்டுள்ளனர்.

இதேபோல கியா மோட்டார்ஸ் கோரிய வரிச் சலுகைக்கு மிக அதிகபட்ச தொகையை லஞ்சமாகக் கேட்டுள்ளதாக கண்ணன் ராமசாமி குறிப்பிட்டுள்ளார். கியா மோட்டார்ஸ் வெளியேறியதால் ரூ. 6.400 கோடி மட்டும் இழப்பல்ல, அதற்கு உதிரி பாகங்கள் சப்ளை செய்யும் நிறுவனங்கள் இதே அளவு தொகையை அதாவது ரூ. 6 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன. இதுவும் தமிழகத்துக்கு இழப்புதான் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த புகாரில் சிறிதளவு உண்மை இல்லாதிருந்தால் கியா மோட்டார்ஸ் ஆந்திர மாநிலத்துக்கு சென்றிருக்காது. அதிலும் குறிப்பாக ஸ்ரீ சிட்டியில் அந்நிறுவனம் ஆலை அமைக்க முன்வந்தபோது, அதற்குப் பதிலாக அனந்தபூரில் 600 ஏக்கர் நிலத்தை மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அளித்ததோடு, பல்வேறு சலுகைகளையும் அளித்துள்ளார். பின்தங்கிய பகுதியான அனந்தபூர் தொழில் நகராக உருவாக வேண்டும் என்பதற்கான அவரது முயற்சியின் வெளிப்பாடுதான் இது.

தமிழகத்தின் தொழில் முதலீடு களை ஈர்ப்பதற்காக ஆந்திர அரசு உருவாக்கியதுதான் ஸ்ரீ சிட்டி தொழிற் பூங்கா, சென்னையை ஒட்டி ஆந்திர எல்லையில் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து 75 கி.மீ. தொலை வில் அமைந்துள்ளதால் இங்கு வரும் நிறுவனங்கள் சென்னைத் துறை முகத்தை பயன்படுத்த முடியும்.

ஜப்பானின் இஸுஸு, கேட்பரீஸ் தயாரிக்கும் மான்டலீஸ் உள்ளிட்ட நிறு வனங்கள் தமிழகத்திலிருந்து ஆந்திரத் துக்கு இடம் பெயர்ந்தவைகளில் குறிப் பிடத்தக்கவை.

ஸ்ரீ சிட்டி-யில் அமைந்துள்ள 100 நிறுவனங்களில் பெரும்பாலானவற்றை தமிழக அரசு நினைத்திருந்தால் இங்கேயே அமைத்திருக்க முடியும். ஆனால் அதற்கான முயற்சியும், முனைப்பும் இல்லை என்பதுதான் கடந்த கால உண்மை. திட்டத்தின் பலன் உடனடியாகக் கிடைக்காது. அதைப்போலத்தான் ஆலைகளின் உருவாக்கம் தலைமுறைகளைக் கடந்து பலன் தரும். இப்போது நம்மைக் கைவிட்டுப் போன தொழிற்சாலைகளால் ஏற்படும் பாதகங்கள் தலைமுறைகளைக் கடந்தும் தொடரும்.

- எம். ரமேஷ்
ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x