Published : 16 Jan 2017 12:40 PM
Last Updated : 16 Jan 2017 12:40 PM

ஏன் இந்தியா?

இந்தியா மிகப் பெரிய மக்கள் தொகையைக் கொண்டது. குறிப்பாக அதிக இளைஞர்கள் கொண்ட நாடு. தொழில்வளர்ச்சி என்பது நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானது. தொழில் வளர்ச்சியை மேம்படுத்த அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகளும் கொள்கைகளும் இருக்கவேண்டும். அப்போதுதான் வெளிநாட்டிலிருந்து நிறுவனங்கள் இந்தியாவுக்கு தொழில்தொடங்குவதற்கு வருவார்கள். சமீப காலமாக இந்தியா இதில் கவனம் செலுத்தி வருகிறது. கொள்கை மாற்றமும் அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.

# 130 - தொழில்புரிவதற்கு உகந்த சூழல் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 2016வது வருடம் பிடித்த இடம். இந்தியா 2015ம் வருடத்தை விட ஒரு இடம் முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

# 110 ஸ்மார்ட் நகரங்களை 2022-ம் ஆண்டுக்குள் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நகரங்களும் தேர்வு செய்யப்பட்டு விட்டன.

# இந்தியாவில் மொத்தம் முதலீட்டு பிராந்தியங்களின் எண்ணிக்கை 24.

# இந்தியாவில் உள்ள கிரின்பீல்டு நகரங்களின் எண்ணிக்கை 8.

# ரயில்வே போக்குவரத்தில் இந்தியாவின் இடம் 3.

# இந்தியாவில் தொழில்துறை இணைப்பு நகரங்களின் எண்ணிக்கை 5

# டெல்லி - மும்பை

அமிர்தரஸ் - கொல்கத்தா

பெங்களூரு - மும்பை

சென்னை - பெங்களூரு

சென்னை - விசாகப்பட்டினம்

இந்த இணைப்பு நகரங்கள் வழியே இந்தியாவின் மிக முக்கியமான 10 நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

# 27,000 கிலோமீட்டருக்கு, பொருளாதார வகையில் பயன்தரக்கூடிய இணைப்பு நெடுஞ்சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

# சர்வதேச அளவில் இரண்டாவது பெரிய சாலை அமைப்பைக் கொண்டது இந்தியா. இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் தூரம் 1,00,000 கிலோமீட்டர்

# சாகர்மாலா திட்டத்தின் கீழ் துறைமுகங்கள் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் குளச்சல் துறைமுகம் திட்டமும் மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் முக்கியமான துறைமுகங்களை பொருளாதார மையங்களாக மாற்றவும் திட்டமிட்டு வருகிறது.

# வர்த்தக மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு வழங்கும் உலகின் மிகச் சிறந்த முதலீட்டு மேம்பாடு விருது இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது.

# பாதுகாப்புத் துறையில் அனுமதிக்கப்பட்ட அந்நிய முதலீடு வரம்பு 49%

# சர்வதேச அளவில் மிகப் பெரிய ஆயுதப் படைகளை வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் இடம் 3.

# சர்வதேச அளவில் பாதுகாப்புத்துறைக்கு அதிக செலவிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் இடம் 4.

# 2022-ம் ஆண்டுக்குள் மொத்தம் 2 கோடி வீடுகள் கட்டித் தருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

# 2025-ம் ஆண்டுக்குள் 99% படிப்பறிவு பெற்ற சமூகமாக இருக்கும்.

# புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களுக்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் மூலம் 2022-ம் ஆண்டுக்குள் இந்தியா 175 ஜிகா வாட் மின்சார உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.

# புதுமை, பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்துவது, வேலைவாய்ப்பை அதிகரிப்பது, தொழில் முனைவோர்களை உருவாக்குவது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேசிய அறிவுசார் சொத்துரிமை கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

# திவால் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் தாமதம் ஏற்பட்டால் பெரும் பொருளாதார பின்னடைவும், தொழில் செய்ய முடியாத சூழ்நிலையும் உண்டாகும். எனவே, எவ்வளவு விரைவில் தீர்வு காணப்படுகிறதோ, அது தொழில் துறைக்கும் பொருளாதாரத்துக்கும் நல்லது. நிறுவனங்களுக்கு திவால் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு திவால் சட்டம் 2016 கொண்டுவந்துள்ளது.

# 2015-16-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்துள்ள அந்நிய நேரடி முதலீட்டின் மதிப்பு 5550 கோடி டாலர்

# அரசுக்கும் தொழில்நிறுவனங்களுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவதற்காக முதன்முதலில் தொடங்கப்பட்டது இ-பிஸ் இணையதளம். இந்த இணையதளத்தின் மூலம் தொழிலுக்கான அனுமதி, தடையில்லா அனுமதி சான்று போன்றவை இதன் மூலம் வழங்கப்படுகின்றன.

# அரசு-தனியார் கூட்டுக் நிறுவனங்கள் பொருளாதாரத்தில் இந்தியாவின் இடம் 3

# 2020-ம் ஆண்டுக்குள் இ-காமர்ஸ் துறை 1,000 கோடி டாலர் மதிப்பு கொண்டதாக உயரும்.

# 2016-ம் ஆண்டு இந்தியாவில் பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 19.2 கோடி

# நாடு முழுவதும் ஒரே வரி அமைப்பை கொண்டு வரும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டு பிற்பாதியில் இந்த வரி அமைப்பு நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x