Published : 19 Sep 2016 11:20 AM
Last Updated : 19 Sep 2016 11:20 AM
வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்கோல்நோக்கி வாழும் குடி (குறள்: 542) |
இன்போஸிஸ் என்றவுடன் உங்களுக்கு யார் ஞாபகம் வருகிறார்? நாரயணமூர்த்தி தானே? விப்ரோ என்றால் அசிம் பிரேம்ஜியும் பயோகான் என்றால் கிரண் மஜும்தாருமா?
நிறுவனங்கள் உயிரற்றவையாக இருந்தாலும், அந்நிறுவனங்களை நாம் அவற்றின் தலைவர்களின் உருவகமாகத்தான் பார்க்கிறோம்! சிறிய நிறுவனங்களில் இது இன்னமும் அதிகம்!
எனது நண்பர் ஒருவர், பால் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். சமீபத்தில் அவரது பால் குளிரூட்டும் தொழிற்சாலையில் வேலை செய்த ஒருவர் மதிய உணவிற்கு வீட்டிற்குச் செல்லும் வழியில் கால் இடறி விழுந்து விட்டார்.
செய்தி வந்த பொழுது, நான் நண்பர் அருகில்தான் இருந்தேன். அத்தொழிலாளியைப் பக்கத்திலிருந்த அரசாங்க மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள்.
ஆனால் நண்பரோ அங்கு வசதி போதாதென்று அத்தொழிலாளியைக் கோவையில் உள்ள எலும்பு முறிவிற்கான தனியார் மருத்துவமனைக்குத் தனது காரிலேயே அனுப்பி வைத்தார் .
அத்தொழிலாளி விபத்துக்குள்ளானது பணியிடத்திலோ, பணி நேரத்திலோ அல்ல. எதற்கு வீண் செலவு என நினைக்காமல், தொழிலாளி யின் கால் சரியாக வேண்டுமென்பதே அவரது கவலையாக இருந்தது!
மற்றொரு சமயம் அங்கிருந்த வேறு இரு பணியாளர்கள் தம்முன் சண்டையிட்டுக்கொண்ட பொழுது, நண்பர் அவர்களை அழைத்து விசாரித்துச் சமாதானம் செய்து வைத்ததையும் பார்த்தேன்.
அங்கு பணிபுரியும் அனைவரும் அவரை ஒரு முதலாளியாக, அலுவலக அதிகாரி எனப் பார்க்காமல், தமது தகப்பன் போல, ஏதோ தலைவன், மன்னன் எனும் நிலையில் வைத்துப் பார்ப்பது புரிந்தது!
அலுவலகம் தொடங்கும் பொழுதும், உணவு வேளையிலும், ஏன் மாலை யிலும் கூட அவர்களிடம் உற்சாகம் கொப்பளித்தது! நம்மைக் காக்க ஒருவன் இருக்கிறான் எனும் பாதுகாப்பான எண்ணமே அதற்குக் காரணம்!
தனி மனிதனுக்கு அடையாளம் அவனது குணம் தானேங்க? அது போலவே பெரிய வர்த்தக நிறுவனங்களும், அரசாங்க அலுவலகங்களும், சிறிய கடைகளுக்கும் கூட சில தனித் தன்மைகள், குணாதிசயங்கள் அமைந்து விடுகின்றன!
இந்தக் கடையில் விலை அதிகமாக இருக்கும், அந்த அலுவலகத்தில் பணமில்லாமல் வேலை நடக்காது, நம்ம பேட்டை பல்பொருள் அங்காடியில் கிடைக்காததே இல்லை என்றெல்லாம் சொல்கிறோமே!
சிறந்த தலைவர்களின் தலையாய 10 குணங்களைப் பட்டியலிடும் போர்ப்ஸ்(Forbes) முதலாவதாய்ச் சொல்வது நேர்மையை! அதாவது அவரது அடிப்படைக் கொள்கைகளை, கோட்பாடுகளை!
‘பதவி என்பது எவருக்கும் அதிகாரத்தையோ உரிமைகளையோ அளிப்பதில்லை, அது பொறுப்புகளைத்தான் கூட்டுகிறது' என்பார் மேலாண்மை குரு பீட்டர் டிரக்கர்!
நீங்கள் தலைமை ஏற்று நடத்தும் கிளையை, துறையை, கல்லூரியை, நிறுவனத்தை உங்கள் நாடு போல பராமரித்துக் கொள்ளுங்கள்! அங்குள்ள பணியாளர்கள் தங்களைக் காப்பதற்கும், முன்னேற்றுவதற்கும் நீங்கள் இருக்கின்றீர்கள் என நம்பிப் பணியாற்றுவது உறுதி!
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன. அது போல் மக்கள் அனைவரும் அரசனுடைய நெறி முறையை நம்பி வாழ்கின்றனர் என்கிறார் வள்ளுவர்.
- somaiah.veerappan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT