Published : 22 Aug 2016 11:49 AM
Last Updated : 22 Aug 2016 11:49 AM
அமெரிக்காவைச் சேர்ந்த யுஎம் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்தியச் சந்தையில் பிரீமியம் மோட்டார் சைக்கிளை விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது.
ஃபுளோரிடாவைத் தலைமையிட மாகக் கொண்டு செயல்படும் யுஎம் இண் டர்நேஷனல் நிறுவனம் 300 சிசி திறன் கொண்ட மோட்டார் சைக்கிளை இந்தி யாவில் விற்பனைக்கு கொண்டுவந் துள்ளது. ``ரெனகேட் கமாண்டோ’’ மற் றும் ``ரெனகேட் ஸ்போர்ட்ஸ்’’ என இரண்டு மாடல் மோட்டார் சைக்கிள் கள் முதல் கட்டமாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் டெல்லி விற்பனையக விலை முறையே ரூ.1.49 லட்சம் மற்றும் ரூ. 1.59 லட்சமாகும்.
ஏற்கெனவே 300 சிசி பிரிவில் இந்தியாவில் பன்னெடுங்காலமாக கோலோச்சி வரும் ஐஷர் மோட்டார்ஸின் ``ராயல் என்பீல்டு’’ என்றும் புல்லட் என்றும் பெருமையாக அழைக்கப்படும் மோட்டார் சைக்கிளுக்கு போட்டியாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிறுவனத் தயாரிப்புகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. அப்போதே பார்வையாளர்கள் பலரது கவனத்தையும் இந்த மோட்டார் சைக்கிள்கள் வெகுவாகக் கவர்ந்தன.
முதல் கட்டமாக 3 ஆயிரம் மோட்டார் சைக்கிளை டெலிவரி செய்யத் திட்டமிட்டுள்ளதாக யுஎம் மோட்டார்ஸ் இந்தியாவின் இயக்குநர் ராஜீவ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்திருந்த போதே முன்பதிவை இந்நிறுவனம் வரவேற்றிருந்தது. இதுவரை எத்தனை பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்ற முழு விவரம் வெளியிடவில்லை. இருப்பினும் முதல் கட்டமாக 3 ஆயிரம் மோட்டார் சைக்கிள் டெலிவரி செய்யப்பட உள்ளன.
அமெரிக்காவில் உருவான இந்த பிராண்ட்தான் முதலில் டிரேட் மார்க் மற்றும் காப்புரிமை பெற்ற மோட்டார் சைக்கிளாகும். ஆக்டேவியோ விலேகாஸ் லானோ தொழில் குடும்பத்திலிருந்து உருவானதாகும். 1951-ல் உருவான இக்குடும்பத் தொழில் இன்று மூன்று தலைமுறைகளைக் கடந்து வெற்றிகரமான நிறுவனமாக சர்வதேச அளவில் 30 நாடுகளில் பிரபலமான தயாரிப்பாகத் திகழ்கிறது.
2005-ம் ஆண்டு கொரியாவில் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து ஸ்டிரீட் பைக்ஸ் எனப்படும் 650 சிசி திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை இந்நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனம் தற்போது 49 சிசி திறன் கொண்ட ஸ்கூட்டரிலிருந்து 650 சிசி திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் வரை தயாரிக்கிறது.
2014-ம் ஆண்டு இந்தியாவில் டெல்லியைச் சேர்ந்த லோஹியா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் இணைந்து வாகனங்களைத் தயாரிக்க முடிவு செய்தது. இரு நிறுவனங்களும் 50:50 என்ற கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளன. இதன்படி இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள காஷிபூர் ஆலையில் மோட்டார் சைக்கிளைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. தொழில்நுட்பங்களை அளிப்பது தவிர 100 கோடி ரூபாயும் யுஎம் மோட்டார்ஸ் முதலீடு செய்துள்ளது. இந்த ஆலை ஆண்டுக்கு 50 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும்.
இந்தியா முழுவதும் 50 டீலர்களை நியமிக்க முடிவு செய்து இதுவரை 37 டீலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு தீபாவளிக்கு நிறுவனத்தின் கமாண்டோ கிளாஸிக் மோட்டார் சைக்கிள் அறிமுகமாகும். இதன் விலை ரூ. 1.79 லட்சமாக இருக்கும் என்று மிஸ்ரா தெரிவித்தார்.
இந்த நிதி ஆண்டில் 2 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் ஒன்று 200 சிசி திறன் கொண்டதாகவும் மற்றொன்று 400 சிசி திறன் கொண்டதாகவும் இருக்கும்.
30 சதவீத உள்ளூர் பாகங்களோடு இப்போது ரெனகேட் இந்தியச் சந்தைக்கு வருகிறது. விரைவிலேயே 100 சதவீதமும் உள்நாட்டிலேயே தயாரிக்கும் வகையில் திட்டமிட்டுள்ளதாக மிஸ்ரா தெரிவித்தார்.
யுஎம் மோட்டார் சைக்கிள்கள் ஒற்றை சிலிண்டர் 4 வால்வுகளுடன் வெளிவருகிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 135 கி.மீ. ஆகும். என்பீல்டு மோட்டார் சைக்கிளை விட எடை குறைவாக அதாவது 172 கி.கி. எடையில் இவை வெளி வருகின்றன.
இரு சக்கர சந்தையில் இதுவரை ஜப்பான் நிறுவனங்களான சுசூகி, ஹோண்டா, யமஹா ஆகியன ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
இப்போது அமெரிக்காவைச் சேர்ந்த யுஎம் இண்டர்நேஷனல் இந்தியாவுக்கு வருகிறது.
ஜெர்மனியைச் சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் டிவிஎஸ் நிறுவனத்துடன் சேர்ந்து தனது மோட்டார் சைக்கிளை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது.
வெளிநாட்டு நிறுவன மோட்டார் சைக்கிளின் வரவு பிற நிறுவனங்களுக்குப் போட்டியாக இருந்தாலும், பைக் பிரியர்களுக்குக் கொண்டாட்டம்தான்.
தொடர்புக்கு: ramesh.m@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT