Published : 25 Jul 2016 12:22 PM
Last Updated : 25 Jul 2016 12:22 PM

பெண்களுக்கு முன்னுரிமை தரும் டாடா மோட்டார்ஸ்

பொதுவாக ஆட்டோமொபைல் நிறுவனங்களில் குறிப்பாக இயந்திரங்கள் அசெம்பிளி பகுதியில் (ஷாப் ஃபுளோர்) பெண்கள் அதிகம் பணிபுரிவதில்லை. மூன்று ஷிப்டுகள் இயங்கும், அதிக எடையுள்ள கன ரக இயந்திரங்கள், உதிரி பாகங்களைக் கையாள வேண்டும் என்பன போன்ற பல கட்டுப்பாடு காரணமாக பெண்கள் இப்பகுதியில் அதிகம் பணியமர்த்தப்படுவதில்லை.

ஆனால் இப்போது இந்த நிலையை படிப்படியாக மாற்ற உள்ளது டாடா மோட்டார்ஸ்.

பெரும்பாலும் ஐடிஐ முடித்தவர்களைத் தேர்வு செய்வதற்குப் பதிலாக தங்களது பயிற்சி மையங்களில் பயிற்சி முடித்த பெண்களை இப்பணிகளில் நியமிக்க முடிவு செய்துள்ளது டாடா மோட்டார்ஸ்.

கார் தயாரிப்பு நிறுவனங்களில் மொத்தமாக ஷாப் ஃபுளோரில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை 5 சதவீத அளவுக்கு மட்டுமே உள்ளது.

டாடா மோட்டார்ஸில் மொத்தம் 60 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் ஷாப் ஃபுளோரில் பணி புரியும் பெண்களின் எண்ணிக்கை வெறும் 3 சதவீதம் மட்டுமே. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 20 சதவீதமாக உயர்த்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

பொதுவாக அசெம்பிளி பிரிவில் அதிக எடையுள்ள பொருள்களைக் கையாள வேண்டியிருக்கும் என்ற அபிப்ராயம் நிலவுகிறது. பெண்கள் அதிக எண்ணிக்கை யில் தொழில்நுட்ப படிப்பில் சேராததற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் இப்போது பெரும்பாலும் தானியங்கி முறைகள்தான் உள்ளன. ரோபோக்களின் புழக்கமும் வந்துவிட்டது. இதனால் அதிக எடைகளைக் கையாளவேண்டியிருக்கும் என்பது தேவையற்றதாகிவிட்டது. இதைக் கருத்தில் கொண்டே பெண்களை அதிகம் இத்தகைய பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸின் மனிதவள பிரிவின் தலைவர் கஜேந்திர சந்தேல் தெரிவித்தார்.

ஆள் தேர்வு

பொதுவாக இதுபோன்ற பணிகளுக்கு தேர்வு செய்வதற்கு ஐடிஐ முடித்த மாணவர்களைத் தேர்வு செய்வது வழக்கம். ஆனால் அதிலும் புதிய நடைமுறையை டாடா மோட்டார்ஸ் கடைப்பிடிக்க உள்ளது. அதாவது கிராமப்பகுதிகளில் எஸ்எஸ்எல்சி (10-வது) மற்றும் பிளஸ் 2 படித்து முடித்த பெண்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளது.

தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள கிராமங்களிலிருந்து மாணவிகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு ்பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளதாக சந்தேல் தெரிவித்தார். இதற்காக ஆட்டோமோடிவ் திறன் மேம்பாட்டுக் கவுன்சிலுடன் (ஏஐஎஸ்டிசி) டாடா மோட்டார்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.

மேலும் பெண்கள் தொழிற்சாலைகளில் இரவுப் பணிகளில் பணிபுரிய வசதியாக மாநில அரசுகள் நிறுவன சட்டங்களை திருத்துமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதுவும் தங்கள் ஆலைகளில் பெண்களை அதிக எண்ணிக்கையில் ஈடுபடுத்துவதற்கு வழி வகுக்கும் என்று சந்தேல் தெரிவித்தார்.

இப்போதுள்ள தொழிலாளர் சட்டத்தின்படி பெண்கள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையான பணிகளில் மட்டுமே ஈடுபடுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

டாடா மோட்டார்ஸில் முதல் ஷிப்ட் காலை 5.30 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும். பொது ஷிப்ட் காலை 9மணிக்குத் தொடங்கி மாலை 5.30 மணி வரையிலும், மூன்றாவது ஷிப்ட் பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி இரவு 11.30 மணி வரையிலும் நீடிக்கும்.

மாநில அரசுகள் தங்கள் தொழிலாளர் சட்டங்களை திருத்தும்பட்சத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் இதுபோல தங்கள் ஆலைகளில் பெண்களை அதிக எண்ணிக்கையில் பணியில் அமர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x